‘நீட்’ தேர்வைத் திணிப்பது என்பது சமுக நீதியை ஒழிப்பதற்காகவே!
குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், சிறு பான்மையினருக்குத் தாராளமாக, ஏராளமாகக் கிடைக்கும் வகையில் மானமிகு தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, 30 மாவட்டங்களில், 29 அரசு மருத்துவக் கல்லூரிகளை (சகல வசதிகளுடன்) மாவட்டந்தோறும் ஏற்படுத்தி, கிராமத்து ஆண், பெண் பிள்ளைகள் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்த போது, முறைப்படி நிபுணர்கள் குழுவினை நியமித்து, பரிந்துரை பெற்று, தனிச் சட்டத்தை நிறைவேற்றி, நீதிமன்றங்கள் ஏற்கும் வகையில் சிறப்பாகச் செய்தார்.
அதனைக் கண்ட பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தின் மூலமும், ஏனைய ஆதிக்க வர்க்கத்தினரும், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும், மருத்துவக் கவுன்சிலில் ஊழல் செய்த கேத்தன் தேசாய் என்பவரும் (அவர் வீட்டில் கட்டிகட்டியாய் தங்கத்தை புலனாய்வுத்துறை எடுத்தது எல்லாம் ‘அம்போ’வானது _ இப்போது அவரே நீட் தேர்வுக்குத் தந்தை ஆகிவிட்டார்) சேர்ந்து நீட் தேர்வைத் திணித்துவிட்டனர்.
கடைநிலை மக்களின் பாதிப்பும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும்!
‘நீட்’ தேர்வுக்கு ஆயத்தம் என்ற பெயரால் பல கோடி வருமானம் ஈட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டல் ஒரு புறம் அமோகமாக நடைபெறுகிறது.
‘தகுதி’, ‘திறமை’ என்ற கொடுவாளால் நமது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கியும், மருத்துவக் கல்லூரியில் இடம்பெறாது உயிர்ப் பலி வாங்கப்பட்டுள்ளனர்.
செல்வி அனிதா, பிரதீபா, சுபசிறீ மற்றும் பெற்றோர்கள் எல்லாம் உயிரிழந்த கொடுமை மறக்க முடியாதது!
நீட் தேர்வினால் இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இடமில்லை. தேர்வு எழுதக் கூட வெளி மாநிலத்திற்கு விரட்டியதெல்லாம் வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமை!
இதனை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஆதரவாளர்களும்தான் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடுகின்றனர்.
சமுகநீதியில் உண்மையான அக்கறையுள்ள கட்சிகளை திராவிடர் கழகம் ஒன்று திரட்டியது!
‘நீட்’ ஒழிப்பில் திமுக – காங்கிரஸ் ஒத்த நிலைப்பாடு!
மாநிலத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாகத் தரப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இது உறுதி கூறப்பட்டுள்ளது.
12.04.2019 அன்று தேனியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு, மற்ற மாநிலங்களில் நீட்டை விரும்பாதவர்கள் மீது திணிக்க மாட்டோம்; ரத்து செய்வோம் என்று தெரிவித்து விட்டார்.
ஆனால் ஒப்புக்காக அ.தி.மு.க.வும், அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள பா.ம.க போன்ற ‘நீட் தேர்வு கூடாது என்று கூறும் கட்சிகளின் நிலைப்பாடு இப்போது அம்பலமாகி விட்டது. பா.ஜ.க.வின் தலைவர்கள், பிரதமர் மோடி, தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் பியுஷ் கோயல் என்ற மத்திய அமைச்சர் ஆகியோர் நேற்று (12.4.2019) நீட் தேர்வு பற்றி கூறியுள்ளது, அதிமுகவின் இரட்டை வேடத்தைக் கலைத்து, முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டது.
அவர்களது நிலைப்பாடு, மீண்டும் ஆட்சிக்கு மோடி _ பாஜக, ஆர்எஸ்எஸ் வந்தால் நீட் தேர்வு தொடரவே செய்யும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்களே!
இதற்கு இந்த கல்லுளிமங்கன்கள் _ “அதிமுக இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணியின் கொத்தடிமைகள்” என்ன பதில் கூறப் போகிறார்கள்?
இரட்டை வேடம்
பிரதமரைப் பார்த்து ‘தினத்தந்தி’ செய்தியாளர் எடுத்த பேட்டியில், “எனக்குத் தமிழ்நாட்டின் பிரச்சினை தெரியும். பாஜக தேர்தல் அறிக்கையில் பதில் கூறியுள்ளோம்” என்று மற்ற ஏதேதோ கூறி, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை கூறியதைப் போல மழுப்பினாலும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றே கூறி விட்டார். (நீட் தேர்வு விலக்கு பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவேயில்லை என்பதைத் தான் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்)
அதைவிட, பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான பியுஷ் கோயல், நீட் பற்றி கூறிய பதில் அதிமுகவை சரியாக அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது.
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.
“அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய கேட்க வில்லையே, தமிழில் எழுத வேண்டும் என்று தான் கேட்டார்கள்” என்று கூறி, “இவர்களை ஒப்புக்கொள்ளச் செய்வோம்” என்றும் கூறியுள்ளார்.
இதில் யார் அண்டப்புளுகர்? யார் ஆகாசப்புளுகர்?
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களின் கதி என்னவாயிற்று?
நிர்மலா சீதாராமன் முதல் பொன்.ராதாகிருஷ்ணன் வரை தந்த ஏமாற்று வாக்குறுதிகள் எத்தனை! எத்தனை!
மோடியும், பா.ஜ.க, ஆர்எஸ்எஸ்சும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். ராகுல்காந்தி மற்றும் தி.மு.க கூட்டணி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.
தமிழக மக்களே, இது போதாதா சமூக நீதியில் அக்கறையுள்ளவர்கள் யார் என்பதை நாம் அறிய, தெளிய! ஆதரிக்க!
– கி.வீரமணி,
ஆசிரியர்,
‘உண்மை’