(ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்து ஏப்ரல் 13ஆம் தேதியோடு ஒரு நூறாண்டு முடிந்துள்ல்ளது. அந்த நிகழ்வு பற்றி ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவு உங்கள் பார்வைக்கு..)
1919 ஏப்ரல் 6ஆம் நாள் கடையடைப்பு நடத்தப்பட்டது. மாலையில் 50 ஆயிரம் பேர் கூடிய பொதுக்கூட்டம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்டது. அடுத்த சில நாள்களில் பஞ்சாப் டெல்லியில் பெருங்கலவரங்கள், துப்பாக்கி சூடுகள்.
இச்சூழலில் ஜெனரல் மைக்கேல் ஓ டையர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். நான்கைந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. கூடினால் சுட்டுத்தள்ளச் சொன்னார்.
ஆனால், அவர் உத்தரவுக்கு எதிராய் பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டித்து, ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்த டையர் தன் அதிகாரத்தால் மக்களை அடக்கி ஒடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினான்.
ஜாலியன் வாலாபாக் மைதானம் சுற்றிலும் வீடுகள். மைதானத்திற்குள் நுழைய ஒரு சிறு வழி இருந்தது. அந்த மைதானத்திற்குள் 13.04.1919 அன்று மாலை 5.15 மணிக்கு பெருங்கூட்டம் தொடங்கியது. ஹம்ஸ்ராஜ் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
ஜெனரல் டையர் தன் படையுடன் உள்ளே நுழைந்தான். நுழைவாயில் சாத்தப்பட்டது.
”சுடுங்கள்!” என்று டையர் ஆணையிட்டவுடன் துப்பாக்கிகள் முழங்கின. குண்டுகள் கூட்டத்தினரைத் துளைத்தன. எச்சரிக்கை விடப்படவில்லை. கண்ணீர் குண்டு வீசப்படவில்லை. நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 379 பேர் மாண்டனர். 1,137 பேர் காயமடைந்தனர்.
இந்நிகழ்வு பகத் சிங்கைப் பெரிதும் பாதித்தது. அந்த இடத்தை நேரில் பார்க்க பகத்சிங் வந்தான். திடலை வெறித்துப் பார்த்தான். பின் காலை மடக்கி அமர்ந்தான். இரத்தம் கலந்த மண்ணைக் கண்ணாடி சீசாவில் நிரப்பினான். இவனைக் காணாமல் வீட்டிலுள்ளவர்கள் தேடியலைந்தனர். அப்போது இந்த கண்ணாடி சீசாவுடன் வீட்டிற்கு வந்து அதை பத்திரமாக வீட்டில் ஓரிடத்தில் வைத்தான்.
பகத்சிங்கின் நெருங்கிய நண்பனும், ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கியே தீர வேண்டுமென்ற இலட்சிய வெறியோடு இங்கிலாந்து சென்று, 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 1940ஆம் ஆண்டில், தான் நினைத்ததைச் சாதித்து, சாவை ஏற்றவனுமான இணையில்லாப் பெருவீரன் உத்தம்சிங், தன் நண்பன் பகத்சிங், ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியால் எப்படிப் பாதிக்கப்பட்டான் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த படுகொலைச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், 12 வயதினனான பகத்சிங் பள்ளிக்குச் செல்லாமல், புகைவண்டியில் ஏறி, அமிர்தசரஸ் சென்ற, அந்த இடத்தைப் பார்த்தான். அந்த இடத்திலேயே ஓர் உயிரற்றவனைப் போல் பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்த அவன், அந்த மண்ணை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டதோடு, கொஞ்சம் மண்ணை, ஒரு சின்னக் கண்ணாடிப் புட்டியில் போட்டுக் கொண்டான். அவன் வீடு திரும்பியதும், அவனுக்காக வைத்திருந்த உணவையும் மாம்பழங்களையும் உண்ணுமாறு அவன் சகோதரி கூறினார்.
எல்லாவற்றையும் விட, அவனுக்கு மிகப் பிடித்தமான மாம்பழங்களைக் கூட உண்ணாமல், அந்த இரவு அவன் உண்ணாமலேயிருந்தான். உணவு உண்ணுமாறு சொன்னபோது தன் சகோதரியை அழைத்துச் சென்று ரத்தம் கலந்த அந்த மண்ணைக் காட்டினான். அவன் தினந்தோறும், புத்தம் புதுமலர்களை அந்த மண்ணில் வைத்து, அதன்மூலம் தனக்குத்தானே எழுச்சியூட்டிக் கொண்டான்.
கொடுமைகள்தான் புரட்சியாளர்களை உருவாக்குகின்றன என்பதற்கு இவரது வாழ்வே சான்று.