குடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

அக்டோபர் 16-31

எதிர்பார்த்து ஏமாந்தவர்களின் நானும் ஒருவன்

(ஜோலார்பேட்டை திரு. வரதராஜ முதலியார்) அவர்கள் பெரிய மிட்டாதார்.  தந்தை பெரியாருக்கு நெருங்கிய நண்பர்.  அவர் முதலில் புராணப் பித்தராய் இருந்து, தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டபின் ஒரு சீரிய சுயமரியதைக்காரரானார்.  அவர் ஒருமுறை சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் முற்றிலும் தப்பிதம் எனக் கூறும் பெரியோர்களைச் சந்தித்தபோது அவர்கள் எங்கள் மறுப்புகளை வெளியிட பத்திரிகை வசதியும் பணவசதியும் இல்லை என கூறினர்.  அக்குறையைச் சரிப்படுத்து வதாக திரு. வரதராஜ (முதலியார்) உறுதி கூறி அவர்களுக்குத் தனிப் பத்திரிகையோ அல்லது எந்தப் பத்திரிகையில் எழுத வசதி வேண்டுமோ அதையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.  அதற்காக நன்கொடை ரூபாய் 2,000 அளிக்க முன்வந்தார்.  அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ள அவர் குடிஅரசுக்கு எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதியைப் படித்து மகிழுங்கள்).

சுயமரியாதை இயக்கத்தார் நிகழ்த்திவரும், சொற்பொழிவுகளையும் கட்டுரைகளையும் வரைந்து அவற்றின் ஆயுதமாகிய,குடிஅரசு, குமரன், முன்னேற்றம், புதுவை முரசு, சண்டமாருதம், நாடார் குல மித்திரன்,  தமிழன் என்னும் இதழ்களில் வெளிப்படுத்தி மக்களின் மனதை மாற்றுகின்றனர்.  அக்கட்டுரைகளை மறுத்து பழைய கொள்கைகள், புராணங்கள், இதிகாசங்கள் சரியே என அறிவுக்குப் பொருந்துமாறு சொல்பவரிருப்பரென்று இவ்வேழ்ஆண்டாக, எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவனாகுமென அறிவித்து, மீண்டும் சொல்வதாவது, என் இளம்பருவ முதல் நீண்டநாளாய் நம்பி வந்தயொன்றை முறை அறியாதுவிடுவது எனில் மனமிசையுமோ?  ஆதலால் ஊக்கத்தோடு பத்திரிகைகளைக் கவனித்தேன்.  சுயமரியாதை இயக்கத்தை மறுக்கும் கொள்கையோடு பல பத்திரிகைகள் வெளிவந்தன.  பின்னால் அவையிருக்குமிடமே தெரியாதொழிந்தன.  பல பெரியார்கள் மறுப்புகள் வெளியிட்டனர்.  ஆனால், அவைகள் ஏற்றவாறும் ஒப்புமாறுமில்லை.  இதனைக் குறித்து பல பெரியார்களையும், தலைவர்களையும் சந்தித்து இவ்விஷயங்களைப்பற்றி ஆராய்ந்ததில் அவர்கள் எனக்குரைத்த சமாதானம் பின்வருமாறு: சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் முற்றிலும் தப்பிதமென தக்க ஆதாரத்தோடு மறுப்புகள் வரையும் பெரியார்கள் பலருள்ளனர்.  ஆனால், அவர்களுக்குப் பத்திரிகை வசதியும், பண வசதியுமில்லை என்று சொல்லுகிறார்கள்.  மேலே கண்ட குறைகளை நான் சரிப்படுத்துகிறேன் என்று இதனால் அறிவிக்கிறேன்.

நான் வசிக்கும் ஜோலார்பேட்டை வசதியுள்ள இடம், எனது வீட்டிற்கு எதிரில் பெரியார்கள் தங்குவதற்கென சுகாதாரத்திற்கு எவ்வித இடையூறுமில்லாது கட்டிடம் அமைத்திருக்கிறேன்.  மேற்கண்டதற்கு இசைந்து மறுப்புகள் வரைய மனமிருப்பவர் இங்கு தங்கலாம்.  உண்ணல், உடுத்தல் முதலியவை அவர் பழக்கத்திற்கு ஏற்றவாறு அளிக்க ஒருப்படுகிறேன்.  அவர்களுக்குத் தனிப்பத்திரி கையோ அல்லது எந்தப் பத்திரிகையில் எழுத வசதி வேண்டுமோ அவையும் அளிக்கிறேன்.  வைதீக, சுயமரியாதைக் கட்சிகளில் உள்ள இரு பெரியாரை பொதுவாக நியமித்து அவர்கள்பால் நன்கொடை ரூ. 2,000 அளித்து சரியென ஒப்பிய முடிவில் அத்தொகை அளிக்குமாறு இசைகிறேன்.  தகுந்த அறிவுள்ளவர்கள் கடித மூலமாகவோ, பத்திரிகைகளிலோ அறிவிக்க அல்லது நேரில்வர வேண்டுகிறேன்.

– குடிஅரசு – 19.07.1931 – பக்கம்: 21

தகவல் – மு.நீ. சிவராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *