பகுத்தறிவு ஆட்சி

மே 16-31 2019

ஞானம் என்றால் அறிவு என்று பொருள்;

அஞ்ஞானம் என்றால் (பகுத்து அறியும்) அறிவற்ற தன்மை என்பது பொருள். இன்றைய மக்களாகிய நாம் பெரும்பாலோர் (பகுத்தறிவற்ற) அஞ்ஞானிகளேயாவோம். இதன் காரணம், நம் இயற்கைத் தன்மையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், இயற்கைக்கு மாறுபாடான கடவுள் அடிமைகளாகி விட்ட காரணத்தால் மெய்ஞானம் என்பது நம்மை அணுகாமலே போய்விட்டது.

மெய்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்னவென்று பார்த்தால் மெய்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாகவும் இருப்பான் என்பதுதான்.

கவலை – என்பதன் பொருள் – பேதநிலை.

கவலையற்ற என்பதன் பொருள் – பேதமற்ற (அபேத) நிலை என்பதேயாகும்.

மனிதன் பகுத்தறிவு உரிமையுடையவனானதால் அவன் கண்டிப்பாக – கட்டாயமாக அபேத நிலையில் உள்ள மெய்ஞானியாகவே இருக்க வேண்டியவன் ஆவான். ஆனால், அப்படிக்கில்லாமல் பேத நிலைக்கு ஆளாகி அஞ்ஞானியாக இருந்துவருகிறான்.

மனிதருக்குள் (சமுதாய வாழ்வில் வாழ்ந்துவரும்) மனித சமுதாய ஜீவியத்தில் பேதநிலை ஏன் இருக்கவேண்டும் என்பது சிந்திக்கத்தக்கதாகும். அதிலும் மனித சமுதாயத்தை அடக்கி ஆட்சிபுரியும் அரசு என்ற ஆட்சிக்கு உட்பட்ட மக்களிடையில் பேத நிலை ஏன் இருக்க வேண்டும்? ஏன் இருக்கிறது? என்று சிந்திப்போமானால், அதன் விடை என்னவென்றால், மனித சமுதாயத்தை அடக்கி ஆளும் ஆட்சி

அஞ்ஞான ஆட்சியாய் இருக்குமானால், அது கண்டிப்பாய் பேதநிலை உள்ள ஆட்சியாய்த்தானே இருக்கும். மனித சமுதாயத்தை அடக்கியாளும் ஆட்சி மெய்ஞான (பகுத்தறிவு) ஆட்சியாய் இருக்குமானால், அது கண்டிப்பாய் வாழ்வில் பேதநிலை அற்ற அபேதநிலை ஆட்சியாகத்தான் இருக்கவேண்டும்; இருந்துதான் தீரும்.

– ‘விடுதலை’, 21.09.1964

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *