இந்தத் தேர்தல் தந்த பாடம்
மஞ்சை வசந்தன்
இது தேர்தல் அல்ல தலைமுறைப் போர் என்பதை தேர்தல் கூட்டணிகள் அமைக்கப்பட்ட தொடக்க நிலையிலேயே நாம் உணர்த்தினோம்.
குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், டில்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பதில் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைப் பெறும் வகையில், மதச்சார்பற்ற சமூக நீதியில் பற்றுள்ள கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை விட்டு மதவாத சக்திகளை வீழ்த்தும் ஒரே நோக்கில் ஒருங்கிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி, இராகுல் கலந்துபேசி மூவரின் கட்சிகளும் கூட்டணி அமைத்து 80 இடங்களை வெல்ல வேண்டும்; வெல்ல முடியும்; வெல்ல வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தினோம். ஆனால், சுயநல சுய கவுரவ முனைப்பில் தலைவர்கள் அதில் கவனம் செலுத்தி வலுவான அணி அமைக்க முயற்சிக்கவில்லை. பி.ஜே.பி வெற்றிக்கும், மதச்சார்பற்ற கட்சிகளின் தோல்விக்கும் இதுவே முதல் காரணம், முதன்மைக் காரணமாகும்.
பி.ஜே.பி. செய்ததும் மற்றவர்கள் செய்யத் தவறியதும்!
ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தலில், மோடி_அமித்ஷா இருவரும் அடிக்கடி கலந்து பேசி, வியூகங்கள் அமைத்து, இடம், சூழலுக்கு ஏற்ப அவற்றைச் செயல்படுத்தினர்.
தேர்தல் வந்தவுடன் அவர்கள் களம் இறங்கவில்லை. தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே, ஒவ்வொரு மாநிலத்தையும் கூறாய்வு செய்து, சாதக பாதகங்களை அலசி ஆய்ந்து, வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு முடிவு செய்து அப்போதிருந்தே அதைச் செயல்படுத்தவும் தொடங்கினர்.
தங்களை வளப்படுத்தும் வளர்க்கும் அதே நேரத்தில், எதிரியை சிதைத்து பலவீனப்படுத்தும் வேலையையும் தந்திரமாக சூழ்ச்சியாகச் செய்தனர்.
அது மட்டுமில்லாமல், ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் களப்பணிகளை _ கள்ளப் பணிகளை _ தொடர்ந்து செய்து மக்களைத் தயார்படுத்தி வந்தனர்.
மக்களிடமிருக்கும் கடவுள் நம்பிக்கையை மதவெறியாக மாற்றுவதன் மூலம் வாக்கு வங்கியை உருவாக்கினர். அதற்கு ஆங்காங்கே மத மோதல்களையும் உருவாக்கி மக்களுக்கு வெறியேற்றினர்.
ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பன அமைப்பு என்றாலும், ஆரிய பார்ப்பனர்கள் தாங்கள் பதவிக்கு வந்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்று எப்போதும் ஆவல் கொள்வதில்லை. மோடி போன்ற ஆரிய பார்ப்பனர் அல்லாதவர்களை தங்கள் கையாளாக உருவாக்கி அவர்களைக் கொண்டே தங்கள் திட்டங்களை, நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அவர்களுக்கு இலக்கே முக்கியம். அவர்களின் சனாதனத்தை நடைமுறைப்படுத்தி அதன்வழி தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி, வருண பேதத்தை வலுவாக்குவதிலேயே அவர்கள் குறியாக இருப்பர்.
ஆனால், ஆரிய பார்ப்பனர் அல்லாத மற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள், தான் பிரதமராக வேண்டும் என்பதையே முதன்மைப்படுத்தி அதற்கேற்ப கூட்டணி என்ற முடிவு எடுத்தனர். அம்முடிவுதான் அவர்களுக்கு அவர்கள் பறித்துக்கொண்ட குழியாக அமைந்தது.
செல்வாக்கு அதிகம் இல்லாத தேவ கவுடாகூட பிரதமர் ஆசையில் செயல்பட்டார் என்றால் நம்முடையவர்களின் பலவீனம் பளிச்சென்று தெரிகிறது அல்லவா?
மாயாவதி, மம்தா, சந்திரபாபு நாயுடு என்று ஒவ்வொருவரும் பிரதமர் பதவியை கருத்தில்கொண்டு காய் நகர்த்தியதால்தான், பொது எதிரியை வீழ்த்துவதற்கான வலுவான அணியை அவர்களால் அமைக்க இயலாமல் போனது.
உ.பி.யும் டில்லியும்
உத்தரபிரதேசத்தில் மாயாவதி_அகிலேஷ் இருக்கும் காங்கிரஸ் கட்சியையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்திருந்தால் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 80 இடங்களை இவர்கள் பெற்று பி.ஜே.பி.க்கு ஒரு இடங்கூட கிடைக்காமல் செய்திருக்கலாம்.
டில்லியில் ஆம் ஆத்மி காங்கிரசோடு இணைந்து களம் கண்டிருந்தால் 7 இடங்களையும் வென்றிருக்கலாம்.
அதேபோல் பீகாரில் நிதிஷ்குமார் பிஜேபி.யின் கையாளாய் செயல்படாது, மதற்சார்பற்ற தனது கொள்கையில் உறுதியுடன் நின்றிருந்தால் பீகாரில் பிஜேபி.யை வீழ்த்தியிருக்கலாம்.
மே.வங்கத்திலும் தங்களுக்குள் இருக்கும் வெறுப்பு அரசியலை மறந்து, மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால் பிஜேபி.யை அறவே வீழ்த்தியிருக்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் உள்ளூர் அரசியலைக் கலந்தது மிகப் பெரிய தப்பு. சட்டமன்றத் தேர்தலில் அதை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி.யை முதன்மை எதிரியாகக் கொண்டு, தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு இடப் பகிர்வினை செய்து கொண்டிருந்தால் எல்லோருக்கும் பயன் கிட்டியிருக்கும்.
பா-ஜக எதிர்ப்பைவிட காங்கிரஸ் எதிர்ப்பும், கம்யூனிஸ்ட் வெறுப்பும் முக்கியமல்ல என்று மம்தா புரிந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
வெற்றி மட்டுமே இலக்கு என்று கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அமைத்த கூட்டணியைப் பார்த்தால் அதில் கொள்கை ஏது?
நிதிஷ்குமார், இராம்விலாஸ் பாஸ்வான் கொள்கையும், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் ஒன்றா?
நேர் எதிர் கொள்கை உள்ளவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை பாஜ.க. சந்திக்கும்போது மற்றவர்கள் ஏன் அதைச் செய்யத் தவற வேண்டும்?
கூட்டணி என்பது கூட்டல் கணக்குதானே? எதிரியை வீழ்த்த எதிரிக்கு எதிரி நண்பன் எனக் கொள்வது தானே சரியான முடிவாக இருக்க முடியும்? மதச்சார்பற்ற கொள்கை உடைய கட்சிகள் என்ற ஒரே அடிப்படையில்தான் பி.ஜே.பி எதிராகக் கூட்டணி அமைக்கப்பட வேண்டும். இதுதான் முதன்மைக் கொள்கை. அதனடிப்படையில் கூட்டணி காண்பதுதான் சரியான அணுகுமுறை. அந்தந்த மாநிலத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் எதிர் எதிராய் மோதினாலும், நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்வது ஒன்றே பி.ஜே.பி.யை வீழ்த்துவதற்கான சரியான வியூகமாகும்!
கம்யூனிஸ்ட்டுகளைக் களைந்தெரிய வேண்டும் என்று மம்தா முயற்சிக்கிறார். அது பி.ஜே.பி வெற்றிபெற வழிவகுத்துவிட்டது.
கம்யூனிஸ்ட்டுகளா? பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.காரர்களா? என்றால் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தானே முதல் எதிரி? கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிட்டு, பி.ஜே.பி.யை வளர விடுவது திரிணாமுல் காங்கிரஸ் அழிவிற்கு வழிதேடுவதாகாதா? மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காணாமல் போக, திரிணாமுல் காங்கிரசுக்கு இணையாக பி.ஜே.பி வளர்ந்துவிட்டதே! இதற்கு யார் காரணம்?
கம்யூனிஸ்ட்டுகளால் எதிர்ப்பு உண்டு. ஆனால், ஆபத்தும் அழிவும் இருக்காது. ஆனால், பி.ஜே.பி. வளர்ந்தால் ஆபத்தும் அழிவும் கூடவே வளருமே! அதேபோல் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளும் பி.ஜே.பி.யைவிட, திரிணாமுல் காங்கிரசையே கடுமையாக எதிர்த்தார்கள். இது மிகப்பெரிய தப்பு. ஆக, மதச்சார்பற்ற கட்சிகள், உள்ளூர் அரசியலை மனதில் வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் மோதிக் கொண்டதால்தான் பி.ஜே.பி. வெற்றிபெற முடிந்தது. இது மேற்கு வங்கத்துக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருந்தும்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதுதான் முதலில் முக்கியம். அதை விட்டுவிட்டு மாநிலத்தில் மட்டும் அதிகாரத்தைப் பெற முயற்சிப்பது பயன் தராது.
மத்தியில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சி என்பதே மாநில நலன்களுக்கு உகந்த தீர்வு. இந்த முறை அதற்கான வாய்ப்பு வலிய வந்தும் மாநிலக் கட்சிகள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால், தோற்கடிக்கப்பட வேண்டிய பி.ஜே.பி. கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்த அவலம் ஏற்பட்டுவிட்டது. இது பி.ஜே.பி.யின் வெற்றியல்ல; மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகளின் தப்பால் வந்த விளைவு.
தமிழகத்தில் மட்டும் தாமரை மலராதது ஏன்?
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல, உலகமே ஒரு கேள்வியை தற்போது கேட்கிறது. தமிழகத்தில் மட்டும் பி.ஜே.பி.க்கு ஒரு இடங்கூட கிடைக்கவில்லையே ஏன்? இதுவே கேள்வி. ஒரே பதில் பெரியார்! பெரியார் விதைத்த கொள்கை; பெரியார் செய்த புரட்சி! பி.ஜே.பி.யின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எசின் அடிப்படைக் கொள்கை வர்ணாஸ்ர தர்மம், மனுதர்மம் இவற்றை நிலைநாட்டல், கல்வி, வேலைவாய்ப்பு ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டுமே! சமஸ்கிருதமே ஆட்சி மொழி! இடஒதுக்கீடு கூடாது. ஒரே கடவுள், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்.
ஒரே கடவுள் _ இராமன்
ஒரே மொழி _ சமஸ்கிருதம்
ஒரே மதம் _ இந்து மதம்.
ஒரே கலாச்சாரம் _ ஆரிய கலாச்சாரம்.
இதை ஏற்பவர்கள் இந்தியாவில் இருக்கலாம். ஏற்காதவர்கள் நாட்டைவிட்டு வேறியேற வேண்டும். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, எண்ணும் எண்ணம் எல்லாம் அவர்கள் சொல்வதாகத்தான் இருக்க வேண்டும், தனிப்பட்ட மனிதனின் விருப்பம் அதில் கூடாது.
இப்படிப்பட்ட பாசிச வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்ட அதே 1925ஆம் ஆண்டுதான் சுயமரியாதை இயக்கமும் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைக்கு நேர் எதிரான கொள்கைகளை உடையதாகிய சுயமரியாதை இயக்கம் பெரியாரால் உருவாக்கப்பட்டது.
மதம், ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிறப்பால் வரும் பேதம் ஒழிப்பு, ஆதிக்க ஒழிப்பு, உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதம் ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, சமஉரிமை, சமவாய்ப்பு, சுயமரியாதை போன்ற மனிதநேயக் கொள்கைகளைக் கொண்டதாய் சுயமரியாதை இயக்கம் உருவாக்கப்பட்டது.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கும்போது தமிழ்நாடு வட மாநிலங்களைவிட மிக மோசமாக இருந்தது. ஜாதிவெறிக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்குகள், கல்லாமை, அறியாமை, விழிப்பின்மை, ஆரிய பார்ப்பனர்களை வணங்கி கைகட்டி நிற்கும் இழிவுநிலை, மதம், கடவுள் சார்ந்த கண்மூடி வழக்கங்கள் எல்லாம் இருந்தன.
தந்தை பெரியார் தனியொருவராகப் புறப்பட்டு, இந்த இழிநிலைக்கெல்லாம் காரணம், கடவுள், மதம், சாஸ்திரம், மூடநம்பிக்கைகள், ஆரிய பார்ப்பன ஆதிக்கம் இவைதான் என்பதைத் துல்லியமாய் அறிந்து அவற்றை எதிர்த்தார். அதிலுள்ள மனித தர்மத்திற்கு எதிரானவற்றை மக்களிடம் வீதிவீதியாய்ச் சென்று விளக்கினார்.
சாதி ஒழிப்பிற்கும், பெண்ணுரிமைக்கும், மாநாடுகளை நடத்தினார். தன் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய ஏடுகளை நடத்தி, நூல்களை வெளியிட்டார்.
படித்த இளைஞர்கள் முதல் பாமரர்கள் வரை பெரியார் கூறுவது சரிதான் என்று உணர்ந்தனர். ஆரிய பார்ப்பனர்களின் அதர்மங்களை மக்கள் புரிந்துகொண்டனர். அதன் விளைவாய் ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்தது. பார்ப்பன பித்தலாட்டங்கள், மோசடிகள், சூழ்ச்சிகள் வெட்டவெளிச்சமாக்கப்பட்டன.
இந்தித் திணிப்பு, ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு தமிழகம் எங்கும் தீவிரமடைந்தது.
மக்கள் எழுச்சி அரசியலில் எதிரொலித்தது. இராஜாஜி என்ற ஆரிய பார்ப்பனர் அகற்றப்பட்டு காமராசர் என்ற தமிழர் முதல்வராகி, கல்வி வாய்ப்புகளை கடைகோடி மக்களுக்கு அளித்தார்.
அரசியல் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்பட்டு பெரியார் புரட்சியால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. சமஸ்கிருத ஆதிக்கம் தகர்த்து அகற்றப்பட்டது. குலக்கல்வி முறை குழிதோண்டி புதைக்கப்பட்டது.
பெரியார் வழிவந்த அண்ணா நேரடியாக அரசியலில் பங்குகொண்டு பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சித் தொடங்கினார். தி.மு.கழகம் உருவாக்கப்பட்டது.
1967இல் தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் என்று பல புரட்சிகளை அண்ணா செய்தார். அவருக்குப் பின் கலைஞர் அவர்கள் சமூகநீதி சார்ந்த எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டுவந்து அடித்தட்டு மக்களை உயர்த்தினார்.
கடவுள் நம்பிக்கை உடையவர்களாய் தமிழக மக்கள் இருப்பினும், மதவெறியை அவர்கள் ஏற்பதில்லை. கடவுள் சார்ந்த மோசடிகளையும் ஏற்பதில்லை. கடவுளைக் காட்டி, சாஸ்திரங்களைக் காட்டி ஆரிய பார்ப்பனர்கள் செய்த மோசடிகளை, பித்தலாட்டங்களை மக்கள் வெறுத்தனர். ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரான உணர்வு தமிழக மக்கள் மத்தியில் ஆழமாய் வேர்விட்டது.
1967இல் ஆட்சிக்கு வந்த திராவிடம் இன்றுவரை அசைக்க முடியாத வலுக்கோட்டையாக நிலைத்து நிற்கிறது. அதன் வெளிப்பாடுதான் பா-.ஜ.க. என்ற மதவாத பாசிசக் கட்சி தமிழகத்தில் படுதோல்வியைப் பெற்றது. தமிழகம் இந்தியாவிலே தனித்து நிற்கக் காரணம் பெரியார் கொள்கையைப் பின்பற்றி நிற்பதுதான்.
பெரியார் கொள்கை என்பது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. அவரின் கொள்கைகளில் அதுவும் ஒன்று. கடவுளை நம்பக்கூடியவர்கள் எல்லோருமே பெரியாரை ஏற்கின்றனர். அவர் கடவுளை மறுப்பதால் அவரை மக்கள் வெறுப்பதில்லை.
காரணம், பெரியார் பேசிய, போராடிய, வெற்றி பெற்ற மனித தர்ம சமத்துவக் கொள்கைகள் ஏராளம். அதன் காரணமாய் பெரியாரை ஏற்கின்றனர்.
பெரியார் கொள்கையை அறிந்து கொண்டவர்கள் எப்போதும் மதவாத சக்திகளுக்கு, பாசிச ஆதிக்கவாதிகளுக்கு எதிராகவே இருப்பர்.
இந்தியா முழுமைக்கும் பெரியார் தேவை!
எனவே, தமிழ்நாட்டோடு நில்லாமல் இந்தியா முழுவதும் பெரியார் கொள்கைகள் உடனடியாகக் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அப்படி சேர்க்கும்போது, கடவுள் மறுப்பை முன்னிலைப்படுத்தாது, மதவெறி, பெண் அடிமைத்தனம், ஆரிய பார்ப்பன ஆதிக்கம், சாதிக் கொடுமைகள், கல்வி தடுக்கப்படுதல் போன்றவற்றையும், இந்து சாஸ்திரங்கள் எப்படி மக்களுக்கு விரோதமானவை என்பதையும் விளக்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொடிய, தீய நோக்கங்களை விரிவாக விளக்கி, அந்த ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை நிலைநாட்ட வந்ததே பி.ஜே.பி என்பதை மக்கள் உணரும்படி செய்வது ஒன்றே, பி.ஜே.பி.யை வீழ்த்தி, அரசியலைவிட்டு அப்புறப்படுத்த சரியான வழி.
பெரியார் நூல்கள் மாநில மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும்!
மேற்கண்ட உண்மைகளை மக்களுக்கு விளக்கும் பெரியார் கொள்கைகள் அடங்கிய சிறு சிறு வெளியீடுகளை அந்தந்த, மாநில மொழிகளில் பெயர்த்து மக்களுக்க மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் உடனடியாகச் செய்ய வேண்டும்.
மாநாடுகள், பொதுக்கூட்டங்கள்
ஒவ்வொரு மாநிலத்திலும் பெரியார், அம்பேத்கரை முன்னிறுத்தி மாநாடுகள், பொதுக் கூட்டங்களை நிறைய நடத்த வேண்டும். அப்போது, பல மாநிலத் தலைவர்களையும் அழைக்க வேண்டும்.
இணைய தளம்
பெரியார் கொள்கைகளை, முகநூல், வாட்ஸ்ஆப், டிவிட்டர் போன்றவற்றின் மூலமும், யூடியூப் மூலமும் அந்தந்த மாநில மொழிகளில் தினந்தோறும் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதை பலரும், பலருக்கும் பகிர வேண்டும். இதை அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
தொடர் களப்பணி கட்டாயம்
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்வதால்தான் மக்களுக்குப் போதிய விழிப்பு ஏற்படாமல், ஜாதி, மத உணர்வுகளுக்கு ஆட்பட்டு வாக்களிக்கின்றனர். அதன் விளைவுதான் பா.ஜ.க. வெற்றி பெறும் நிலை. எனவே, மக்களுக்கு உண்மைகளை உணர்த்தும் பணியை, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றின் உண்மையான நோக்கத்தை மக்களுக்கு தெளிவாக விளக்கி, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தையும், சமஸ்கிருத ஆதிக்கத்தையும், மனுதர்ம ஆட்சியையும் நடைமுறைப்படுத்துவதே அவர்களின் உண்மை இலக்கு, அது நடந்தால் இந்தியாவில் 95% மக்கள் (130 கோடி மக்கள்) வறுமை, இழிவு, ஒடுக்குமுறைக்கு ஆளாகி இன்னலுற நேரிடும் என்பதை அவர்கள் உணரும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழகத்தைப் போலவே, மற்ற மாநிலங்களிலும் பி.ஜே.பி.யை அறவே தோற்கடித்து அடித்தட்டு மக்கள் நலன்சார்ந்த மதச்சார்பற்ற அரசை நாம் அமைக்கலாம்! அனைவரும் முயன்று அமைப்போம்!