தமிழர் தலைவர் கி.வீரமணி
கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய நேரத்தில், அதற்குத் தலைப்பு கொடுத்தது _ உங்களுக்கெல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் _ ‘‘நெஞ்சுக்கு நீதி’’ என்ற தலைப்பைக் கொடுத்தார்.
நீதியரசர்கள் மற்றவர்களுக்கு நீதி சொல்வார்கள்; வழக்கு என்று வரும்பொழுது நீதி சொல்வார்கள். ஆனால், கலைஞர் அவர்களைப் பொருத்தவரையில், அவர்களுடைய நெஞ்சுக்கு நீதி என்பது இருக்கிறதே, அது எப்படிப்பட்ட உணர்வோடு இருக்கக்கூடிய செய்தி என்பதை தெரிந்து கொள்ள சுருக்கமாக அவரையே பேச விடுவோம்.
திரைப்படங்கள், கலைத்துறையை அவர்கள் தன்னுடைய வயப்படுத்தி வைத்திருந்தார்கள். அதன்மூலமாக, அந்தத் துறை எங்கேயோ போய்க்கொண்டிருந்ததை _ திருப்பிக் காட்டினார்கள் _ திருத்தப்பாடு செய்தார்கள் _ அண்ணா வழியிலே அயராது அதிலும் அவர்கள் உழைத்தார்கள்.
அந்த வகையில், அவர் ஏற்படுத்திய பெருமை இருக்கிறதே _ இன்னுங்கேட்டால், அண்ணா அவர்கள்கூட திரைப்படத் துறைக்குப் பின்னாளில் வந்தார் _ கலைஞர் அவர்கள் அதற்கு முன்னாளிலேயே முந்திக்கொண்டார் என்று சொல்கின்ற அளவிற்கு ஒரு பெரிய சரித்திரத்தை உருவாக்கியவர்.
அவருடைய மூத்தப் பிள்ளை முரசொலியும், விடுதலைதான் இன்றைக்கு லட்சிய ஏடுகள். கொள்கைக்காக இருக்கக்கூடிய மூடநம்பிக்கையற்ற, இன்னுங்கேட்டால், சோதிடம், இராசிபலன் இல்லாமல், காசு பலன் பார்க்காமல் நடத்தக்கூடிய ஒரு ஏடாக, அன்றைக்குத் தொடங்கியது _ இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்கிற வாய்ப்பு உண்டு.
நெஞ்சுக்கு நீதி என்கிற புத்தகத்தில் அவர்கள் எழுதியிருக்கின்ற என்னுரையைப் பற்றி நான் சொல்லி அமையவிரும்புகிறேன். நாங்கள் பேசுவது முக்கியமல்ல _ அதேநேரத்தில், இளைஞர்கள், உலகத்தில் இருக்கக்கூடிய இன்றைய தலைமுறையினர், கலைஞர் அவர்களுடைய சிந்தனையை, அவர்கள் மீண்டும் அசைபோட்டு சிந்திக்க வேண்டும் என்பதற்காக, கலைஞர் நெஞ்சுக்கு நீதியில், என்னுரை என்ற தலைப்பில் எழுதியிருக்கின்ற பகுதியை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
‘‘நடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு, ‘‘ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோமா? இனிமேல் நடக்க முடியாது’’ என்று அயர்ந்து போவதற்குப் பதிலாக… ‘‘பரவாயில்லை! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம்தானே!’’ என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றாக வேண்டும்.
அந்த விறுவிறுப்பைப் பெறத்தான் என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்! எனக்கோ, போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
போர் வீரனுக்கு மகிழ்ச்சியே கிடையாதா? ஏன் கிடையாது? கொட்டும் குளிரில், பனிப் பாறைகளில் ஊர்ந்து சென்று பகையைத் தாக்கும்போது சூடாக ஒரு கோப்பைத் தேநீர், அவனும் அருந்துவது உண்டு. அதுவே அவனுக்குப் பெரிய இன்பம்.
மீனைச் சுவைத்துச் சாப்பிடும்பொழுது, அதன் முள் நாவிலே குத்தி விடுவதுண்டு. அதனால், சிறிது ரத்தமும் கசிவதுண்டு. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீன் துண்டுகளைச் சுவைப் போரைப் பார்த்திருக்கிறோம்.
சில பேருக்கு மீனின் முள் தொண்டையிலே அடைத்துக் கொண்டு, அவஸ்தைப்படுவதும் உண்டு.
‘‘உன்னை ஒருவன் இழித்துப் பேசினான்’’ என்ற தன் நண்பனிடம் ஒரு நண்பன் கூறினான். அதைக் கேட்ட அந்த நண்பன் வியப்புற்று, ‘‘அப்படியா! இருக்காதே! என்னை அவன் இழித்துப் பேசியிருக்கமாட்டானே! நான் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லையே! பிறகு எப்படி அவன் என்னை ஏசியிருக்க முடியும்?’’ என்று கேட்டான்.
இந்த உரையாடல் துணுக்கில் இந்த உலகத்தின் படமே தெரிகிறதல்லவா? இத்தகைய உலகில்தான் நமது வாழ்க்கைப் பந்து உருளுகிறது.
அந்தப் பந்தை நாம்தான் உதைத்து விளையாட வேண்டும். யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலாயிருந்தால், அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள்’’ என்கிறார்.
இந்தியாவிலேயே குடிசை மாற்று வாரியத்தை வேறு எந்த மாநிலத்திலேயும் அமைக்காத காலகட்டத்தில், கலைஞர் அவர்கள் அமைத்து, வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். அவர் மட்டும் முதலமைச்சர் பதவியிலேயே தொடர்ந்திருந்தால், குடிசைகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கியிருப்பார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில், ஒரு நாள் காரில் வரும்பொழுது, ஓரிடத்தில் சுவரில், ‘‘கருணாநிதி ஒழிக’’ என்று எழுதியிருந்ததைப் பார்த்தார். மற்றவர்கள் யாராக இருந்தாலும் ஆத்திரப்பட்டு இருப்பார்கள். கலைஞர் அவர்கள், பெரியாரின் குருகுலத்தில் பயின்ற காரணத்தினால் அதைப் பார்த்துவிட்டு, பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, ‘‘பரவாயில்லை நான் வருகிற வழியில் இப்படி எழுதியிருப்பதைப் படித்தேன். நான் கட்டிக் கொடுத்த வீட்டின் சுவற்றில்தானே எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிற பொழுது, எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியும், ஆறுதலும் இருந்தது. கோபம் வரவில்லை’’ என்று சொன்னார்.
பெரியாரின் வாழ்த்து!
மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.
டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார்.
இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறா மையும் வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்த தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுய நலக்காரருடையவும், பழைமை விரும்பி களினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத் தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
– ஈ.வெ.ராமசாமி, 3.6.1972
மேலும் சொல்கிறார், “கல்லிலும், முள்ளிலும், கட்டாந்தரையிலும் அடித்து ‘‘அவுட்’’ ஆகாமல் பந்து கோலுக்குள் நுழைந்திடவேண்டும். கோல் இல்லாமல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி தோல்விகள் இயற்கைதான் எனினும், விடாமுயற்சியும், கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை.
பெரியாரின் பாராட்டு!
அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள அமைச்சரவை தமிழகப் பெருமக்கள் அனைவரது நம்பிக் கைக்குப் பாத்திரமாகும் அளவுக்குக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து வருவதுடன், இப்படிப்பட்ட ஒரு ஆட்சி மாறினால், இனி நம் தமிழர் சமுதாயத்தின் கதி அதோ கதி ஆகிவிடு மென்று துணிந்து சொல்லும் அளவுக்கு மக்கள் நல ஆட்சியாக நடந்து கொண்டிருப் பதுடன் மிகவும் பாராட்டத்தக்க வகையிலும் பணியாற்றி வருகிறது.
‘‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன்
இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்!’’
‘ஓய்வெடுத்துக் கொள்க!’ என்று சில மாற்றுக் கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினர். ‘‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’’ என்று என் கல்லறையின்மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன்.
அந்த உணர்வுகளின் தொகுப்புத்தான் இந்த நூல். இது முழுமையானதல்ல. இன்னும் நிறைய இருக்கிறது, எழுத’’
என்று அந்த என்னுரையில் கலைஞர் அவர்கள் எழுதிவிட்டு, கடைசியாக,
பெற்றெடுத்த தாய் தந்தை
அறிவூட்டிய பெரியார்
ஆளாக்கிய அண்ணா
ஆகியோருக்கு இது காணிக்கை என்று முடிக்கிறார்.
இதை இளைஞர் உலகம் பார்க்கவேண்டும். இதுதான் அவருடைய மரண சாசனத்தினுடைய உயில்.
அவர் ஏதாவது சொத்துக்கு உயில் எழுதி வைத்திருக்கிறாரா என்றால், அசையா சொத்துக்களும் உண்டு _ நான் சில நாள்களுக்கு முன்பு சொன்னதுண்டு.
சில பேர் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது. கணக்குப் பார்க்கட்டும்.
திராவிடர் இயக்கத்தைப் பொறுத்தவரையில், அசையா சொத்துக்களும் ஏராளம் _ அசையும் சொத்துக்களும் ஏராளம்!
அசையா சொத்துக்கள் என்பது வெறும் கட்டடங்கள் அல்ல. அசையா சொத்துக்கள் என்பது அசைக்கப்பட முடியாத லட்சியங்கள், கொள்கைகள், திராவிட இயக்கத்தில். அதை ஒருபோதும் கைப்பற்ற முடியாது.
அதுபோலவே, அசையும் சொத்துக்கள் என்பது எண்ணற்ற உயிரையும் கொடுக்கக்கூடிய, ‘‘என் உயிரினும் இனிய உடன்பிறப்புக்களே!’’ என்று அழைத்தார்களே அப்படிப்பட்ட தோழர்கள்.
எனவே, அவர்களைப் பொறுத்தவரையில், சிறப்பான வகையில் இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். நெஞ்சுக்கு நீதி சொன்னார்கள். இன்றைக்கு நீதியரசர்கள் இங்கே வந்து அதை சிறப்பான வகையில் அவர்கள் வழங்கயிருக்கிறார்கள்.
“ஒருவனை குறை கூறிவிடுவது எளிது. அந்த நாக்கிற்கு இரண்டு கைதட்டல்கள் கிடைக்கும். ஆனால், குறை கூறியவனின் நெஞ்சுக்கு நீதி கிடைக்க வேண்டாமா? நான் நேர்மையாளன் என்று எவனும் மார்தட்டிப் பேசிவிடுவது எளிது. நேர்மைபற்றிய நியதியை அவன் நெஞ்சுக்கு அவனே வழங்கியாக வேண்டும் அல்லவா!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பீல் உண்டு. நெஞ்சிற்கு வழங்கப்பட்ட நீதிக்கு அப்பீல் ஏது?” என்று மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார் கலைஞர் அவர்கள்.
தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய தந்தை பெரியார்!
ஒன்றை சொல்லி என்னுரையை நிறைவு செய்கிறேன்.
எச்சரிக்கிறார் பெரியார்!
“எனது 92ஆவது ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் தேசம், மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவ தில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காண முடிவதில்லை. பொதுவில் பார்த் தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சி தான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும்?
சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், இந்த ஆட்சிக்கு மாற்றம் ஏற்படுமானால் அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான் அதாவது வர்ணா சிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி; உறுதியேயாகும்”.
– தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கையில் (17.9.1970)
தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.ஏ.எஸ். அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெரிய அதிகாரிகள் சென்னையில் அளித்த வரவேற்பு விழாவில், பெரியார் அவர்கள் நன்றி சொல்லும்பொழுது சொன்னார்கள்,
உங்களுடைய உழைப்பினால் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய தகுதிக்கேற்ப வந்திருக்கிறார்கள். ஆனாலும், என்னுடைய கவனமெல்லாம், நூற்றாண்டு தாண்டிய இந்த உயர்நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதிகூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் வரவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கிறது. (அப்பொழுது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்) திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இதை செய்யாவிட்டால், வேறு எந்த ஆட்சியில் இதை செய்ய முடியும்? என்று சொல்லிவிட்டு, எங்களைப் பார்த்து, விடுதலையில் இதை தலையங்கமாகவும் எழுதுங்கள் என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
கலைஞருடைய வேகத்திற்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. அடுத்த நாள், உடனடியாக சட்ட அமைச்சரை அழைத்தார். நல்ல வாய்ப்பாக ஜஸ்டீஸ் கே.வீராசாமி அவர்கள் தலைமை நீதிபதியாக அன்றைய காலகட்டத்தில் இருந்தார்.
உடனடியாக, கடலூர் மாவட்டத்தில் 12 ஆவது வரிசையில் இருந்த மாவட்ட நீதிபதி ஜஸ்டீஸ் வரதராஜன் அவர்களைக் கொண்டு வந்து முதல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை நீதிபதியாக அமர்த்திய பெருமை கலைஞர் அவர்களையே சாரும். இன்றைக்கு நீதிபதிகள் எல்லாம் வந்து கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் செய்கிறார்களே, அந்தப் பெருமை என்றைக்கும் நிலைநாட்டப்பட்ட பெருமையாகும்.
அதுமட்டுமல்ல நண்பர்களே! உச்சநீதிமன்றத்தில் இன்றைக்கும்கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதியாக ஒருவர்கூட இல்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரே ஒரு பெண் நீதிபதியாக இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் இடங்களில், 25 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கிறது. இதில் மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் இருக்கின்றபொழுது, பல ஆண்டுகளுக்கு முன்பு 1972 ஆம் ஆண்டில் கலைஞர் அவர்கள் செய்த மகத்தான புரட்சி இருக்கிறதே, அது சாதாரணமான புரட்சியல்ல.
ஆகவே, நீதித்துறையிலும் புரட்சி செய்து, சமூகநீதியை நீதித்துறைக்கும் சொல்லிக் கொடுத்தவர் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, இன்றைக்குப் படமாகவும், பாடமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிற அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில், நன்றியுணர்வோடு நீதிபதிகள் இங்கே வந்திருப்பது மிகவும் பொருத்தமானது.
அந்த வகையில், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய நினைவேந்தலைப் பதிவு செய்வார்கள் என்று சொல்லி, வந்திருக்கின்ற அனைவரையும் மீண்டும் வரவேற்று _ கலைஞர் அவர்கள் படமாக மட்டுமில்லை _ நம் அனைவருக்கும் பாடமாகத் திகழ்வார்.
கலைஞர் பற்றி அண்ணா
என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடமுண்டு.
நான் கவலையோடு இருக்கிறேன் என்றால், முதன்முதல் கண்டுபிடிக்கக்கூடியவர் கருணாநிதிதான். கோபமாக இருக்கிறேன் என்றால், முதன்முதல் கண்டுபிடிக்கக் கூடியவர் கருணாநிதிதான். நான் கோபமாக இருப்பது தெரியாமல் என்னிடத்திலே ஏதாவது பேசி நான் கோபமாக நாலு வார்த்தை சொன்ன பிறகு அண்ணா கோபமாக இருக்கிறார் என்று சொல்பவர் நாவலர்.
கலைக்கு இருக்கும் ஒரு விசேடம் அது. கவலைப்பட்டு நடிக்கிறானென்றால், மற்றவர்களும் அதை உணர்ந்து அல்லது அந்தக் கணமே அறிந்து மற்றவர்களைக் கவலைப் பட வைப்பதுதான் கலைஞனுடைய திறமை. அதைப் போல என்னுடைய கோபதாபங்களை, என்னுடைய கவலைகளை உடனுக்குடன் நொடிப்பொழுதில் அறிந்து அதை மாற்ற வேண்டும் என்று அக்கறையோடு நல்ல முறையில் துணை புரிவதில் கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்.
அவர் மூலமாக நானும் நாடும் இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறோம். இப்பொழுது செய்திருக்கின்ற காரியங்களைப் போல் பலமடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டியதிருக்கிறது.
(1968இல் அண்ணா ஆற்றிய உரையிலிருந்து)
பெரியார் _ அண்ணா _ கலைஞர் என்று சொன்னால், கலைஞர் என்ற ஒரு வார்த்தை சொன்னாலே, அதில் பெரியாரும் அடக்கம், அண்ணாவும் அடக்கம். அவர்களை விட்டுவிட்டு மறுபடியும் செய்ய முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரே வரியில் தன்னை விமர்சித்துக் கொள்ளக்கூடியவராக இருந்து ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று சொன்னார்.
அந்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு இவை அத்தனையும்தான் இனி எங்கள் வழியாகவும், குறிக்கோளாகவும் இருக்கும் என்று நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகப் புதிய தலைவர் உலகத்திற்கே அறிவித்திருக்கிறார் என்று சொன்னால், இதில் குழப்பவாதிகளுக்கு இடமில்லை.
கொள்கையை வைத்துக் குழப்பலாம் என்று நினைக்கக் கூடியவர்களுக்கு இடமில்லை என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
எனவே,
பெரியார் பாதையில்,
ஈரோட்டுப் பாதையில்,
அண்ணா பாதையில்
காஞ்சிப் பாதையில்,
கலைஞர் பாதையில்
இன்றைக்கு எல்லாம் சென்று கொண்டிருக்கிறது என்றால், அந்தப் பாதை ஒரே பாதை _ சுயமரியாதைப் பாதை; அந்தப் பாதை ஒரே பாதை _ மனிதநேயப் பாதை; அந்தப் பாதை ஒரே பாதை _ சமூகநீதிப் பாதை.
எனவேதான், சமூகநீதியாளர்களாக இங்கே வந்திருக்கின்ற நம்முடைய நீதியரசர்கள் தங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துவார்கள் என்று கூறி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.
கலைஞர் வாழ்க என்று சொன்னால், அவர் தனி மனிதரல்ல _ தத்துவம். அதுதான் மிக முக்கியம்.
எனவே, அந்தத் தத்துவம் எவ்வளவு காலத்திற்கு சுயமரியாதை உணர்வு இருக்கிறதோ, அவ்வளவு காலத்திற்கும் வாழ்ந்துதான் இருக்கும் என்று சொல்வது மிக முக்கியமானது.