எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்! அண்ணல் அம்பேத்கர்

ஜூன் 01-15 2019

நேயன்

 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் சென்றார் பெரியார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாக்களுக்காக அவர் அழைக்கப்பட்டு இருந்தார். தாராவியில் 1.11.1970 மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டது. பெரியாருடன் கி.வீரமணி, புலவர் தொல்காப்பியனார் ஆகியோர் திறந்த காரில் அமர்ந்து சென்றார்கள். மாதுங்கா என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. 100க்கு 97 பேர் கீழ் ஜாதி சூத்திரர்களாகவும் பறையர்களாகவும் இருக்க 100க்கு 3 பேர் பார்ப்பனராக பிராமணராக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை விளக்கி ஒன்றரை மணி நேரம் பெரியார் பேசினார்.

                                                     (‘விடுதலை’ 8.11.1970)

மறுநாள் 2.11.1970 அன்று பம்பாயில் பெரியார் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பம்பாய் மாநகராட்சி முன்னாள் மேயரும், டாக்டர் அம்பேத்கரின் சீடரும் சித்தார்த்தா சட்டக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் பி.டி.பொராலே பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேச்சு:

“நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கும் இந்தியாவின் தலைசிறந்த சமுதாயப் புரட்சித் தலைவரான பழுத்த பழமாக உள்ள பெரியார் அவர்களது உருவப் படத்தினைத் திறந்து வைப்பதற்கும் மிகவும் பெருமைப்படுகிறேன். எனக்குக் கிட்டிய பெரும் பேறாக இதனை எண்ணி மகிழ்கிறேன்… பெரியார் அவர்கள் இந்த 92 வயதிலும் இப்படிப்பட்ட அழுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு மாபெரும் தலைவராகக் காட்சி அளிக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியார் அவர்களை மிகவும் மதித்தார்கள். போற்றினார்கள். டாக்டருக்கு மூன்று பேர் வழிகாட்டியாவார்கள். புத்தர், மகாத்மா ஜோதிபா ஃபூலே, ராமானந்த கபீர் ஆகியோர்.  டாக்டர் மல்லசேகரா அவர்களை நான் இலங்கையில் சந்தித்தபோது அவர்கள், பெரியார் அவர்களைப் பற்றி என்னிடம் நிறையச் சொன்னார்கள். வைக்கத்தில் தெருக்களில் நடக்க உரிமை வாங்கித் தந்த போராட்டத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் நூற்றாண்டுக்கு மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டும். வாழ்வார் நமக்கு வழிகாட்டுவார் என்ற நல்ல நம்பிக்கை உண்டு. கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டிற்கு பெருமை தருவதல்ல. அத்தகைய நிகழ்ச்சிகள் அங்கு மட்டுமல்ல இந்தியாவில் வேற எந்தப் பகுதியிலும் நடைபெறாத அளவுக்கு நடைபெறும் தி.மு.க., ஆட்சி, மேலும் அதனை முழு மூச்சுடன் சமுதாய புரட்சிக்குத் திருப்ப வேண்டும். இத்தகைய புரட்சி இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிகாட்ட வேண்டும். தங்களைப் போன்றவர்கள் அடிக்கடி இங்கு எங்களுக்கு வந்து வழிகாட்ட வேண்டும்.’’

(‘விடுதலை’ 9.11.1970)

என்று பேசினார் பி.டி.பொராலே. இவரது ஆங்கில உரையை ஆசிரியர் கி.வீரமணி தமிழில் மொழிபெயர்த்தார்.

5.11.1970 அன்று பூனா கிர்க்கியில் நடந்த விழாவில் தாழ்த்தப்பட்டோர் நல விடுதலை இயக்கத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு தளபதியாக இருந்து உழைத்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.என்.ராஜ்போஜ் கலந்து கொண்டார். அவரே விழாத் தலைமை. பெரியாரை சந்திப்பதில் பெருமை கொள்வதாக ராஜ்போஜ் சொன்னார்.

1954ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த புத்தர் விழாவுக்கு ராஜ்போஜ் வந்திருந்தார். இதில் பேசும்போது…

“ரகுபதி ராகவ ராஜா ராம்

பதீத்த பாவன சீத்தாராம்

டாட்டா பிர்லா பரிமாஹே பகவன்’’

என்று பேசினார் ராஜ்போஜ்.

இதனை 1970ஆம் ஆண்டு தன்னுடைய 92 வயதில் நினைவூட்டி அன்று பேசினார் பெரியார். இது ராஜ்போஜ்க்கு ஆச்சயர்மாக இருந்தது. இக்கூட்டத்தின் இறுதியாகப் பேசிய ராஜ்போஜ், 14 ஆண்டுகளுக்கு முன் நான் பேசியதை மறக்காமல் 92 வயதில் பெரியார் சொல்கிறார். எவ்வளவு மகத்தான நினைவு ஆற்றல் என்று வியந்தார்.

(‘விடுதலை’ 10.11.1970)

“தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களான தீண்டத்தகாதவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. மேல் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் இவர்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் கவலைப்பட்டதே இல்லை. இதற்கு மாறாக தீண்டத்தகாதவர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட பொதுக் கிணறுகளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளின் வழியாகக் கடந்து செல்லவும்கூட அவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட அந்த மக்களை விடுவிக்கவும், இந்து மத ஆச்சாரத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவித்துக் காப்பாற்றவும் திராவிடர் கழகம் முன்வந்தது.’’

(‘விடுதலை’ 10.11.1970)

என்று ராஜ்போஜ் பேசினார். அதற்கு முந்தைய நாள் 4.11.1970 அன்று ஜோதிபா ஃபூலே உருவாக்கிய தொழில் நுணுக்கப் பள்ளியில் பெரியாருக்கு வரவேற்பு தரப்பட்டது. ஃபூலே சிலைக்கு பெரியார் மரியாதை செலுத்தினார். அந்நிறுவன இயக்குநர் கெல்சிகர் பேசும்போது,

“இது தந்தை பெரியாருக்கு தாய்வீடு, சொந்த வீடு போன்றது. எப்போதும் அவர்கள் இங்கு வரவேண்டும். உங்கள் வருகையால் நாங்கள் உளப்பூர்வமாக மகிழ்ச்சிக் கடலில் பெருமிதத்தில் ஆழ்ந்தோம்’’ என்று குறிப்பிட்டார். இந்த விழாவிலும் டாக்டர் பொராலே கலந்துகொண்டு பேசினார். “உங்களது கொள்கைகள்தான் எங்களது கொள்கைகள்’’ என்றார்.

(‘விடுதலை’ 11.11.1970)

இந்த அளவுக்கு தமிழகத் தலித் தலைவர்கள் யாரும் பெரியாருடன் உடன்பட முடியவில்லை, முடியாது. இதை வைத்து அம்பேத்கரை மதித்தார். மற்றவர்களை மதிக்கவில்லை என்று சொல்ல முடியாது.

பெரியாரை முற்றிலும் உணர்ந்தவர் அம்பேத்கர்.

பா- ர்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மற்றவர்களிடமிருந்து பார்த்து படித்துக் கொள்ளுங்கள்… தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள். (‘குடிஅரசு’ 30.9.1944) என்று சென்னையில் அறிவுறுத்தியவர் அம்பேத்கர்.

இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

தந்தை பெரியாரிடம் தாழ்த்தப்பட்டோர் நம்பிக்கையும், மதிப்பும் வைத்து அவரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் அறிவுறுத்தும்போது, பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எவ்வளவு உழைத்திருப்பார், தாழ்த்தப்பட்டோர் இழிவு நீங்கி சமத்துவம் பெற எவ்வளவு அக்கறை கொண்டிருப்பார் என்பதை எவரும் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, தாழ்த்தப்பட்டோருக்கு பெரியார் ஒன்றும் செய்யவில்லையென்ற அவதூறு அசல் பித்தலாட்டப் பிரச்சாரம் என்பது இப்போது உறுதியாகிறது அல்லவா?

                                                                  (தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *