மஞ்சை வசந்தன்
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்வே அர்ப்பணிப்பு வாழ்வு! அவருக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
சராசரி பெண்ணின் கனவுகள் கற்பனைகளையெல்லாம் புறந்தள்ளி, உலகின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் உற்ற துணையாய், பெற்றதாயினும் உற்ற தாயாய், பணிப் பெண்ணாய், தந்தை பெரியாருக்குப் பின் தலையேற்ற தலைவராய், தனக்குப் பின்னும் சரியான தலைவரை இந்த இயக்கத்திற்கு அளித்த ஆற்றலாளராய். இந்தியா சந்தித்த அவசர நிலை காலத்தில் அஞ்சாது, அயராது, நெஞ்சு நிமிர்த்தி இயக்கம் நடத்தி, இயக்கம் காத்து, இந்தியாவே அதிர்ந்து பார்க்க இராவணலீலா நடத்தி சுயமரியாதைச் சுடரொளியாய், இனமானம் காத்த இணையில்லா பெண்மணியாய் சரித்திரத்தில் சாதனைப் பதிவுகளைச் செய்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
அவரின் அர்ப்பணிப்பு வாழ்வாலே, உடல் நலம் கெட்டு, இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த இனத்திற்கு வழிகாட்ட வேண்டிய வாய்ப்பு இல்லாமல், 1978இல் இறப்பு எய்தினார்கள். அதுமுதல் ஒவ்வோர் ஆண்டும் அன்னையார் நினைவை நாம் போற்றி அவர் பெயரால் எத்தனையோ மக்கள் நலத் தொண்டுகளை நாம் செய்து வந்தாலும், இந்த ஆண்டு அவரின் நூற்றாண்டு என்கின்ற வகையில் வேலூரில் நடைபெற்ற தொடக்க விழா வரலாற்று சிறப்புடையாதாகும்.
நூற்றாண்டு தொடக்கவிழா
10.03.2019 ஓயாது அன்று அன்னையாரின் பிறந்த நாளில் அவரது நூற்றாண்டு தொடக்க விழா ஒரு மாநாடாக சிறப்புடன் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்றார்கள்.
திருத்தணி பன்னீர்செல்வம் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் பெரியார் கல்வி நிறுவனங்களும் அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் லிட்டில் ப்ளவர் மெட்ரிக்குலேசன் மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தினர். அதன்பின் விருது வழங்கிப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
அன்னை மணியம்மையார் பெயரில் விருதுகள்
அன்னையாரின் நூற்றாண்டு விழாவை யொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் ‘அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் விருது’ என்னும் பெயரால் புதிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் தங்கிப் படித்து, தற்போது தொண்டுள்ளத்தோடு நிர்வகித்து வரும் மானமிகு தங்காத்தாள், பெரியார் பள்ளியில் கல்வியில் மட்டுமல்லாமல் ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் பெற்றுத் திகழும் மாற்றுத் திறனாளியான அமிர்தவள்ளி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு வேலூரில் நடைபெற்ற நூற்றண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரால் வழங்கப்பட்டது.
மேலும்,திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்பு திட்டங்களில் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படும் ‘ஜாதியற்றோர்’ என்னும் பிரிவில் முதல் நபராக பதிவு செய்து போராடி சான்றிதழ் பெற்ற ம.ஆ.சினேகா, பெரியார் கல்வி நிறுவனங்களில் தொண்டாற்றி ஓய்வு பெற்று தன்னம்மையுடன் தற்போது வேளாண்மையில் ஈடுபட்டுவரும் விட்டோபாய் ஆகியோர் இவ்விழாவில் பாராட்டப்பட்டனர்.
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் தோழர் அ.அருள்மொழி அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து தொடக்க உரையாற்றினார்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.அ.முகம்மது சகி அவர்கள் கருத்துரை வழங்கினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் அன்புராஜ், ஜெயக்குமார், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.அ.முகமது சகி, மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை செயராமன், வீ.பன்னீர் செல்வம், ம.தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியன்.
தமிழர் தலைவர் உரை:
அருமை அம்மா அவர்களுக்கு நூற்றாண்டு விழா மேடை என்பது மட்டுமல்ல, இந்தக் கொள்கை வெற்றியை அகிலத்திற்குப் பறைசாற்றக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்ச்சி.
பெண் என்றால், ஆமை பெண் என்றால், ஊமை. பெண் என்றால், அடிமை என்று இருக்கக்கூடிய ஒரு சனாதன மதம் உள்ள சமுதாயத்தில், பெண்- ஆணுக்குச் சமம்
எந்த வகையிலும் பிறவிப் பேதம் என்பது அழிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்பை மட்டும் மய்யப்படுத்தவில்லை. பிறவி இழிவு ஒழிப்பு, பிறவிப் பேதம் அகற்றம் ஜாதி ஒழிப்பு இவற்றோடு,
பிராமணன் – சூத்திரன் என்ற அந்த பேதங்கள் மட்டுமல்ல, அதைவிட பஞ்சமன் என்று சொல்லப்படுகின்ற பேதங்கள் மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, ஆண் எஜமானன் – பெண் அடிமை என்ற பிறவிப் பேதம் இருக்கிறதே, அந்தப் பிறவி பேதத்தையும் நீக்கவேண்டும் என்று அளவில் பாடுபட்டார்கள்.
அன்னை மணியம்மையார் அவர்களுடைய தொண்டறத்தை நீங்கள் இங்கே காட்சியாகப் பார்த்தீர்கள். டாக்டர் ஜான்சன் அவர்களுடைய உரையை காணொலி மூலமாக நீங்கள் கேட்டு மகிழ்ந்தீர்கள். இங்கே வெளியிட்டுள்ள புத்தகங்கள் அவருடைய கருத்துகளை எவ்வளவு அழகாகக் கொடுத்திருக்கின்றன. எல்லாவற்றையும்விட, உலகத்தில் அதிகமான இகழ்ச்சி; அதிகமான ஏளனம்; மிகக் கேவலப்படுத்தப்பட்ட சொற்கள்; இவை அத்தனையும் மிகப்பெரிய இடத்தில் இருந்துகூட வந்ததுண்டு. ஆனால், அத்தனையையும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி சந்தித்தார். அவருடைய வாழ்நாளில், பல ஊர்களில், காலி முட்டையில் நிரப்பப்பட்ட மலத்தைத் தூக்கி, பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிக்கொண்டிருந்தவர்மீது வீசினார்கள்; நாற்றமடித்துக் கொண்டிருக்கின்ற உடலில், அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், தன்னுடைய சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு, இன்னும் வேகமாக முழங்கினாரே, தந்தை பெரியார் அவர்கள், அதைப்போல, வீசப்பட்ட அத்தனையையும் அன்னை மணியம்மையார் அவர்கள் ஏற்றுக்கொண்டு, முழுக்க முழுக்க தன்னுடைய தொண்டறத்தை அவர்கள் ஒரு வார்த்தைகூட பதில் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார்கள்.
அன்னை மணியம்மையார் பற்றிய ஒலி-ஒளிக் காட்சி
புரட்சிக்கவிஞர் அவர்கள், எவ்வளவு கடுமையாக விமர்சித்தார், அம்மா அவர்களுடைய திருமணத்தின்போது என்று நினைக்கின்றபொழுது,
அதே புரட்சிக்கவிஞர்,
‘‘இந்தப் பொடிப் பெண்ணை, தொண்டறம் செய்கின்ற பெண்ணை, பெரியார் கவலைப்படாமல், மூலையில் புத்தகம், சுவடுகள் விற்றுக் கொண்டிருக்கிறாரே, அந்த அம்மையார் பெரியாரைக் காப்பாற்றுவதற்காக, மாலைகள் ஏராளம் பெரியாரின் தோளின்மீது விழுகிறது. இந்தப் பாவியாவது ஒரு சிறு பூவையாவதுஎடுத்து, அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருப்பாரா? இந்தத் தொண்டறம் செய்யும் பொடிப் பெண்ணை அன்னை என்று சொல்லாமல், வேறு என்ன என்று சொல்லுவது!’’ என்று எழுதியிருக்கிறார். அதைப் படிக்கும்பொழுதெல்லாம் கண்ணீர் வரும்.
‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அய்யாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது; அய்யாவினால் சரியாக உணவு உண்ண முடியாமல் சங்கடப்படுவார்; அப்படிப்பட்ட அய்யாவை இவ்வளவுக் காலம் காத்தவர் மணியம்மையார்’’ என்று முதலமைச்சர் அண்ணா என்னிடம் கூறினார். அன்றைக்கு அய்யா அவர்கள் எழுதியவற்றை அன்றைக்கு விடுதலையை எடுத்துப் பார்த்தால் தெரியும்; ‘‘இனிமேல் நான் ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டேன்’’ என்று எழுதினார். அதற்குப் பிறகு அய்யா அவர்கள் 50 ஆண்டுகாலம் வாழ்ந்தார். காரணம், அன்னை மணியம்மையார் அவர்கள், தன்னுடைய வாழ்வை அய்யாவிற்கு அர்ப்பணித்தார்கள். அதன் காரணமாகத்தான், அம்மா அவர்கள் 60 வயதைத் தாண்ட முடியவில்லை. உடல் வலிமை இல்லை; நலிவு. நலிவோடு அவர்கள் அய்யாவைப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி எடுத்தார்களே தவிர, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்காதவர் அவர். அது சமுதாயத்திற்காக, தனக்காக அல்ல. எந்த நோக்கத்திற்காக அவரிடம் சென்றோமோ, அது நடைபெறவேண்டும் என்பதற்காக. புறநானூற்றுத் தாய் என்று கலைஞர் அவர்கள் அருமையாகப் பாராட்டி, அவருடைய கவிதை வரிகளில் சொன்னார்.
இது ஒரு பக்கத்தில் இருந்தாலும், நெருக்கடி காலத்தில், நாங்கள் எல்லாம் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அன்னையார் அவர்கள், இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, ‘விடுதலை’யும், ‘முரசொலி’யும் நெருக்கடி காலத்தில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டன. அந்த நேரத்தில், அதையும் சமாளித்துக் கொண்டு, இயக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டியாரை நெருக்கடி நிலை காலத்தில் சந்திக்கிறார் அன்னை மணியம்மையார். ‘‘எதற்காக எங்கள் தோழர்களை சிறையில் வைத்திருக்கிறீர்கள்; அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு கேட்கிறார்கள். அவர்களுடைய சந்திப்பு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
உள்துறை அமைச்சர், ஆளுநரைப் பார்க்கிறார். அன்றைய ஆளுநராக இருந்தவர் மோகன்லால் சுக்காடியா, இராஜஸ்தானிலிருந்து வந்தவர். ஆளுநர் அவர்கள், ‘‘திராவிடர் கழகத் தோழர்களை விடுதலை செய்வதற்கு நாங்கள் உத்தரவு போடுகிறோம். ஆனால், ஒரு நிபந்தனை; அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டால், அவர்களை அடுத்த நிமிடமே விடுதலை செய்கிறோம்’’ என்று சொல்கிறார். ‘‘என்ன சொல்லுங்கள்?’’ என்று அம்மா அவர்கள் கேட்கிறார்.
‘‘கலைஞர் கருணாநிதி தலைமையில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கமாட்டோம், என்று ஒரு அறிக்கை விடுங்கள்; அதுபோதும்’’ என்றார். உடனே அம்மா அவர்கள் சிங்கம் போன்று எழுந்தார்; ‘‘நாங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; எங்கள் தோழர்கள் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும் சிறையிலேயே இருக்கட்டும்; அங்கேயே மடிந்துபோகட்டும்; எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது எங்களுடைய வேலையல்ல’’ என்று சொன்னார். பெரியாரின் குரலாக அந்தக் குரல் ஒலித்தது; ஒரு வீர முழக்கம் ஒலித்தது. பல பேருக்குத் தெரியாத செய்தி இது.
எனவேதான், ஆற்றல் மிகுந்த தலைவராக, மனிதநேயம் மிக்க தாயாக இப்படியெல்லாம் இருந்திருக்கக்கூடிய அன்னையார் அவர்களுடைய நூற்றாண்டு விழா, அவர் பிறந்த மண்ணிலே இவ்வளவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நண்பர்களே, எந்த நோக்கத்திற்காக நாம் போராடினோமோ, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள், அதேபோல, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, அந்தக் கொள்கைகளுக்கு நேர் எதிரான ஒரு சூழல், கடந்த அய்ந்தாண்டுகளாக இந்த நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான், மோடியின் ரூபத்தில் இருக்கக்கூடிய பா.ஜ.க. ஆட்சி என்ற பெயராலே, ஆர்.எஸ்.எஸினுடைய ஆட்சி. சமுகநீதியை சாய்ப்பதற்காக, உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்கிறார்கள். நாளிதழ்களில் விளம்பரம் போடுகிறார்கள்; இரயில்வேயில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை; அதில் 10 சதவிகிதத்தை பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு உடனே கொடுக்கவேண்டும் என்று. இவர்கள் அடையாளம் காட்டும் ஏழைக்கு என்ன அடையாளம் தெரியுமா? ஒரு நாளைக்கு 2,300 ரூபாய் சம்பாதிக்கின்றவர்கள், மோடியின் கணக்கில் ஏழை. இது என்ன கொடுமை! காரணம், பார்ப்பனர்களுக்கு இடம் வேண்டும்; உயர்ஜாதிக்காரர்களுக்கு இடம் வேண்டும். பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார்; பிராமணன் – சூத்திரன். இதுதான் நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னாரே, அப்படியென்றால், 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டுமே, செய்தாரா?
தமிழ்நாட்டில் திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஏற்றுமதிகள் முடங்கின. புதிதாக எங்கே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன? இதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால், மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டுகின்ற ஒரு அமைச்சரவைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது நடப்பது கொத்தடிமை ஆட்சி. அவர்கள் அமைத்திருப்பது பணப்பேர கூட்டணி! இப்படியொரு அரசியல் கேவலம் எங்காவது உண்டா? எனவேதான் நண்பர்களே, வாக்காளப் பெருமக்களே, இந்த நூற்றாண்டு விழாவில் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதி என்னவென்றால்,
தமிழ்நாடு பெரியார் மண்!
தமிழ்நாடு அன்னை மணியம்மையார் மண்!
தமிழ்நாடு திராவிட மண்
தமிழ்நாடு சமுகநீதியைப் பெற்றெடுத்து, இந்தியாவிற்கே வழிகாட்டிய மண்!
வருகின்ற தேர்தல் என்பது
வெறும் அரசியல் தேர்தல் அல்ல!
ஆகவே, நண்பர்களே! நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள், வருகின்ற தேர்தல் என்பது வெறும் அரசியல் தேர்தல் அல்ல; இரண்டு கூட்டணிகளுக்கிடையே நடைபெறும் போட்டி என்று நினைக்காதீர்கள். வருங்கால சமுதாயம் மானத்தோடு உரிமையோடு அனைவருக்கும் அனைத்தும் என்பதை கொள்கையாகக் கொண்டிருக்கவேண்டுமா? எல்லாருக்கும் எல்லாமும் என்ற கொள்கை இருக்கவேண்டுமா? அல்லது வடநாட்டுக்காரர்கள், ஒருபக்கம் கார்ப்பரேட் முதலாளிகள்; இன்னொரு பக்கத்தில் பார்ப்பன பனியாக்களின் கூட்டணி; உயர்ஜாதிக்காரர்களின் கூட்டணி; அதற்காக காவி ரூபத்தில் இருக்கக்கூடிய நிலை இருக்கவேண்டுமா? என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். கொள்ளையடித்திருப்பவர்கள் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள் – பணத்திற்காக உங்களை விற்றுக்கொள்ளாதீர்கள்; நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என்று தொடர்ச்சியாக மாநில உரிமைகள் அடிபட்டுப் போகின்றன. புயல் பாதிப்பிற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டால், 1,500 கோடி ரூபாய்கூட கொடுப்பதற்குத் தயாராக இல்லை.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல்கூட தயாராக சொல்லாத ஒரு பிரதமர். அல்லது ஒரு ஆறுதல் அறிக்கையைகூட விடவில்லை. ராணுவத்தின் வெற்றியை, காவி வெற்றியாக சித்தரிக்கிறார்கள்; ராணுவம் அனைவருக்கும் பொதுவானது. அதை அரசியலாக்குவது தப்பு.
சிந்தித்து வாக்களியுங்கள்
சமத்துவமின்மை என்கிற இருள் அகல வேண்டுமானால், இந்த நாட்டிலே வாய்ப்பின்மை என்கிற இருள் அகலவேண்டுமானால், உதயசூரியனின் வெளிச்சம் ஒன்றினால்தான் முடியும்; அதன்மூலமாகத்தான் மற்ற இருள்கள் அகலும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி இருக்கிறதே, அது கொள்கைக் கூட்டணி.
எனவே, அந்தக் கூட்டணிக்கு நீங்கள் வாக்களிப்பதன்மூலமாக, வருங்கால சந்ததியினுடைய வாழ்வு பாதுகாக்கப்படவேண்டும்; வருங்கால இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவேண்டும்; வருங்காலத்தில் தமிழ்நாடு தொழிற்சாலைகளாக மிளிரவேண்டும். இவை எல்லாம் நடைபெறவேண்டுமானால், சரியான முடிவு எடுங்கள் என்று எழுச்சியுரையாற்றினார்கள்.