இயக்க வரலாறான தன் வரலாறு(225) : தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் மறியல் போராட்டம்!

மே 01-15 2019

 அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

மன்னார் மாவட்டம் அடம்பனில் 28 சிங்கள இராணுவத்தினரை நேரடிச் சமரில் சுட்டு வீழ்த்தி விட்டு மார்பில் குண்டு ஏந்தி வீர மரணமடைந்த மன்னார் மாவட்ட விடுதலைப் புலிகளின் ராணுவ தளபதி விக்டருக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் 05.11.1986 அன்று நடைபெற்றது. இந்த வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்நாடு காமராசர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் உணர்வுகளை பெற்றாக வேண்டும் என்றும், மன்னார் மக்களால், பாசத்துடன் நேசிக்கப்பட்ட மாவீரன் என்று புகழாரம் சூட்டினேன்.

தமிழர்களது இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வினை தமிழர் பண்பாட்டை _ மொழியை _ உரிமைகளை அழிக்கும் போக்கினை உலகுக்கு எடுத்துக்காட்டி, இந்தித் திணிப்பை வற்புறுத்தும் இந்திய அரசியல் சட்டத்தினை 17ஆவது பிரிவுக்குத் தீமூட்டி, அறவழிப் போராட்டம் நடத்திட கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோர் 9000 பேர்கள் கைதாகினர். மீண்டும் 09.12.1986 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தும் தி.மு.விற்கும் அதன் தலைமைக்கு வாழ்த்தாக 07.12.1986 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “வாழ்த்தி வழியனுப்புவோம்; வந்தும் குடியேறுவோம்’’ என்று தலைப்பிட்டு எழுதினேன்.

தந்தை பெரியார் நினைவு நாளான 24.12.1986 அன்று சென்னை பெரியார் திடலில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால், பிரபல வழக்கறிஞர் உத்தம (ரெட்டி), ஆடிட்டர் சுரேந்திர், முன்னாள் அமைச்சர் நாராயணசாமி (முதலியார்), பாளையங்கோட்டை நகராட்சித் தலைவர் சுப.சீதாராமன், காமராசர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் தி.சு.கிள்ளிவளவன், மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் டாக்டர் நன்னன் ஆகியோர் முன்னிலையில் ‘திராவிடன் நலநிதி லிமிடெட்’ தொடக்கம் நடைபெற்றது.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் முன்மொழிய சென்னை ப.க. தலைவர் ஞானசுந்தரம் வழிமொழிய ஓய்வு பெற்ற நீதிபதி பி.வேணுகோபால் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நீதிபதிகள் பேசும்போது தமிழர் சமுதாயம், சமவாய்ப்பு, சமஉரிமையுடன் வாழவேண்டும். தனது வாழ்நாள் காலம் முழுவதும் பாடுபட்ட தந்தை பெரியார் கொள்கையில் நம்பிக்கையுள்ள சிலரால் இந்த நிறுவனம் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்.

நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏராளமான கழகத் தோழர்களும், அன்பர்களும் இந்த நிதி நிறுவனத்துக்கு தங்களது முதலீட்டுத் தொகையை அறிவித்தார்கள். பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் உறுப்பினர் கோவிந்தராசன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

27.12.1986 அன்று கூடுவாஞ்சேரி சுப்பிரமணியம் என்ற மொழிப்போர் தியாகி இந்த ஆட்சியின் மொழி வெறித்தனத்திற்கும், இவ்வாட்சியின் அடக்கு முறைக்கும் பலியானார் என்ற செய்தி தமிழினத்தின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல ஆனது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “இந்தித் திணிப்பை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க. வீரர்கள் சிறைக்கோட்டத்தில், வழக்குகள் பல இடங்களில் தொடங்குவதற்கு முன்பே _ இப்படி  உயிர்களை இந்த அரசு பழி வாங்குகிறது’’ என்று கூறி இதற்குக் கடுமையான கண்டனத்தை ‘விடுதலை’யில் இரங்கல் செய்தி வெளியிட்டு பதிவு செய்திருந்தேன்.

மேலும், தமிழ் காக்க தங்களையே தந்த அந்த தளநாயகர்கட்கு நாம் வீரவணக்கம் செலுத்தி திராவிடர் கழகக் கொடிகள் 2 நாள்கள் நாடெங்கும் இன்றுமுதல் அரைக் கம்பத்தில் பறக்க வேண்டும் எனக் கூறினேன்.

கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த கலைஞர் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு பதினேழு வாரங்கள் கடுங்காவல் தண்டனை என்றும் சைதாப்பேட்டை நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு வந்தவுடனேயே கலைஞர் அவர்களுக்கு தண்டனை கைதி உடை வழங்கப்பட்டது. அதை கண்டித்து கடுமையான அறிக்கை வெளியிட்டேன். உடனே அதை எம்.ஜி.ஆர் அரசுக்கு மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக கலைஞர் ஒரு வாரத்தில் விடுதலைச் செய்யப்பட்டார்.

3.2.1987 மற்றும் 7.2.1987 அன்று சென்னை பெரியார் திடலில் ‘நீதிதேவன் மயக்கம்’ என்னும் தலைப்பில் இரண்டு நாள் சிறப்புரை ஆற்றினேன். அப்போது இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்திய திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அதன் தலைவர் கலைஞர் உள்பட அனைவரின் மீதும் எழும்பூர் நீதிமன்றத்தில்தான் வழக்குப் போடப்பட்டது. எல்லா வழக்குகளும் சைதாப்பேட்டை நோக்கிப் பயணம் போவது ஏன் என்று வினா எழுப்பினேன்.

கோவையை குலுக்கிய கருஞ்சட்டை ஊர்வலத்தை பார்வையிட தனி மேடையில் தலைவர்களுடன் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்

மேலும், தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதுடன், பதவி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

மண்டல் குழு பரிந்துரையை அமுல்படுத்த  வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடமும் பிரதமரிடமும் (ராஜிவ்காந்தி) தூதுக்குழுவை ஒன்றுசேர்த்து நேரில் வற்புறுத்த 09.12.1986 அன்று குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங்கை மாலையில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தோம்.  மீண்டும் 10.12.1986 அன்று பிரதமர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம், கோரிக்கை மனு அளித்தோம்.

பிரதமரைச் சந்தித்த தூதுக்குழுவில், நான் மற்றும் பிரம்பிரகாஷ், சந்திரஜித் யாதவ், கர்ப்பூரிதாகூர், முலாயம்சிங் யாதவ், பி.பி.மவுரியா (முன்னாள் அமைச்சர் ‘சோஷிதால்’ சமூக அமைப்பு தலைவர்) எம்.கே.ராகவன், ஆர்.எஸ்.கவாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டோம்.

கழகத்தின் சார்பில் கோவை வ.உ.சி.திடலில் அன்னை நாகம்மையார் நினைவு அரங்கத்தில் 3.1.1987 முதல் 5.1.1987 வரை பெண்கள் விடுதலை மாநாடு, திராவிடர் கழக மாநில _ தென்மண்டல ஒடுக்கப்பட்டோர் சமூகநீதி மாநாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. மாநாட்டில் வடநாட்டைச் சேர்ந்த தலைவர்களும், அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மாநாட்டில் பெருந்திரளாக இந்தியாவுக்கு வழிகாட்டும் அளவில் கலந்துகொண்டார்கள்.

கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஊர்வலத்தை, மக்களவை தி.மு.க. உறுப்பினர்கள் சி.டி.தண்டபாணி, பிற மாநிலத் தலைவர்கள் சந்திரஜித், மவுரியா, லட்சுமண்ணா, டில்லி காந்திராம், தாரகம், சுந்தா, பிரம்பிரகாஷ், டி.கே.தேசாய் உள்ளிட்டோரும் ஊர்வலத்தை பார்த்து பரவசம் அடைந்தோம்.

தென்மண்டல ஒடுக்கப்பட்டோர் சமூகநீதி மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மலம் அள்ளும் தொழிலிலிருந்து மனிதர்களை விடுவிக்க வேண்டும், பறை அடிக்க, பிணம் எரிக்க தாழ்த்தப்பட்டவர்களையே ஒதுக்குவதா? தாழ்த்தப்பட்டோர்களுக்கு தனிச் சுடுகாடுகளை மாற்ற ‘சமூகநலக்குழு’ தமிழக அரசு அமைக்க வேண்டும். வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, மத்திய, மாநில அரசுப் பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியாரின் கருத்துகளை எடுத்துக்காட்டி கழக மாநில மாநாட்டில் உரையாற்றினேன். “பார்ப்பனர் எங்களோடு ஒன்றுபடாவிடினும் எமது இன ஒற்றுமையைக் குலைப்பதா?” என்று அய்யா கருத்தைதெளிவாக விளக்கி உரை நிகழ்த்தினேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவரும், ‘டிஸ்டிரிக்ட் கெசட்டிஸ்’ ஆசிரியராகவும், இன்னும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு _ சமுதாய நலப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் தத்துவக் கொள்கை பரப்பு பன்னாட்டு நிறுவனம் (Thanthai Periyar International Institute of Periyar Philosophy and Idealogy) தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சித் துறைத் தலைவராக பொறுப்பேற்று பொதுப்பணி ஆற்றிய பேராசிரியர் டாக்டர் அ.இராமசாமி மாரடைப்பால் 6.1.1987 அன்று காலமானார்கள்.

டாக்டர் அ.இராமசாமி

இந்தச் செய்தியை அறிந்து நான் சொல்லொணாத் துயரமும்  _ வேதனையும் அடைந்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், நான் அவரது மாணவன், என்றும் நான் எனது ஆசிரியர் என்ற மதிப்புடன், மரியாதையுடன் தான் அவரிடம் நடந்து வந்திருக்கிறேன். அந்தச் சாதனையை நிகழ்த்திய அவரது மறைவு _ அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; நமது இயக்கத்திற்கே ஓர் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும் என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு நினைவு நாள் பொதுக்கூட்டமும் பெரியார் திடலில் 12.1.1987 அன்று நடைபெற்றது. நினைவு நாள் உரை நிகழ்த்த ஜஸ்டிஸ் பி.வேணுகோபால், முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி.சிட்டிபாபு, பேராசிரியர் டாக்டர் வி.சண்முகசுந்தரம், பேராசிரியர் நல்லாக் கவுண்டர், டாக்டர் மா.நன்னன் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஈழத்தில் சிங்கள அரசு அட்டூழியம் செய்வதை எனக்கு தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஏ.அமிர்தலிங்கம் அவர்கள் 10.1.1987 அன்று தந்தி கொடுத்து இருந்தார்கள். ஈழத்தில் சிங்கள அரசு விடுத்துள்ள பொருளாதாரத் தடை மற்றும் ராணுவத்தின் அட்டூழியம் குறித்து அதில் தெரிவித்து இருந்தார்கள்.

இவ்விவகாரத்தை டில்லி அரசுக்குக் கவனப்படுத்தி ஈழத் தமிழர்களைக் காக்குமாறு அந்தத் தந்தியில் திரு.அமிர்தலிங்கம் கேட்டிருந்தார்கள்.

இது குறித்து நான் பிரதமர் ராஜீவிற்கு தந்தி கொடுத்தேன். அதில், “பிரிட்டோரியா இனவெறி அரசை விட படுகேவலமான பொருளாதாரத் தடை விதித்து, அப்பாவி மக்களை சிங்கள அரசு வதைத்து வருகிறது. இந்தப் போக்கினால் தமிழகம் கொதித்துள்ளது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் டில்லி அரசு எடுத்து, சொல்லொணாத் துயரையும், மிருக வெறிப் படுகொலைகளையும் ஈழத்தில் தடுக்கக் கோருகிறேன்’’ என எனது தந்தியில் நான் கேட்டுக்கொண்டேன்.

அன்றே, 10.1.1987 அன்று மத்திய அரசின் எதிர் நடவடிக்கை தேவை! என்று முக்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தேன். அதில் இனிமேல் அரசியல் தீர்வு, அரசியல் பேச்சு, வார்த்தை என்ற “வேப்பிலைப் பாடத்தால்’’ சிங்கள அரசின் பயங்கரவாதம் என்ற புற்றுநோய் ஒருபோதும் தீராது என்று குறிப்பிட்டிருந்தேன்.

திருச்சி கே.அபிஷேகபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் -_ நிறுவனர் நாள் விழாவாக 23.1.1987 அன்று  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமைந்துள்ள கட்டடத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுவாழ்வில் ஈடுபட்டு குடும்ப ஆதரவற்ற _ வயது முதிர்ந்தவர்களுக்கு வாழ்வு அளிக்கின்ற வகையில் “சாமி கைவல்யம் முதியோர் இல்லம்” (Senior Citizens Home) என்ற ஓர் அமைப்பு துவங்கப்பட்டது.

 சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி திறந்து வைத்தார்.

இம்முதியோர் இல்லத்தின் திறப்பு விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உயர்திரு ஜஸ்டிஸ் வேணுகோபால் தலைமை வகித்தார். சென்னை அரசினர் பொது மருத்துவமனையின் ஓய்வு பெற்ற டீன் டாக்டர் கே.இராமச்சந்திரா முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி ‘கைவல்யம் முதியோர்’ இல்லத்தை திறந்து வைத்தார்.

டாக்டர் கே.இராமச்சந்திரா

விழாவில் நான் வரவேற்புரை ஆற்றினேன். அப்போது, தந்தை பெரியாருக்கு நண்பர்களாகவும், சீடர்களாகவும் இருந்த பெரியவர்கள் பெயரில் எல்லாம் இந்த வளாகத்தில் கட்டிடங்கள் உள்ளன.

சிறப்புரையாற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள், “பெரியார் நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.50,001 நன்கொடை அளித்தார்கள்.

எம்.ஏ.எம்.இராமசாமி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் முதுபெரும் அரசியல் தலைவர் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள், சென்னை மயிலாப்பூர் வாரன் ரோடிலுள்ள அவரது இல்லத்தில் 13.2.1987 அன்று மறைவுற்றச் செய்தியை அறிந்து நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தினேன்.

முன்னாள் முதல்வர் பக்தவத்சலம்

20.2.1987 அன்று ஈழத் தமிழர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி துறைமுகத்தில் நானும், பழ.நெடுமாறன் அவர்களும் கப்பல் மறியல் கிளர்ச்சி நடத்தினோம். அதற்கு முன்பாகவே நாங்கள் இருவரும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் சிலைகளுக்கு இருவரும் மாலை அணிவித்தோம்.

துறைமுக மறியல் போராட்டம் தூத்துக்குடி 20.02.1987

 அங்கேயே பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்து மக்கள் திரண்டார்கள். நாங்கள் அனைவரும் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டோம். கைதான பிறகு செய்தியாளர்களிடையே பேட்டி அளித்தேன். அப்போது இருவரும் கூட்டறிக்கை ஒன்றை விடுத்தோம். அதில், “ஆயிரக்கணக்கில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்ற எண்ணமும் தமிழ் மக்களிடம் இப்போது பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகிறது என்பதையும் இப்போராட்டத்தின் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

இன்று நடைபெற்ற இந்த மறியல் முதல் கட்ட போராட்டம்தான். யாழ் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார முற்றுகையை நீக்கவும், ஈழத் தமிழர் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தவும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியும் தவறுமேயானால் தமிழகம் அடுத்த கட்டப் போராட்டத்தில் குதிக்க தயார்’’ என்று தெரிவித்தோம்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய நிலையில் உலகுத் தமிழ் இனத்தின் சார்பில் இந்திய பிரதமர் இராஜிவ் காந்திக்கு 05.03.1987 அன்று தந்தி அனுப்பினேன்.

அதில் இந்திராவின் கடித்தத்திற்கு பிறகு இலங்கையில் தமிழர்கள் மீதான வன்முறை குறைந்திருக்கிறது என்று தாங்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக வந்துள்ள கருத்து திருப்திகரமாக இல்லை எங்கள் மனத்துயரத்தை போக்குவதாகவும் இல்லை இலங்கை இராணுவத்தின் தமிழர் படுகொலைகள் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருப்பது தமிழ் நாட்டு மக்களை மிகவும் கவலையடையச் செய்திருக்கிறது.

தமிழ் இனத்தையே கொன்று ஒழிக்க இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு தமது அவசரத் தந்தியில் பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன்.

கே.ஆர்.ராமசாமி

சென்னை பெரியார் திடலில் 09.03.1987 அன்று மலேசிய தேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி அவர்கள் மலேசிய அரசு பணியிலிருந்து ஓய்வு பெறப்போவதை ஒட்டி அனைவருக்கும் பாராட்டும் கழகத்தின் சார்பில் சிறப்பான விருந்துக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டது. கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை வரவேற்று உரையாற்றினார்.

நீதிபதி பி.வேணுகோபால் அவர்களும் நானும் பாராட்டுரை வழங்கினோம். எனது உரையில் மலேசியாவில் இயக்கத்துக்குத் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டுமென்று கூறினேன் அதனை அமோதித்து திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி அவர்கள் என்னுடைய உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இன்னும் தீவிரமாக இயக்கத் தொண்டாற்ற வேண்டும் என்று கூறினார்.

அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துக்கள் என்ற நூலை பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட முதற்படியை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர்  வழக்கறிஞர் இரா.சண்முகநாதன் பெற்றுக்கொண்டார்

அவர்கள் எந்த அளவுக்கு எதிர் பார்க்கிறார்களோ, அதைவிட அதிகமாகவே நான் இயக்கத்துக்குத் தொண்டாற்றுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலேசிய தி.க. தலைவர் திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி அவர்கள் நன்றியுடன் குறிப்பிட்டார்கள். விழாவில் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் மயிலை நா.கிருஷ்ணன், ஜஸ்டிஸ் வேணுகோபால் உள்ளிட்ட கழக முன்னிலைத் தோழர்களும், தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் ந.இராமநாதன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு வாழ்த்தினார்கள்.

அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவுநாளையோட்டி 16.03.1987 அன்று சென்னை பெரியார் திடலில், கணவன் மனைவிக்கு இடையே எழும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் பெரியார் வாழ்வியல் மய்யம் துவக்கவிழா நிகழ்ச்சியும் அன்னை மணியம்மையாரின் நினைவுநாள் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அன்னை மணியம்மையாரின் பேச்சுகள் எழுத்துகள் அடங்கிய ‘‘அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துக்கள்’’ என்ற நூலினை வெளியிட்டார்.

வழக்கறிஞர் இரா.சண்முகநாதன் அதனை பெற்றுக் கொண்டார். விழாவில் நான் உரையாற்றும் போது அன்னை மணியம்மையார் அவர்கள் எப்படி தன்னுடைய வாழ்நாளை தந்தை பெரியார் அவர்களுடைய நலனைக் காப்பதற்காகவும், இயக்கத்தை காப்பதற்காகவும் பாடுபட்டதையும் பேரறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றி கூறிய வைர வரிகளையும் எடுத்துக்காட்டி உரை நிகழ்த்தினேன்.

(நினைவுகள் நீளும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *