குறும்படம் : சவடால்
சவடால்காரர் ஒருவரைப் பற்றிச் சொல்லும் குறும்படம் இது. பெயரும் சவடால்தான். பார்த்த உடனே ஒருவரைப் பற்றிய முன்முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் கதையின் சாரம். கதையில் மனைவி வலியுறுத்தியும் சாப்பிடாமல் செல்கிறார் சவடால் பேர்வழி. பேருந்தில் சரியான சில்லறையை கொடுத்து நடத்துநரிடம் பாராட்டுப் பெறுகிறார். தேநீர் இடைவேளையின் போது டீத்தூளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி கடைக்காரரின் கோபத்துக்குள்ளாகிறார்.
வாழைப்பழம் விற்கும் சிறுவனிடம் விலைகுறித்து விமர்சனம் செய்து அவனது கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறார். பயணத்தின்போது பேருந்தின் சாளரத்தின் வழியே எச்சிலைத் துப்பி பின்னால் அமர்ந்திருப்பவரிடம் பேச்சு வாங்குகிறார். இவரது மீசையைப் பார்த்து மற்றவர்கள் எதற்கு வம்பு என்று விலகுகின்றனர். இறங்கவேண்டிய இடம் வந்ததும் அங்கிருக்கும் கடையில் 20 ரூபாய்க்கு பால்கோவா வாங்குகிறார். ஆனால் அவர் வழியெங்கிலும் எதுவும் சாப்பிடவில்லை. புரியாத புதிர்போலத் தோற்றமளிக்கிறார். பிறகு தாளாத வெயிலில் கால்நடையாகவே வந்து ஏழ்மை நிலையில் இருக்கும் தனது மகள் வீட்டில் ஒரு குவளை கூழ் குடிக்கிறார்.
பசிக்குக்கூட செலவளிக்காமல் இறுக்கி வைத்திருந்த பணத்தை அவருடைய மகளிடம் கொடுக்கும்போதுதான் அவரது சிடுசிடுப்புக்கும், சிக்கனத்திற்கும் காரணம் புரிகிறது. தன்னை வருத்திக்கொண்டு தன் மகளை சந்தோசப்படுத்தும் தந்தையின் தியாகம் இன்னும் நிறைய சொல்லப்பட வேண்டியிருக்கிறது.
பேரனைப் பார்த்த அந்த சவடால்காரர் என்று சொல்லப்பட்டவர். இளகும் காட்சி நம்மையும் கண்கலங்கச் செய்கிறது. காட்சி சித்தரிப்புகள் மிக இயல்பாக இருக்கும்படி நரேசுகுமார் சிறப்பாக இயக்கியிருக்கிறார். பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் அவரவர் தந்தைகளின் தியாகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பார்க்க வேண்டிய குறும்படம். Behindwoods, tv presents.
உடுமலை