பரங்கிப்பேட்டை, 9.5.2019
உயர்திரு ‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
விழிப்புணர்வின் கருவாக வெளிவந்து கொண்டிருக்கும் தங்கள் இதழுக்குப் பாராட்டுகள்! மே 1-15, 2019 ‘உண்மை’ இதழில், “திரு.ஆறுகலைச்செல்வன் அவர்கள் எழுதிய ‘பிறந்த நாள்’ என்ற சிறுகதை சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டுகிறது.
குழந்தை கேட்கும் பகுத்தறிவான கேள்விகளுக்கு பதில் கூற முடியாத பெற்றோர்களின் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். கட்டுக்கட்டாக பணம் பெற்ற அர்ச்சகரின் மதிகெட்ட சொல் மற்றும் ஆதரவற்ற சிறுவனின் நன்றிக் கடன் இவற்றை சிறப்பாகக் கூறியுள்ளார். பிறந்த நாளின்போது மற்றவர்களுக்கு உதவி செய்வதே சிறப்பு என்பதை வலியுறுத்தி வழிகாட்டியுள்ளார். உண்மையில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளும் அருமை!
இப்படிக்கு,
– க.ராஜலட்சுமி,
அகரம்
‘உண்மை’, ‘விடுதலை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ ஏப்ரல் 16_30 இதழினை வாசித்தேன். இதழில் இடம்பெற்றுள்ள அனைத்தும் அருமை. கவிதை, கட்டுரை, துணுக்குகள் அருமை. புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய குறிப்புகள் சிறப்பு. உண்மையில் மானமுள்ள கவிஞர்கள் வரிசையில் இவர்களுக்குத்தான் முதலிடம். மணியம்மையார் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது. கீழடி பற்றிய ஆய்வுக் கட்டுரை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல ஆழமான செய்திகள். சிறந்த நூலில் சில பகுதிகள் ‘கருஞ்சட்டை பெண்கள்’ இப்புத்தகத்தின் உள்ளடக்கக் கருத்துகள் படிக்கப் படிக்க சிந்தனையினைத் தூண்டும் வகையிலுள்ளது. மேலும், பொருட்செலவின்றி ஓர் புத்தகம் பற்றிய அறிமுகம் இதன்மூலம் கிடைக்கப் பெறுகிறது. கண்டுபிடிப்புகள், முற்றம் பகுதியானது புதுமையானதாகவும், புரிந்துகொள்ள இயலும் வகையிலும் அமைந்துள்ளது. சென்னை புத்தகச் சங்கமம் என்ற சிறு கட்டுரை, தகவல் துணுக்குகள் படிக்கப் படிக்க அற்புதமாயிருந்தது.
அன்புடன்,
– ப.கார்த்தி,
உலகபுரம், ஈரோடு மாவட்டம்