சிறுகதை : விதி வென்றதா?

மார்ச் 16-31 2019

விந்தன்

இன்று நேற்றல்ல; என்றுமே தன் முதுகில் ஏதாவது சுமந்து கொண்டு வந்தால்தான் சுப்பன் எஜமான் வீட்டுக்குள் நுழைய முடியும். உதயசூரியன் உச்சி வானத்துக்கு வரும்வரை அவன் உள்ளமும் உடலும் சோர வயலில் உழைத்துவிட்டுப் பசிக்குக் கூழ் குடிக்க வந்தால்கூட, அவனுக்கு ‘வரவேற்பு’ வாசலோடுதான்!

இந்தச் சம்பிரதாயத்தையொட்டி, அன்றும் வாசலில் நின்றபடியே, ‘அம்மா!’ என்று இரைந்தான் அவன்.

“யாரடா, அது?’’ என்று ‘டா’ போட்டுக் கேட்டாள் உள்ளே இருந்த எஜமானியம்மாள்.

வயதில் சுப்பனைவிட அவள் எவ்வளவோ சிறியவள்தான்; ஆனால், ஜாதியில் பெரியவளல்லவா? -_ அதனால்தான் அந்த ‘டா!’

அவன், ‘நான்தான் அம்மா, சுப்பன்!’ என்று தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொள்வதற்குள், வாசலில் நின்று கொண்டிருந்த ரவி, “சுப்பன் வந்திருக்கிறான், அம்மா!’’ என்றான்.

“உழைச்சு ரொம்பக் களைச்சுப் போச்சோ?’’ என்று எரிந்து விழுந்து கொண்டே, எஜமானி சுப்பனுக்கென்றே பிரத்தியேகமாகத் தயாரித்து வைத்திருந்த கூழை ஒரு ஏனத்தில் கரைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.

சுப்பன் அடக்க ஒடுக்கத்துடன் அவளுக்கு நேரே இரு கையையும் ஏந்தினான் _ அவன் பிச்சைக்காரன் அல்ல; உழைப்பாளி. ஆனாலும், ஏனோ அவனுக்கு அத்தனை அடக்க ஒடுக்கம்!

கூழைக் குடித்துவிட்டு வெளியே போகும்வரை சுப்பனையே கவனித்துக் கொண்டிருந்த ரவிக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, அவன் உள்ளே ஓடோடியும் சென்று தன் அம்மாவிடம் “ஏன், அம்மா! சுப்பனுக்கு வீடு, வாசல் ஒன்றுமேயில்லையா?’’ என்று கேட்டான்.

“-ஏண்டா, அப்படிக் கேட்கிறே?’’

“இல்லை அம்மா! அவன் எப்போது பார்த்தாலும் நம்ம வீட்டு வேலையே செஞ்சுண்டு, நம்ம வீட்டுக் கூழையே குடிச்சுண்டு, நம்ம வீட்டு வாசலில் நாய் மாதிரி காத்துண்டு கிடக்கிறானே, அதனாலே கேட்டேன்?’’

“அவனுக்கு வீடு, வாசல் இல்லாமல் என்னடா? அதோ இருக்கே ஒரு குடிசை. அதுதான் அவன் வீடு?’’

“அய்யோ! அந்தக் குடிசையில் தீப் பிடித்துக் கொண்டால்….?’’

“அவன் எழவுக்கு நாம்தான் வேறே கட்டிக் கொடுக்கணும்!’’

“அதற்கில்லை அம்மா! அவன் உள்ளேயிருந்தால்?’’

“வெளியே வந்துவிடுகிறான்?’’

“தூங்கிக் கொண்டிருந்தால்?’’

“செத்துத் தொலைக்கிறான்?’’

“அவன் செத்தால் நமக்குக் கஷ்டமில்லையோ?’’

“நமக்கென்ன கஷ்டம்?’’

“நம்ம வீட்டு வேலையை யார் செய்வா?’’

“அதற்கென்ன, எத்தனையோ கழுதைகள் இருக்கு!’’

“ஊஹூம்! கழுதைகள்கூட நம்ம வீட்டு வேலையைச் செய்யுமா, அம்மா?’’

அவள் சிரிக்கிறாள்.

“ஏம்மா சிரிக்கிறே?’’

“இல்லை, கண்ணே! நான் கழுதை என்று நிஜக் கழுதையைச் சொல்லவில்லை; சுப்பனைப் போன்றவர்களைச் சொன்னேன்!’’

“இதென்ன அம்மா! சுப்பனைப் போன்றவர்களெல்லாம் கழுதைகளா?’’

“இல்லையா? அவர்களெல்லாம் உருவத்தில் மட்டும்தான் மனிதர்களாயிருக்கிறார்களே தவிர, காரியம் செய்வதில் கழுதைகள்தான். இட்ட வேலையைச் செய்வது; வைத்த தீனியைத் தின்பது! இவற்றைத் தவிர அந்தக் கழுதைகளுக்கும் வேறு வேலையில்லை; இவர்களுக்கும் வேறு வேலை கிடையாது!’’

“அவர்கள் ஏன் அம்மா அப்படி இருக்கிறார்கள்?’’

“அது அவர்களுடைய விதி!’’

“விதி என்றால் என்ன அம்மா?’’

“முன் ஜன்மத்தில் அவர்கள் செய்த பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி பகவான் விதிக்கும் தண்டனை!’’

“அப்பாவுக்கு அந்த விதி இல்லையோ?’’

“இல்லை அவர் அதிர்ஷ்டசாலி!’’

“இந்த அதிர்ஷ்டம் சுப்பனுக்கு இல்லையோ?’’

“இல்லை.’’

“ஏன் இல்லேம்மா?’’

“அவன் பாவத்தைப் பண்ணியவண்டா!’’

“பாவம் என்றால் என்னம்மா?’’

“கெட்டதைச் செய்வது!’’

“அப்பா என்னத்தைப் பண்ணினார்?’’

“புண்ணியத்தைப் பண்ணினார்!’’

“புண்ணியம் என்றால் என்னம்மா!’’

“நல்லதைச் செய்வது!’’

“அப்பா என்ன புண்ணியம் பண்ணினார்?’’

“அதென்னமோ எனக்குத் தெரியாது. போய் அப்பாவைக் கேளு!’’

* * *

“அப்பா, அப்பா!’’

“என்னடா?’’

“முன் ஜன்மத்தில் நீ என்னமோ புண்ணியம் பண்ணினாயாமே, அப்பா?’’

“உனக்கு யார் அதைச் சொன்னா?’’

“அம்மா சொன்னா!’’

“அவளுக்கு எப்படித் தெரியுமாம்?’’

“அது எப்படியோ!’’

“நீ ஏன் அதைப் பற்றிக் கேட்கிறே?’’

“சுப்பனையும், கொஞ்சம் புண்ணியம் பண்ணச் சொல்லலாம்’னுதான் அப்பா!’’

“முன் ஜன்மத்தில் நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ? இந்த ஜன்மத்தில் எனக்கு அது எப்படித் தெரியும்?’’

“இதென்ன அப்பா! வேடிக்கையாயிருக்கே? நீ செய்த புண்ணியம் அம்மாவுக்குத் தெரிகிறது; உனக்குத் தெரியவில்லையே?’’

“ஊஹூம்; அம்மாவுக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது…!’’

“பின் யாருக்குத்தான் தெரியும், அப்பா?’’

“கடவுளுக்குத்தான் தெரியும்!’’

“கடவுளுக்கு மட்டும் தெரிந்து என்ன பிரயோஜனம் அப்பா? பாவ புண்ணியம் பண்ணினவனுக்குத் தெரிந்தால்தானே, அவன் இந்த ஜன்மத்திலாவது தன்னை மாற்றிக் கொள்ள முடியும்?’’

“போடா, போக்கிரி! அந்தக் கேள்வியெல்லாம் உனக்கு எதற்கு?’’

“இன்னும் ஒரே ஒரு கேள்வி, அப்பா! புண்ணியம் எப்படிப் பண்ணனும்னாவது உங்களுக்குத் தெரியுமோ?’’

“கோயில் கட்டுவது, குளம் வெட்டுவது, அன்னதானம் செய்வது…’’

“அடேயப்பா! இதெல்லாம் சுப்பனால் செய்ய முடியுமோ? இரண்டு கை கூழுக்கு அவன் நம்மிடம் நாளெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதே அவன் எங்கே அன்னதானம் செய்வது? அவனுக்குக் குடிக்கத் தண்ணீரைக் காணோம், அவன் எங்கே குளம் வெட்டுவது? அவனுக்கு இருக்க வீட்டைக் காணோம், அவன் எங்கே கோயில் கட்டுவது? இந்த லட்சணத்தில் கடவுள் அவனை வைத்து விட்டு ‘நீ புண்ணியம் செய்யவில்லை; அதனால் அடுத்த ஜன்மத்தில் நீ கஷ்டப்பட வேண்டுமென்பது உன்னுடைய விதி!’ என்றால், அக்கிரமமான்னா இருக்கு!’’

“இது ஏதடா, வம்பாய்ப் போச்சு!’’ என்று அப்பா எங்கோ நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

“எங்கேப்பா, போறே? கடவுளைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பவா?’’ என்று கேட்டான் ரவி.

“ஆமாம், போடா!’’ என்று அலுப்புடன் சொல்லிவிட்டு அவர் மேலே நடந்தார்.

“அனுப்பிவிட்டு வாப்பா, அப்பத்தான் அவருக்குப் புத்தி வரும்!’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினான் ரவி.

இந்தச் சமயத்தில் அங்கே வந்த சுப்பனின் மனைவியான குப்பி, “அம்மா! ரெண்டு வைத்திலைச் சருகு இருந்தாக் கொடுங்களேன்?’’ என்றாள்.

இந்த ‘விண்ணப்பம்’ காதில் விழுந்ததும் “ஏண்டி’’ உனக்கு வெற்றிலைச் சருகு இல்லாமல் பல்லெல்லாம் கொட்டிண்டு போறதோ? மாட்டுக் கொட்டாயைக் கூட்டி அலம்புன்னு சொன்னேனே, அலம்பினாயோ?’’ என்று கேட்டுக் கொண்டே உள்ளேயிருந்த எஜமானியம்மாள் வெளியே வந்தாள் _ வாழ்க்கையில் எந்த சுகத்தையுமே ஏழை விரும்பக் கூடாது என்பது அவளுடைய எண்ணம்!

“இப்பத்தான் அலம்பிட்டு வரேன், அம்மா!’’ என்றாள் குப்பி.

“ஓஹோ!’’ என்று அவள் மீண்டும் உள்ளே சென்றாள். அதற்குள் கை நிறைய வெற்றிலையை எடுத்துக் கொண்டு அவளுக்கு எதிரே வந்தான் ரவி.

“உனக்கு ஏண்டா, இந்த வேலையெல்லாம்?’’ என்று அவன் கையிலிருந்த வெற்றிலையை வெடுக்கென்று பிடுங்க ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு அழுகல், பழுத்தது, உலர்ந்தது _ இந்த மாதிரி வெற்றிலைகளாகப் பார்த்துப் பொறுக்கி நாலு எடுத்து அவள் குப்பியிடம் கொடுத்தாள்.

அதைப் பெற்றுக் கொண்ட குப்பி, “மகராஜியாயிருப்பீங்க!’’ என்று அவளை மனமார வாழ்த்தினாள்.

“அட, கடவுளே! குப்பையில் போடும் வெற்றிலையைத்தான் குப்பி போட வேண்டுமென்பது கூடவா உன்னுடைய விதி!’’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் ரவி.

அவன் குழந்தை உள்ளம் விதியின் கொடுமைகளை எண்ணிக் குழம்பியது.

* * *

சுப்பனும் குப்பியும் மட்டும் ரவியின் வீட்டில் வேலை பார்க்கவில்லை; அவர்களுடைய ஏக புத்திரனான தொப்பையும் அங்கே வேலை பார்த்து வந்தான். தினசரி எஜமான் வீட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவது அவனுடைய வேலை. இவர்கள் மூவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலைப்படுவதே கிடையாது. ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்கள் விதிதான் அப்படி யிருக்கிறதே! ‘

அன்று எழுதியவன் அழித்து எழுதப் போகிறானா!’ என்று அபத்தமான நம்பிக்கையிலே, அவர்களுடைய அறிவு அவ்வளவு தூரம் மங்கிக் கிடந்தது.

அன்று மாலை வழக்கம்போல் மாடுகளை ஓட்டிக் கொண்டு எஜமான் வீட்டுக்கு வந்தான் தொப்பை. அதற்கு முன் எத்தனையோ முறை ரவி அவனைப் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவன் கண்ணுக்குத் தொப்பை வெறும் ‘மாட்டுக்காரப் பைய’னாகவே தோன்றி வந்தான். அன்று என்னமோ தெரியவில்லை. அவனும் ‘மனித’னாகத் தோன்ற ஆரம்பித்து விட்டான் ரவிக்கு!

தொப்பையப்பனின் சாம்பல் பூத்த கருத்த மேனியும், அழுக்குப் படிந்த பரட்டைத் தலையும், அரையில் அணிந்திருந்த கௌபீனமும் அத்தனை நாட்களாக ரவியின் அகக் கண்களுக்குத் தெரியவில்லை; அன்று தெரிந்தது.

அவன் உண்பதுண்டா? உடுப்பதுண்டா? படிப்பதுண்டா? _ இந்தக் கேள்விகளெல்லாம் ரவியின் உள்ளத்தில் அத்தனை நாட்களாக எழவில்லை; அன்று எழுந்தது!

அவன் ஏன் அந்த நிலையில் இருக்கிறான்? அதற்கும் காரணம் விதியா?

விதி! விதி! விதி! இவர்களுடைய விதியை மாற்றவே முடியாதா?

சிறிது நேரம் உதட்டின் மேல விரலை வைத்த வண்ணம் வீட்டுக் கூரையை நோக்கி யோசித்தான் ரவி.

அவ்வளவுதான்; ஓ, மாற்றலாம் போலிருக்கிறதே! _ இல்லாதவனுக்கு விதி; இருப்பவனுக்கு அதிர்ஷ்டம்! _ இவ்வளவுதானே?

ஒரு கணம் ஒன்று, இரண்டு, மூன்று என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டே போனான் ரவி. எத்தனை வரை எண்ணினானோ என்னமோ கடைசியில் “ஆமாம்; அப்படித்தான் செய்ய வேண்டும்’’ என்று தனக்குத்தானே அவன் தீர்மானித்துக் கொண்டான்.’’

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. வளர்பிறைபோல ரவி வளர்ந்து வந்தான். உயரத்தில் மட்டுமல்ல; அறிவிலும்தான்!

மேற்படிப்பை முன்னிட்டுச் சென்னைக்கு வந்தான் ரவி. தட்டிக் கேட்க ஆளில்லாத ‘ஹாஸ்டல்’ வாழ்க்கை அவன் மனத்தை மாற்றவில்லை; எப்பொழுதும்போல் அப்பொழுதும் அவன் உள்ளத்தில் ஏழைச் சுப்பனின் குடும்பம் இடம் பெற்றிருந்தது. அவர்களுடைய விதி அவனை வதைத்துக் கொண்டிருந்தது.

கடைசியில் என்ன?

அவன் போட்ட புள்ளியும் மாறவில்லை; வைத்த எண்ணமும் அவனை மாற்றவில்லை. காரியம் எப்படியோ கைகூடி விட்டது.

* * *

ஈஸ்டர் விடுமுறையின்போது கிராமத்துக்கு வந்திருந்தான் ரவி. அவன் வந்ததும் வராததுமாக “ரவி! சுப்பன் சமாசாரம் தெரியுமோ? அவன் விதியை வென்று விட்டான்! இப்பொழுது அவன் நிலமும், நீரும், வீடும் வாசலுமாகச் சௌக்கியமாயிருக்கான்.

தொப்பைகூடக் கையிலிருந்த கோலை தூக்கித் தூர எறிந்துவிட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டான், படிப்பதற்கு!’’ என்றார் தகப்பனார்.

“விதியையாவது, அவன் வென்று விட்டதாவது? கடவுள் கண்ணைத் திறந்தார் என்று சொல்லுங்கோ!’’ என்றாள் தாயார்.

ரவிக்குச் சிரிப்பு வந்தது.

“கண்ணைத் திறந்தது அந்தக் கடவுள் இல்லை, அம்மா! இந்தக் கடவுள்!’’ என்று தன்னைத்தானே அவன் சுட்டிக் காட்டிக் கொண்டான். “என்ன!’’ என்று இருவரும் அவனை ஏக காலத்தில் பாதாதிகேசம் வரை பார்த்து விழித்தனர்.

“ஆமாம், அம்மா! நான்தான் இத்தனை வருஷகாலமாக நீங்கள் என் செலவுக்காகக் கொடுத்த பணத்திலிருந்து கொஞ்சம் பிடித்துச் சேர்த்து வைத்துச் சென்ற வருஷம்தான் அவனுக்கு ஒரு காணி நிலத்தையும் ஒரு ஜோடி மாட்டையும் வாங்கிக் கொடுத்தேன். அதைக் கொண்டுதான் அவன் விதியை வென்றுவிட்டான்! உண்மை இதுதான்; வேண்டுமானால் யாருக்கும் புரியாத அந்தரார்த்தம் தத்துவார்த்தமெல்லாம் செய்து பொறுப்பை ஆண்டவன் தலையில் போடப் பார்க்கலாம்; அவ்வளவுதான்! இப்பொழுது சொல்லுங்கள்; விதி வென்றதா?’’

இந்தச் சமயத்தில் “இல்லை, சாமி! வென்றது உங்க முயற்சிதானே?’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

எல்லோரும் சத்தம் வந்த திக்கை நோக்கித் திரும்பினர்.

பட்டணத்திலிருந்து ரவி வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு ஓடோடியும் வந்த சுப்பன், ஆனந்தப் பரவசத்தோடு அவர்களுடைய காலடியில் வீழ்ந்து வணங்கினான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *