தாடியில் நெருப்புப் பிடித்து எரியும்போது அதில் சுருட்டுப் பற்ற வைக்க நெருப்புக் கேட்கும் கொடிய கிராதகர்களைப் போல் நாடு மானமிழந்து, அறிவிழந்து, செல்வமிழந்து, தொழிலிழந்து கொடுங்கோன்மையால் அல்லற்பட்டு நசுங்கிச் சாகக்கிடக்கும் தருவாயில் சற்றாவது ஈவு, இரக்கம், மானம், வெட்கம், மனிதத் தன்மை ஆகியவை இல்லாது சாண் வயிற்றுப் பிழைப்பையும் தமது வாழ்வையுமே பிரதானமாக எண்ணிக்கொண்டு சுயராஜ்யம், இராம ராஜ்யம், தேசியம், புராணம், சமயம், கலைகள், ஆத்திகம் என்கின்ற பெயர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பது ஒரு பிழைப்பா? என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட மக்களையுடைய நாடு மானமுடைய நாடு என்று சொல்லிக்கொள்ள முடியுமா என்றும் கேட்கின்றோம்?
குழந்தையைத் துராக்கிருதப் புணர்ச்சி செய்ய வேண்டாமென்றால், ஒரு கூட்டம் மதம் போச்சு என்கின்றதும், பணத்தைப் பாழாக்காதே, கோயிலை விபசார விடுதி ஆக்காதே என்றால், மற்றொரு கூட்டம் கடவுள் போச்சு என்கின்றதும், பொய்யும் புளுகும் ஜாதி மதத்துவேஷமும் கொண்ட புஸ்தகங்களைப் படியாதே என்றால், மற்றொரு கூட்டம் கலை போச்சு என்கிறதும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு கையாளாக இருக்க வேண்டாமென்றால், இன்னொரு கூட்டம் தேசியம் போச்சுது என்கின்றதும், ஏழைகளைக் காட்டிக் கொடுத்து ஏழைகள் வயிறெரிய வரி வசூலிக்க உள் உளவாயிருந்து – மாதம் 1000, 2000, 5000 ரூபாய் உத்தியோகத்திற்கு ஆசைப்படாதே அதுவும் உன் பிள்ளைகுட்டிகளே கொள்ளை கொள்ள வேண்டுமென்று கருதாதேயென்றால், ஒரு தனிக்கூட்டம் தேசத் துரோகமென்கின்றதும், மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு, தெருவில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் இறங்கக்கூடாது, பக்கத்தில் வரக்கூடாது என்று சொல்லுவது அக்கிரமம், மானக்கேடு, கொடுமை என்று சொன்னால் அதே கூட்டம் ஜாதித் துவேஷம், வகுப்புத் துவேஷம், பிராமணத் துவேஷம் என்கின்றதுமாயிருக்கின்றன!
இவ்வளவும் போதாமல், இப்போது திருவாங்கூர் இராஜ்யம் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்கின்றவர்களைத் தனது நாட்டுக்குள்ளாகவே வரக்கூடாது என்கின்றது. எனவே, இந்தியாவின் தேச பக்திக்கும், சுயராஜ்யக் கிளர்ச்சிக்கும், தேசிய உணர்ச்சிக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
– குடிஅரசு தலையங்கம், 14.7.1929