நினைவு நாள் 5.5.1914
தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் புத்தநெறிக்கு ஆக்கம் தந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாதமாகத் திகழ்ந்தவர் என்கிற முறையில் அயோத்திதாசப் பண்டிதருக்கு (1845-1914) முக்கிய இடம் உண்டு.
ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் இவரால் தொடங்கப்பட்ட இதழ் பிறகு தமிழன் என்ற பெயரில் தொடரப்பட்டது.
அவரது பகுத்தறிவு சிந்தனைகள் வினாக்களாக வெடித்துக் கிளம்பின. ஒரு எடுத்துக்காட்டு இதோ:
”ஒரே கடவுள் குடும்பம் சகல சிருஷ்டிகளுக்கும் காரணமாக இருக்க முடியுமா?
நாராயணனுக்குப் பிரம்மன் மகன், சரஸ்வதி மருமகள், பார்வதி தங்கை, சங்கரன் மைத்துனன். யானை முகனும், வேலாயுதனும் தங்கையின் குமாரர்கள் இந்தக் குடும்பத்தாரா உலகப் படைப்புக்கு காரண கர்த்தர்களாய் இருந்தார்கள்?
மும்மூர்த்திகளும், அவரவர்களின் தேவிமார்களும் காமத் தூர்த்தராய் இருக்கும் இவர்களை தேவர்கள் என்று எப்படி சொல்லக்கூடும்?
சாதாரண மனிதர்களிலும் மிகக் கேவலமான பார்ப்பனர்கள் நம்மை சிருஷ்டித்தார்கள் என்றால், அவை கல்வி கேள்விகளிற் சிறந்த தமிழர்களால் ஏற்கப்படுமா?
அயோத்திதாசப் பண்டிதர் எத்தகு சிந்தனையாளர் பகுத்தறிவாளர் என்பதற்கு இந்த வினாக்களே கட்டியங்கூறும். தமிழ், சமஸ்கிருதம், பாலி, ஆங்கில மொழிகளில் புலமை வாய்ந்தவர் அவர். பல அரிய ஆய்வு நூல்கள் அவரால் எழுதப்பட்டன. 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது தாழ்த்தப்பட்டவர்களை பூர்வத்தமிழர் என்ற பெயரால் குறிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.