கவிதை : தமிழினம் காக்கும் தூணாக நிற்போம்!

ஏப்ரல் 1-15 2019

குற்றங்கள் இழைக்கின்ற கோட்சே கூட்டம்

                கொலைமிரட்டல் விடுக்கிறது; கூலிக்காக

வெற்றுரைகள் பிதற்றிவரும் வீணர் கூட்டம்

                வீழ்ச்சியினைப் பரிசாகப் பெறுதல் திண்ணம்;

குற்றுமியோ ஒருநாளும் அரிசி ஆகா!

                குரைக்கின்ற பேடியர்தம் போக்கை நல்லோர்

நெற்பதராய்ப் புறந்தள்ளி ஒதுக்கி வைப்பர்;

                நிலைதாழ்ந்து விலைபோவோர் வெற்றி எய்தார்!

 

ஆரியத்தின் பிடரியினை உலுக்கி நாளும்

                ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் திமிரை வீழ்த்தி

வீரியமாய்க் களத்தினிலே வெல்வோம்; வேண்டா

                வெங்கொடுமை சாய்ப்பதற்கே வினைகள் ஆற்றி

நேரியநம் தமிழ்மரபை இனிதே மீட்போம்!

                நிகரற்ற திராவிடப்பே ரியக்கம் காப்போம்!

வேரின்றிச் செடியேது? கால்கள் இல்லார்

                விளையாட்டில் வெல்வதுவும் கானல் நீரே!

பகுத்தறிவுப் பகலவன்நம் அய்யா தொண்டர்

                பகலிரவு பாராமல் உழைப்பை நல்கும்

தகுதிமிகு நம்தமிழர் தலைவர், போற்றும்,

                தன்மான வல்லரிமா; தமிழர் மேன்மை

இகழ்பவனை, ஏய்ப்பவனை எதிர்த்து வெல்லும்

                இணையற்ற உயர்தலைவர் தம்மை ஏனோ

பகல்வேட எடுபிடிகள் மிரட்டிப் பார்க்கும்

                பண்பாட்டுச் சீரழிவைத் தகர்ப்போம் நாமே!

 

உமியணையார் ஒப்பனையில்

                                                  மிதப்போர் இந்நாள்

                உலகியலை உணராமல் உளறு கின்றார்;

தமிழினத்தின் தொன்மையினை

                                                   உயர்ந்த மாண்பைத்

                தவிடுபொடி யாக்கிடவே முயல்வோர் வீழ

நிமிர்ந்தெழுவோம்; கீழடியின் கீழ றுப்பை

                நினைவினிலே நாமிருத்தி வடவர் வஞ்சம்

அமிழ்ந்திடவே அணிதிரள்வோம்;

                                                    இனத்தைக் காக்கும்

அரணாக, தூணாக என்றும் நிற்போம்!

 

– முனைவர் கடவூர் மணிமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *