முகப்புக் கட்டுரை : அறிவியலால் மழை பொழியுமா? ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா? மரம் வளர்ப்பும், மராமத்துமே தீர்வு!

மே 16-31 2019

ஒளிமதி

இல்லாததை இருப்பதாகக் காட்டி ஏமாற்றுவதுதான் எந்தக் காலத்திலும் ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சி.

கோயிலைக் கட்டுபவன் சூத்திரன், அதில் வைக்கப்படும் கடவுள் சிலையைச் செய்பவன் சூத்திரன். ஆனால், யாக சாலையில் தீ வளர்த்து, தர்ப்பைப் புல் வழியே மந்திரத்தை அனுப்பி கடவுளுக்குச் சக்தி கொடுத்துவிட்டோம் என்று  இன்றளவும் ஏமாற்றி வருபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.

“யாகம் செய்தால் குழந்தை பிறக்கும்.’’

“யாகம் செய்தால் போரில் வெல்லலாம்.’’

“மகாமக குளத்தில் மூத்திரத் தண்ணீரில் குளித்தால் புண்ணியமாம்.’’

என்று எத்தனையோ பித்தலாட்ட பிழைப்புகள் அவர்களுடையவை. அவற்றுள் ஒன்றுதான் யாகம் செய்தால் மழை பொழியும் என்பது.

இவர்கள் யாகம் செய்து என்றைக்காவது மழை வந்திருக்கிறதா? ஒரு முறையும் வந்ததில்லை. யாகத்திற்கு மகிமையில்லை. அது ஒரு மோசடி செயல் என்பது பட்டவர்த்தனமாய் தெரிந்தாலும் விடாப்பிடியாய் யாகம் செய்து பணத்தையும், பொருளையும் வீணாக்குகின்ற சமூக எதிரிகள் அல்லவா அவர்கள்!

அரசு சட்டத்திற்கு எதிராய் யாகம் செய்வதா?

மக்கள் தங்கள் நம்பிக்கையின்படி பல மூடச் செயல்களை செய்வர். அதைத் திருத்த அறிவியல் மனப்பான்மையை மக்களுக்கு உருவாக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் வற்புறுத்துகிறது. அப்படியிருக்க மடமைகளை மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டிய அரசே, அறிவியலுக்கு எதிராய் மழை பெய்ய யாகம் செய்யச் சொல்வது தப்பல்லவா? கடுமையான கண்டனத்திற்குரியதல்லவா?

 

கடவுள் தத்துவம் என்ன?

“கடவுள் உலகைப் படைத்து, நடத்தி வருகிறது. அதுவன்றி ஓர் அணுவும் அசையாது’’ என்று சொல்கிறது கடவுள் தத்துவம். அனைத்தும் அறிந்த, அனைத்தையும் இயக்கும் கடவுளுக்கு மக்கள் வறட்சியில் தவிக்கையில் மழை பொழிவிக்க வேண்டும் என்ற பொது அறிவுகூட இருக்காதா? யாகம் செய்துதான் கடவுளுக்கு வறட்சியை தெரிவிக்க வேண்டுமா? இதைவிட கடவுளை கேவலப்படுத்தும் செயல் உண்டா?

மக்களுக்கு வேண்டும்போது மழையில்லை. அதிகம் பொழிந்து வெள்ளப் பாழ் அல்லது அறவே பொழியாது கடும் வறட்சி இப்படித்தானே உலகில் நடக்கிறது. இதன்மூலம் தெரிவது என்ன? கடவுள் என்று ஒன்று இல்லை. அதன் இயக்கத்தில் இவ்வுலகு இல்லை என்பது தானே! மழை பொழிவதும், காய்வதும் இயற்கை நிகழ்வுதான் என்பதுதானே!

 செயற்கை மழைக்கு பயன்படுத்தும் ரசாயன அமோனிய நைட்ரேட், யூரியா, உப்பு தூவல் விமானம்

அறிவியலால் முடியுமே!

மழை பொழியாதபோது மழை பொழிவிக்கவும், மழை வேண்டாதபோது அதைத் தடுக்கவும் அறிவியலால் முடியுமே! பலமுறை செய்து காட்டியுள்ளனரே!

செயற்கை மழையின் வரலாறு

செயற்கை மழையை உருவாக்குவதில் ஸ்ஷேபர், பெர்னார்டு, வென்னிகாட் ஆகியோர் செயற்கை மழை உருவாக்கத்திற்கான அடிப்படை காரணிகளை உருவாக்கினர்.

காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பால் 1947 முதல் 1960 வரையிலும் செயற்கை மழைக்கான முயற்சிகள் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டன.

1960-ல் ஸ்னோய்மவுண்ட்டில் நடத்தப்பட்ட செயற்கை மழை சோதனையில் கணிசமான மழை பெய்ததாக புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை மழைக்கான அடிப்படை காரணிகளில் பல உறுதியான மாற்றங்களை அமெரிக்க விஞ்ஞானி சிம்சன் செய்தார். நவீன மாறுதல்களை சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் செய்தனர்.

செயற்கை மழை உருவாகும் விதம்

செயற்கை மழை உருவாக்கத்தில் மூன்று நிலைகள் உள்ளன. அவை

1.            காற்றழுத்தத்தை உருவாக்குதல்

2.            மழை மேகங்களை திரட்டுதல்

3.            மழை மேகங்களை குளிரச் செய்தல்

செயற்கை மழை எப்படி பெய்கிறது?

செயற்கை மழை பெய்விப்பை மூன்று பிரிவகாக பிரிக்கலாம்.

முதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். கால்சியம் கார்பைட், கால்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை/ அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்களை உருவாக்குவார்கள்.

அடுத்து, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்று கூட்டுவார்கள். (கால்சியம் குளோரைட்டும் பயன்படுத்துவதுண்டு.) இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.

இறுதியாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது!

மூன்றாவது நிலையில் மழை மேகங்களை குளிரச் செய்து அதிக அளவு மழை பெய்யச் செய்கின்ற வேதியியல் பொருட்களை தூவுவது . இந்த நேரத்தில் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுகின்றனர். அவற்றை மேகங்களின் மேல் தூவினால் அவை குளிர்ந்துவிடுகின்றன. மழை மேகங்கள் குளிர்ந்தவுடன் நீர் துளிகளாக மழை பெய்ய தொடங்குகிறது.

மரக்கன்றுகள் நடும் பிஞ்சுகள்

மேக விதைப்பு கருவியுடன் விமானம்

சிலநேரங்களில் மழை வருவது போன்று மேகங்கள் கறுத்து இருண்டிருக்கும். ஆனால் மழை பெய்யாது. இதை மேகங்கள் அதிகளவு குளிரடைந்த நிலை என்று கூறுவர். இவ்வாறு தோன்றினால், மேகங்களிலுள்ள ஈரப்பதம் நீராக மாற இயலாமல் இருப்பதை குறிக்கும். இந்த வேளையில் சிறிய விமானம் மூலம் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி தூவப்பட்டால் குளிரடைந்த நிலை கலைக்கப்பட்டு மழை பெய்ய தொடங்கிவிடும். இந்நேரங்களில் மூன்றாவது படிநிலை மட்டுமே பயன்படுகிறது. சிலவேளைகளில் வெள்ளி அயோடைடு குச்சிகளை ஏவுகணை குண்டுகள் மூலம் இந்த மேகங்களின் நடுவில் வீசுவதும் உண்டு. இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிலைகளிலும், உத்திகளை வடிவமைப்பது, செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்றவை வழிமுறைகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. செயற்கை மழையின் மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் ஆய்வுகள் மேற்கொண்டு குறைந்த செலவில் பெய்விக்க வழிகாண அறிவியல் அறிஞர்களும் அரசும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நிரந்தர தீர்வுகள்:

1. மரங்களைப் பெருக்குதல்

பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மரம் வளர்த்தலை ஒரு கடமையாகக் கொண்டு எங்கும் பசுமையாக காட்சியளிக்கச் செய்ய வேண்டும். மரக்கன்று நடுவது மட்டும் முக்கியமல்ல. அதைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியதும் கட்டாயம். மரம் பெருகப் பெருக மழை பெருகும்.

2. தூர்வாருதல்

ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி ஆழப்படுத்தி மழைக்காக நீரை சேமிக்க வேண்டும்.

3. அணைகள்

தேவையான இடங்களில் அணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும். அதன்வழி கடலில் பெருமளவு நீர் கலந்து வீணாகாமல் தடுத்து பயனுள்ள இடங்களில் பாய்ச்ச முடியும்.

4.மழைநீர் சேகரிப்பு:

மழைக்காலங்களில் வழிந்தோடி பயனற்றுப் போகும் நீரை ஆழ்குழாய்கள் மூலம் நிலத்தில் சேமிக்க வேண்டும். இது நிலத்தடி நீரை வற்றாது காக்கும்.

எனவே, மூடநம்பிக்கையில் அறிவியலுக்கு எதிராய் யாகங்கள் செய்வதை நிறுத்தி, ஆக்கபூர்வமான மேற்கண்ட வழிகளில் மழை வளத்தை, நீர் வளத்தைப் பெருக்கி, நீர்ப் பற்றாக்குறையை நிரந்தரமாய் நீக்க வேண்டியது அரசின் கட்டாயக் கடமையாகும்.

ஆக்க வழியில் சிந்திப்போம் செயல்படுவோம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *