தந்தை பெரியார்
எனக்குத் தெரிய எனது 14 வயது முதல் ஜாதிக்கு எதிரியாகவே இருந்து வந்து உள்ளேன். எனக்கு நினைவு தெரியாத காலமாகிய 7 வயது முதலே ஜாதிக்கு எதிர்ப்பாகவே இருந்து வருகின்றேன் என்றுதான் கூறவேண்டும்.
நான் பள்ளிக்குப் போகும் போது குறவர் முதலிய கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் வீட்டில் எல்லாம் சோறு தின்று உள்ளேன். இது காரணமாகவே எங்கள் வீட்டில் என்னை வெளியில் வைத்து சாப்பாடு போட்டு இருக்கின்றார்கள். இம்மாதிரி செய்கையே என்னை ஜாதி ஒழிப்பு முயற்சியில் சிந்திக்கத் தூண்டியது.
தோழர்களே! ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு கொஞ்சம் தத்துவ ஞானம் வேண்டும். தத்துவ ஞானம் என்றால் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் கூறுகின்றாரே ‘குப்பைத் தொட்டி தத்துவ ஞானம்‘ அது அல்ல. தத்துவ ஞானம், பகுத்தறிவு வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றேன்.
ஜாதியை ஒழிக்கின்றவன் முன்னோர்கள் நடந்தது, சொன்னது, எழுதி வைத்தது என்பன போன்றவற்றை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.
நமக்கு எவனும் முன்னோர்கள் அல்லர். நாம்தான் வருங்காலத்தவர்களுக்கு முன்னோர்கள் என்று கருதி காரியம் ஆற்ற வேண்டும். நமக்கு யார் முன்னோர்கள்? எதில் முன்னோர்கள்? எது முதல் முன்னோர்கள்?
தோழர்களே! தமிழர்களுடைய சரித்திரத்துக்கு கால வரையறையே இல்லையே! நமக்கே என்றால் பார்ப்பனப் புராணங்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
திரேதா யுகம், கிரேதா யுகம் என்று எல்லாம் கூறி யுகத்துக்கு 1,00,000, 10,00,000 வருஷங்கள் என்று கணக்குப் போட்டுப் புளுகுவான்!
புத்தருக்குப் பிறகுதான் இந்த இராமாயண _ பாரதங்களும், புராணங்களும் ஏற்பட்டன. இராமாயணத்தில் பல இடங்களில் புத்தரைப் பற்றி பேசப்படுகின்றது. பாரதம், விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலியவற்றிலும் பேசப்படுகின்றது. ஏன் இப்படி என்றால் சங்கராச்சாரியார் கூறுகின்றார் ‘இது ஒன்றும் முரண் அல்ல _ நாட்டின் ஒவ்வொரு யுகத்தின் போதும் ஒவ்வொரு புத்தர் தோன்றுவது உண்டு. இராமாயணத்தில் உள்ள புத்தர் அந்த யுகத்துப் புத்தர், பாரதத்தில் உள்ள புத்தர் பாரதகால யுகத்துப் புத்தர்’ என்று கூறுகின்றார்.
அப்படியே அந்த யுகங்கள் எல்லாம் உண்டு என்று வைத்துக் கொண்டு பார்த்தாலும், அந்தக் காலத்து மனிதர்களுக்கு எப்படி அறிவு மேலாக இருக்க முடியும்? இவன் குறிப்பிடும் யுககாலத்தில் மனிதன் புல்லாய் புழுவாய் இருந்தானோ? அல்லது குரங்காக இருந்தானோ?
நமக்கு வரும் எதிர்ப்பு எல்லாம் முன்னோர்கள் சங்கதி பற்றித்தான் வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயமரியாதைக் கலியாணம் செல்லாது என்று அய்க்கோர்ட்டில் தீர்ப்புக் கூறினான். இது செல்லாது என்பதற்கு எதை ஆதாரம் காட்டினான் தெரியுமா? நாரதர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். பராசரர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். ஆபத்ஸ்தம்பர், யாக்ஞவல்கியர் அப்படிச் சொல்லி இருக்கின்றார்கள். இவர்களுடைய முறைக்கு இந்தத் திருமணம் மாறாக இருப்பதால் இது செல்லாது என்று கூறியிருக்கின்றார்!
இது எவ்வளவு முட்டாள் தனம்! இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் எந்தக் காலத்துப் பசங்கள்? இவர்களில் அனேகர் மனிதனுக்கே பிறக்கவில்லையே! கழுதைக்கும், கோட்டானுக்கும், மாட்டுக்கும், கிளிக்கும், மற்ற மற்றதுகளுக்கும் பிறந்த பசங்களா நம்முடைய முன்னோர்கள்? இவர்கள் காலத்தில் மனிதனுக்கு எவ்வளவு அறிவு இருந்து இருக்க முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.
பாவம், புண்ணியம், முன் பின் பிறவிகள் என்பன எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனமானது _ ஒழிக்கத்தக்கது என்று உணர வேண்டும். இவை பற்றி மக்களுக்குத் தெளிவு உண்டாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுகள் சம்பந்தமான அறிவு நூல்களைப் படித்து உணர வேண்டும்.
இன்றைக்கு உள்ள புரட்டுகள் எல்லாவற்றையும்விட பெரிய புரட்டு இந்த 20ஆம் நூற்றாண்டிலும் ஜாதிக்கு ஆதாரமாக கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான் இவற்றை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியும் என்று நம்புவதாகும்.
15.12.1962அன்று திருச்சி மாவட்டத்தில் கரூர் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
– ‘விடுதலை’, 23.12.1962