நிகழ்வின் துவக்கத்தில் தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் கவிஞர் வைரமுத்து, ஆசிரியர் கி.வீரமணி மற்றும் விழா குழுவினர்
மஞ்சை வசந்தன்
கவிப்பேரரசு வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர். ‘சொல்லின் எல்லை கவிதை’ என்பதை தனது சொல்லாட்சிகளின்மூலம் உறுதி செய்தவர்.
மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி கட்டுரை வடித்தார். இலக்கிய ஆர்வலர்களுக்கு மத்தியில் கட்டுரையை வாசித்து அரங்கேற்றம் செய்யும் புதுமையைப் புகுத்தினார். தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கபிலர், திருமூலர், வள்ளலார், கால்டுவெல், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கலைஞர், ஜெயகாந்தன், அப்துல்ரகுமான் என இலக்கியக் கர்தாக்களை, ஆய்வாளர்களை இன்றைய தலைமுறைக்கு “தமிழாற்றுப்படை” என்ற தலைப்பில் ஆற்றுப்படுத்தி அவர்கள் இத்தகையோரை அறியத் தூண்டியுள்ளார்.
தமிழாற்றுப்படையில் தந்தை பெரியார் பற்றிய உரையை கேட்க வந்த மக்களின் ஒரு பகுதியினர்
“தமிழாற்றுப்படை” வரிசையில் தந்தை பெரியார் குறித்து கட்டுரையாற்ற உள்ளேன். தலைமை தாங்கிச் சிறப்பிக்க வேண்டும்” என்று தமிழர் தலைவரிடம் வேண்டுகோள் வைத்தார். மகிழ்ச்சியுடன் தலைவரும் ஒப்புக் கொள்கின்றார். மே மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் பாசறை திருச்சியிலே விழா.
முதல் நிகழ்வாக தந்தை பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தமிழர் தலைவர் மலர் தூவி பெருமை சேர்க்க அவரைத் தொடர்ந்து கவிப்பேரரசு மலர் இட்டு மரியாதை செலுத்தினார். பேராசிரியர் அருணன் மற்றும் பலர் மலர் தூவினர். வெற்றித் தமிழர் பேரவையின் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார்.
உரையாற்றும் ஆசிரியர் கி.வீரமணி
பேராசிரியர் அருணன் உரை
தமிழர் தலைவர் அவர்களுக்கு கவிப்பேரரசு பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார். அரங்கில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. வாழ்த்துரை வழங்க பேராசிரியர் அருணன், தமிழரின் தத்துவ மரபு, காலந்தோறும் பிராமணியம், தமிழகத்தில் சமுக சீர்திருத்தம் -இரு நூற்றாண்டு வரலாறு, கடவுளின் கதை, யுகங்களின் தத்துவம் முதலிய கருத்துச் செறிவான புத்தகங்களை எழுதிய பேரறிஞர் கருத்துக் கனல்தெறிக்க உரையாற்றினார்.
மார்க்ஸ்க்கும், பெரியாருக்கும் கவிதைப் பாலம் கட்டியவர் வைரமுத்து என்று புகழாரம் சூட்டினார்.
பெரியார் பற்றி எழுத வைரமுத்துவுக்கு முழு உரிமை உண்டு என்றார். பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளை வியந்து பாராட்டினார்.
“மாற்ற முடியாத அரசு கவிப்பேரரசு” என்று பாராட்டிய தமிழர் தலைவர், பெரியார் சிந்தனைக்கு வைரமுத்து “கலங்கரை விளக்கு’’ என்றார். ‘தமிழர்கள் உயர்ந்தால் மனந்திறந்து பாராட்டு’ என்றார் பெரியார். தந்தை பெரியார் ஓவியக்காரர் அல்ல; புகைப்படக் கலைஞர் அல்ல; அவர் ஒரு எக்ஸ்ரே நிபுணர் போல என்று விளங்கினார். தந்தை பெரியாரை சரியாக காட்டியிருக்கிறார் கவிப்பேரரசு என்று புகழாரம் சூட்டினார்.
தந்தை பெரியார் இலக்கியவாதியா? எனும் கேள்விக்கு ஒரே பதில் கவிப்பேரரசின் கட்டுரைதான் என்று அழுத்தந் திருத்தமாக அறிவித்தார். களத்தில் நின்ற முதல் பெண் போராளி நாகம்மையார் என்று கூறி, நாகம்மையார் இறந்தபோது பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கையை எடுத்துக்காட்டி தந்தை பெரியாரின் இலக்கியத் திறனை வெளிப்படுத்தினார்.
நீதிமன்றத்தில் பெரியார் தாக்கல் செய்த அறிக்கையினை எடுத்துரைத்தபோது அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது.
‘பெரியாரின் சிக்கனம் தமிழ்நாட்டின் பொக்கிஷம்‘ என்றார் பேராசிரியர் எம்.எஸ்.நாடார். கவிப்பேரரசு யார்? என்று அவர்தம் உரை கொண்டு விளக்கினார். வைரமுத்து வின் ‘வேதம் சொல்லாதது’ சிறுகதையின் சிறப்பை எடுத்துரைத்து உரையை நிறைவு செய்தார். 25 நிமிட உரையில் தந்தை பெரியாரையும், கவிப்பேரரசு வைரமுத்துவையும் கொண்டாடினார். தமிழர்களுக்கு அடையாளம் காட்டினார்.
உரையாற்றும் கவிப்பேரரசு வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவின் காவிய உரை
‘தமிழாற்றுப்படை பெரியார்’ எனும் கருத்தாழம் மிக்க கட்டுரையினை 50 நிமிடங்கள் படித்துரையாற்றினார். அவர் பேசப் பேச கூட்டம் ஆர்ப்பரித்தது. கைத்தட்டி மகிழ்ந்தது; நெகிழ்ந்தது. ‘முக்கொம்புக்கு வராத வெள்ளம் முத்தமிழுக்கு வந்திருக்கிறது’ என்றார். ‘திருவிழாவுக்கு வராத கூட்டம் பெரியாருக்கு வந்திருக்கிறது’ என்றார். ‘நான் பிறக்கும்போதே கருப்புத் தோலோடு பிறந்தவன்’ என்றார்.
‘நடமாடும் நூலகம் – தமிழர் தலைவர்; பேசும் பல்கலைக் கழகம் – தமிழர் தலைவர்; விரல் நுனியில் தமிழ்நாட்டின் வரலாறு வைத்திருப்பவர் – தமிழர் தலைவர்’ என்று புகழாரம் சூட்டினார். ‘கலைஞர் இல்லாத மன்றத்தை தமிழர் தலைவர் இன்றி வேறு எவரால் நிரப்ப முடியும்?’ என்று நெகிழ்ந்தார்.
‘பெரியாரைப் படித்தால் சொந்தக் காலில் நிற்கலாம்’ என்றார். ‘தலைவர் வீரமணி அவர்களே! நான் உங்களால் உயிர்ப்படைகிறேன்’ என்றார். தமிழாற்றுப் படையில் பெரியார் இல்லையென்றால் தலையில்லாத கிரீடம், தலையில்லா உடல் என்றார். மற்றப் படைப்பாளிகள் தமிழில் எழுதினார்கள். பெரியார் தமிழையே எழுதினார் என்று புகழ்ந்தார். ஒரு பெரியாரைப் போல இன்னொரு பெரியார் வர முடியாது என்றார். நகல் எடுக்க முடியாத அசல் பெரியார் என்று உருகினார். தமிழாற்றுப் படை எழுதும்போது நேர்ந்த சோகங்களை உருக்கமாக உரைத்தார். கட்டுரை எழுதும் அனுபவத்தை உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். தமிழாற்றுப் படை நிறைவடையட்டும் என காத்திருந்தேன் என்று சங்கநாதம் செய்தார். பெரியார் கட்டுரையின் ஓர் எழுத்தைக் கூட இழக்கச் சம்மதிக்க மாட்டேன் என்றார். “பெரியார்” கட்டுரையைப் படிக்கத் தொடங்கினார். கருத்து முத்துக்கள் தெறித்தன. தந்தை பெரியாரை அழகுற செதுக்கினார் அழியா காவியமாக.
விழாவிற்கு தலைமை தாங்கிய ஆசிரியர் கி.வீரமணிக்கு பயனாடை அணிவித்து மரியாதைச் செய்யும் வைரமுத்து உடன் பேராசிரியர் அருணன்
பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்து கொள்வது?
“எவனொருவனின் வாழ்வும் வாக்கும், செயலும் பொருளும் மனிதக் கூட்டத்தின் தற்காலத் தருணத்திற்கும் தேவைப்படுகின்றனவோ அதுவரைக்கும் ஒரு மனிதன் நினைக்கப்படுகிறான். கல்லறையில் அவன் உயிரோடிருக்கிறான். பெரியார் இன்னும் உயிரோடிருக்கிறார்; இருப்பார் மற்றும் இருக்க வேண்டும்.
அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா?”
வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?
உடம்பில் ஒட்டிய ஒட்டடைகளை ஆடைகள் என்று கருதிக் கிடந்த திராவிட இனத்தை, தொட்டுத் தூக்கித் துடைத்து அதன் நீண்ட நிர்வாணத்தைச் சுட்டிக்காட்டி, சுயமரியாதை ஆடை சூடிய சூத்திரம் கண்ட சூத்திரர் என்பதா?
400 கோடி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சிந்தனைகளை வெறும் 4 கோடி மக்களின் மொழியில் பேசிப் பரப்பளவு குறைந்துபோன பாமர மேதை என்பதா?
தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர் பெரியார். ஆனால் தமிழ் மீது பூட்டப்பட்ட கடவுள் தன்மையைக் கழற்றி எறிந்தவரும் அவரே. எனக்குத் தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. மிகப் பழைய பாஷை – சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்பது பெரியாரின் தர்க்க வாக்குமூலம்.
எழுத்து – சொல் – பொருள் – யாப்பு – அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?
கலைத்துறையின் மீது பெரிதும் காதலுறாத பெரியார் தமிழிசையின் மீது மட்டும் தனிப்பார்வை செலுத்தினார். காரணம் ‘கல்லா மக்களின் கல்வி காதுவழி புகுகிறது’ என்பதுதான்.
பல் விளக்கச் சோம்பேறித்தனப்பட்ட மருமகனைப் பார்த்து ஒரு மாமியார், பல்விளக்கும்படி மருமகனுக்குச் சொல்ல வெட்கப்பட்டு, கரும்பு சாப்பிட்டால் பல் வெள்ளையாகும் எனக்கருதி, மறைமுகமாய், “மாப்பிள்ளை! இந்த ஊர்க் கரும்பு நல்ல ருசியாக இருக்கும். ஒரு துட்டுக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள்’’ என்று சொல்லிக் காசு கொடுத்தாள். மாப்பிள்ளை அதை வாங்கிக் கொண்டுபோய் எள்ளுப் பிண்ணாக்கு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பல்லை இன்னும் கேவலமாக்கிக்கொண்டு கரும் எண்ணெய்ப் பசையுடன் வந்தால் மாமியாருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! அது போலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சி இந்நாட்டில் நடந்து வருகிறது என்று கருதவேண்டியிருக்கிறது.
192 நாடுகளால் ஆன இந்த பூமியில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓங்கி ஒலித்த உலகக்குரல் என்பதா?
கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்கள் என்று கருதப்பட்ட கடவுள் – மதம் – சாதி – விதி – மரபு என்ற கருத்தாக்கங்கள் மீது ஆயிரம் கேள்விகளை முன்வைத்த அறிவின் ஆழியாகிய அறிவாளி என்பதா?
இவற்றுள் எதுவும் பொய்யில்லை; பெரியார் குறித்து இதுபோல் எது சொன்னாலும் மிகையில்லை.
***
“பறைச்சியாவ தேதடா?
பனத்தியாவ தேதடா?
இறைச்சி, தோல், எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ”
என்ற சிவவாக்கியம் வெறும் ஆன்மிகக் கோபமாகவே அடங்கிவிட்டது.
இவைபோன்ற கவிதைச் சினங்களெல்லாம் இலைகளின் மீது பூச்சிமருந்து தெளித்தனவே தவிர, வேர்ப்புழுக்களைச் சென்று விசாரிக்கவேயில்லை. அந்த வகையில் தமிழ்ப் பெரும்பரப்பில் அநீதியின் ஆணிவேர்களை அசைத்ததும் சமுகக்கேடுகளின்அடிவேர்களைக் கெல்லியதும் வருணாசிரமத்தின் கிளைகளை வகிர்ந்ததும் பெரியாரின் பெருங்கோபம் மட்டும்தான்.
பிராமணன் – சூத்திரன், ஏழை – பணக்காரன், கற்றவன் – கல்லாதவன், ஆண் – பெண் ஆகிய பேதங்களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாயின், இவற்றைக் கட்டமைத்த – கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப்பதுதான் என் ஒரே வேலை என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர் தாம் பெரியார். இது சுதந்திரத்தால் ஆகாது சுயமரியாதையால்தான் ஆகும் என்றதொரு முற்றிய முடிவெடுத்து அரசியலைத் துறந்த ஒரு சமுகத் துறவிதான் பெரியார்.
***
இந்துமதம் அவருக்கென்ன எதிரியா? கடவுளென்ன வைரியா? எவன் இந்த மண்ணுக்குரியவனோ, எவன் உழைக்கும் வெளியில் கதிர் வெப்பம் தாங்கிக் கறுத்துக் கிடக்கிறவனோ, எவன் உற்பத்தியில் நேரடியாய் உதிரம் கொட்டுகிறவனோ அவன் சூத்திரன் என்றும் தாசி மகன் என்றும் அடிமை என்றும் இழிவு செய்யப்படுவதைத்தான் பெரியார் எதிர்த்தார். கடவுளோ மதமோ அந்த இழிவை நியாயப்படுத்தும் கேடயமாக்கப்படும்போது அந்தக் கேடயங்களையே நொறுக்க முற்பட்டார்.
என்பன போன்ற அரிய கருத்துக்களை, உரிய சொல்லாட்சியில் உலகோர் உணரும்படியும், உணர்ந்து மேலும் மேலும் பெரியாரைத் தேடித் தேடி அறிவு பெறவும், மானம் பெறவும், சமத்துவம் காணவும் செய்துள்ளார் கவிப் பேரரசு வைரமுத்து.
பெரியாரைப் பேசியதன் மூலம் வைரமுத்து பெருமை பெருகிறார். அவர் ஆற்றுப்படையும் அதைப் பெறுகிறது. பெரியாரை துலக்கிக்காட்டும் ஒளிவிளக்கு பெரியார் பற்றிய இந்த ஆற்றுப்படை.