உழவன் ஆப்
பருவ காலப் பயிர்கள் பயிரிடுவதில் ஏற்படும் சிக்கல்களை விஞ்ஞானத்தின் துணை கொண்டு விவசாயம் செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் உழவன் செயலி. காலநிலைக்கேற்ப எந்த மண் வகைக்கு எந்த விதையைப் பயன்படுத்தலாம்? அது எங்கே கிடைக்கும்? பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இந்த செயலியில் சோதனை முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
உழவன் செயலியுடன் ‘ஜெபார்ம்’ என்ற செயலியும் இணைக்கப்பட்டது. அதன்மூலம் விவசாயக் கருவிகள் தேவைப்படுவோர், அவற்றை வாடகைக்கு பெற்றுக் கொள்ள முடியும். டிராக்டர்கள் வைத்திருப்போர் அவற்றை இந்த செயலி மூலம் ஏழை விவசாயிகளுக்கு வாடகைக்குத் தருகின்றனர்.
இந்தச் செயலியில் வானிலை அறிக்கைகள், விவசாயப் பொருட்கள் விலை நிலவரம், மானியம், பயிர் காப்பீடு, கடன் மற்றும் நிவாரணம் உள்ளிட்ட தகவல்களையும் பெற முடியும். இது தவிர அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை வாங்கிட விரும்பும் விவசாயிகள் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது அரசு.
இந்தச் செயலியில் பதிவு செய்வோருக்கு மாவட்டம், வட்டம் வாரியாக முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வேளாண் இயந்திரங்கள் வாங்கிட மானியம் வழங்கப்படுமென கூறப்படுகிறது. இந்தச் செயலியை விவசாயிகள் மட்டுமின்றி, அனைவரும் பதிவிறக்கம் செய்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள்,
இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள், விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் தங்களது பகுதிக்கு வருகைதரும் நாள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக் கொண்டு, அவற்றை விவசாயிகளுக்கு தெரியப் படுத்தலாம்.
https://play.google.com/store/apps/details?id=agri.tnagri
– அரு.ராமநாதன்