ஆறு.கலைச்செல்வன்
“அப்பா, நாளைக்கு சிதம்பரத்திற்கு ரயிலில்தான் போகணும். நான் பார்த்த ஜோசியர்தான் நல்ல ஜோசியர். ‘ஜாதகரத்னா’ன்னு பட்டமெல்லாம் வாங்கியிருக்கார். அவர் சொல்றபடிதான் நாம செய்யணும்’’ தந்தை மகேந்திரனிடம் திட்டவட்டமாகக் கூறினான் மணிவண்ணன்.
“என்னைவிட நீ ஒண்ணும் அனுபவசாலி இல்லை. நான் பார்த்த ஜோசியர் மட்டும் என்ன சாமான்யமானவரா? ரொம்ப வருஷமா தொழில் செய்பவர். அவர் சொன்னா சரியாகவே இருக்கும். நாம நாளைக்கு பஸ்சில்தான் போகணும்’’ மகனைப் பார்த்து அப்பாவும் தீர்க்கமாகக் கூறினார்.
“அப்பா, ரயிலில் போனா சீக்கிரமா போயிடலாம். உடம்பு வலியும் இருக்காது. டிக்கெட்டும் ரிசர்வ் பண்ணிட்டேன். பஸ்சை மறந்திடுங்க. ரயிலில்தான் போகணும்’’ என்று மீண்டும் சொன்னான் மணிவண்ணன்.
“மணிவண்ணா! ரயில் தெற்குப் பக்கமா போகுது. ஆனா, நாம நாளைக்கு தெற்குப் பக்கமா போகக் கூடாதாம். எதிர்த் திசையான வடக்குத் திசைக்குப் போய் அப்புறம்தான் தெற்கே திரும்ப வேண்டுமாம். ஜோசியர் சொன்னார்’’ என்றார் அப்பா.
“மூக்கைத் தொட தலையை சுத்தித்தான் தொடுவேன்னு சொல்றீங்க. என்னப்பா இது கொடுமை. வேணும்னா நீங்க பஸ்சில் வாங்க. நான் ரயிலில் வர்றேன்’’ என்றான் மகன்.
“முடியவே முடியாது. நாம ரெண்டு பேருமே பஸ்சில்தான் போகணும். சென்னா கேளுடா’’ மீண்டும் கடுமையாகச் சொன்னார் மகேந்திரன்.
இவர்களது வாக்குவாதங்களைக் கேட்ட மணிவண்ணனின் அம்மா இராணி மிகவும் கோபப்பட்டு பேசினார்.
“ஏண்டா தம்பி. ரெண்டு பேரும் பொண்ணு பார்க்க ஒரே ஊருக்குத்தான் போறீங்க. எப்படிப் போனால் என்ன? ரயிலில் போகணுமா, பஸ்சில் போகணுமான்னு கூடவா ஜோசியக்காரனால் சொல்ல முடியும்? நாங்க பெண்கள் கூட திருந்திட்டோம். ஆனா, நீங்க இன்னும் திருந்தாம ஜோசியம், ஜாதகம்னு அலைஞ்சிகிட்டு இருக்கீங்க. உங்க அப்பாதான் வயசானவர். ஜோசியத்தை நம்பி அலையறார். நீ இந்தக் காலத்துப் பிள்ளை. நீ எப்படிடா இந்த ஜோசியத்தை நம்பி தொலைக்கிறியோ தெரியல. அதோட இல்லாம இந்த இடம் அமைவதும் கஷ்டம்தான்னுகூட ஜோசியக்காரர் சொன்னதாகவும் சொல்றீங்க. ஏதோ ஒப்புக்கு போறீங்க போல. அதுக்கு எப்படி போனா என்ன?’’
“என் மகனுக்கு பொண்ணு பார்க்க வந்தேன். ஆனாலும் என் மகன் வர தாமதமாயிடுச்சு. நல்ல நேரமும் போயிடுச்சு. இனிமே பார்க்கவும் முடியாது. மகன் வந்தவுடனே ஊருக்கு புறப்பட வேண்டியதுதான்’’ என்று பதில் சொன்னார் மகேந்திரன்.
அம்மா பேசியதைக் கேட்ட மகேந்திரன், “அம்மா, என்னோட நண்பர்கள் வீட்டில் எல்லோருமே ஜோசியத்தை நம்புறாங்க. அப்பாவும் நம்புறாங்க. ஆனா, அப்பா நல்ல ஜோசியர்கிட்ட போறது இல்லை. நான் அறிவியல்பூர்வமாக ஜோசியம் சொல்றவர்கிட்ட போறேன். நான் சொல்றதைத்தான் அப்பா கேட்கணும்’’ என்றான்.
“டேய், முட்டாள்தனத்திற்கும் ஒரு எல்லை உண்டு. ஜோசியம் ஒரு மூடத்தனம். அதைப் போய் அறிவியல் அப்படி இப்படின்னு பிதற்றாதே. நீ ஒரு டாக்டரா இருந்துகிட்டு இப்படி பேசக் கூடாது. சரி, சரி எப்படியாவது போங்க. அப்பா பஸ்சில் வரட்டும். நீ ரயிலில் போ. அங்க போய் சேர்ந்து பொண்ணு வீட்டுக்குப் போங்க. எத்தனையோ ஜாதகம் பார்த்தீங்க. பொண்ணும் பார்த்தீங்க. பொருத்தம் இல்லை, சகுணம் சரியில்லைன்னு சொல்லி எல்லா இடத்தையும் வேணாம்னு ஒதுக்கீட்டீங்க. ஆனா ஒரு விஷயத்தில் மட்டும் இந்த முறை ஒற்றுமையா இருந்துட்டீங்க!’’ என்று சற்று நேரம் பேச்சை நிறுத்தினார் அம்மா.
“அது என்னம்மா?’’ என்று கேட்டான் மகேந்திரன்.
“ரெண்டு பேரோட ஜோசியரும் அம்மாவையோ வேறு பெண்களையோ பொண்ணு பார்க்க இந்த முறை அழைத்துச் செல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க பாரு. அதில் மட்டும் ஒற்றுமையா இருந்து என்னை அழைத்துச் செல்லாம போறீங்க. நீங்களும் உங்க ஜோசியமும்! எப்படியாவது போங்க’’ என்று கூறியபடியே அம்மா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து அந்த இடத்தைவிட்டு அகன்றார்.
மணிவண்ணனுக்குப் பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால், ஜோசியம், ஜாதகம் என்று அலைந்ததால் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இருவருமே ஜோசியத்தில் மி-குந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், இராணிக்கு அதில் துளிகூட நம்பிக்கை இல்லை. அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் இருவரும் செவிசாய்க்கவில்லை. எப்படியாவது பெண் பிடித்து திருமணமானால் போதும் என விட்டுவிட்டார்.
மறுநாள் காலை மகேந்திரன் பஸ்சிலும், மணிவண்ணன் இரயிலிலும் கிளம்பிச் சென்றனர். மதியம் சிதம்பரத்தை அடைந்த மகேந்திரன் ஏற்கனவே சொல்லிக் கொண்டபடி ஒரு பிரபல துணிக்கடை அருகே வந்து காத்திருந்தார். இரயிலில் வந்த மணிவண்ணன் இன்னும் வந்து சேரவில்லை. உண்மையில் அவன்தான் முதலில் வந்திருக்க வேண்டும். அதனால் பதற்றமடைந்த மகேந்திரன் மகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். செல்போனில் மகன் பதற்றத்துடன் பதில் சொன்னான்.
“அப்பா, ரயில் இரண்டு மணி நேரம் லேட்டா வருமாம். ரயில் என்ஜின் ரிப்பேர் ஆகி நடுவழியில் நின்னுப் போச்சு. சரி செய்ஞ்சு கிளம்ப ரெண்டு மணி நேரம் ஆகுமாம்.’’
“இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். பஸ்சில் நீயும் வந்திருந்தா இந்நேரம் லட்சணமா பொண்ணு வீட்டுக்குப் போய் பொண்ணையும் பார்த்திருக்கலாம். சொன்னா கேட்டாதானே!’’ என்று மகனை நொந்து கொண்டார் மகேந்திரன்.
நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. எங்கும் நிழலைக் காணோம். சற்று தூரத்தில் “அறிவு இல்லம்’’ என்ற பெயரைத் தாங்கி ஒரு வீடு காணப்பட்டது. வீட்டின் முன் ஒரு சிறிய மரமும் இருந்தது. அதன் நிழலில் இளைப்பாரிய அவர் வீட்டின் சுற்றுச் சுவரில் கைவைத்தபடியே நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவருக்குத் திடீரென தலை சுற்றியது. அப்படியே மயக்கமடைந்து சுவருக்கு அருகில் இருந்த இரும்பு வாயிற்கதவில் சரிந்தார்.
சுமார் அரை மணி நேரம் கழித்து கண்விழித்தபோது அவர் ஒரு கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தார். அவர் அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். மகேந்திரன் கண்விழித்து மிரட்சியடைந்ததும் ஒரு பெரியவர் அவரைப் பார்த்து கனிவுடன் பேசினார்.
“அய்யா, நீங்க எங்க வீட்டுக்கு முன் மயக்கமாயி விழுந்துட்டீங்க. நாங்க உங்களை இங்கே கொண்டு வந்து படுக்க வைச்சிருக்கோம். என்னோட தம்பி மகள் ஒரு டாக்டர். அவள்தான் உங்களுக்கு வைத்தியம் பார்த்தாள். சாதாரண மயக்கம்தான். கவலைப்படாதீங்க. உங்க செல்போனை எடுத்துப் பார்த்து உங்க மனைவிக்கும் மகனுக்கும் தகவல் கொடுத்துட்டோம்.’’
மகேந்திரனுக்கு வியப்பாக இருந்தது. இதுவரை இப்படிப்பட்ட நிலைமை வந்ததே கிடையாது. மயக்கம் ஏன் வந்தது என்பது அவருக்கு விளங்கவில்லை. இருப்பினும் அந்தப் பெரியவரைப் பார்த்து,
“நன்றி அய்யா! ரொம்ப நன்றி! எனக்குச் சரியாயிடுச்சி. என் மகனும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்திடுவான். நான் கிளம்பறேன்’’ என்றார்.
உடனே அந்தப் பெரியவர் அவரைத் தடுத்து, “வேண்டாம், வேண்டாம். இங்கேயே ஓய்வு எடுத்துக்கிட்டா நல்லது. உங்க மகனை இங்கே வரச் சொல்லிடுங்க. ஆமா, என்ன விஷயமா இங்க வந்தீங்க?’’ என்று கேட்டார்.
“என் மகனுக்கு பொண்ணு பார்க்க வந்தேன். ஆனாலும் என் மகன் வர தாமதமாயிடுச்சு. நல்ல நேரமும் போயிடுச்சு. இனிமே பார்க்கவும் முடியாது. மகன் வந்தவுடனே ஊருக்கு புறப்பட வேண்டியதுதான்’’ என்று பதில் சொன்னார் மகேந்திரன்.
“எந்தப் பெண்ணைப் பார்க்க வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’’ என்று கேட்டார் அந்தப் பெரியவர்.
“ரேவதின்னு பேரு. டாக்டரா இருக்காங்க. அந்தப் பெண்ணைத்தான் பார்க்க வந்தோம். ஆனா இப்படி ஆயிடுச்சு’’ என்று பெருமூச்சு விட்டபடியே கூறினார் மகேந்திரன்.
ஆனால் அவர் கூறியதைக் கேட்ட அந்தப் பெரியவர் பெரிதும் வியப்புக்கு உள்ளானார். பிறகு அவர் முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது. அந்தப் புன்னகைக்கு இடையில் அவர், “ரேவதி, ரேவதி. இங்கே வாயேன்’’ என்று வீட்டிற்குள் இருந்த யாரையோ அழைத்தார்.
அப்போது அங்கு வந்த ரேவதி என்ற அந்தப் பெண், “என்ன பெரியப்பா?’’ என்று கேட்டாள்.
“இதோ பார் ரேவதி. உன்னைப் பெண் பார்க்கத்தான் இவங்க வந்திருக்காங்க. இவர்தான் மாப்பிள்ளையின் அப்பா. மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்துவிடுவார். உங்க வீட்டிற்கு மாப்பிள்ளை வர லேட்டானதால் இனிமே யாரும் வரமாட்டாங்கன்னு நெனைச்சுட்டீங்க. அது உண்மைதான். ஆனால், அதேநேரத்தில் எனக்கு உடல்நலமில்லாமல் போயிட்டதால் என்னைப் பார்க்க நீங்க எல்லோரும் கிளம்பி என் வீட்டுக்கு வந்துட்டீங்க. கௌரவம் கருதி நீங்களும் மாப்பிள்ளை வீட்டாருக்கு போன் பண்ணிக் கேட்கவும் இல்ல. ஆனால் பாரு, இப்ப எல்லோருமே இங்க வரப் போறாங்க’’ என்றார் அந்தப் பெரியவர்.
மகேந்திரனுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. அதேநேரத்தில் அவர் மகன் மணிவண்ணனும் அங்கு வந்து சேர்ந்தான். நடந்த நிகழ்வுகளை மகனிடம் விவரித்தார் மகேந்திரன்.
மணிவண்ணனும் ரேவதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
அப்போது மணிவண்ணனின் செல்போன் ஒலித்தது. அவன் அம்மாதான் பேசினார்.
“மணிவண்ணா, எங்கடா இருக்கே? நான் வாடகைக் கார் வைச்சிகிட்டு சிதம்பரத்துக்கு வந்துகிட்டு இருக்கேன். அப்பா எப்படி இருக்கார்? எல்லாருக்கும் போன் பண்ணினேன். ஆனால், யாருக்கும் போன் போகலை. இப்பத்தான் லைன் கிடைச்சுது. சொல்லுடா, அப்பா எப்படி இருக்கார்?’’ பதட்டத்துடன் கேட்டார் அம்மா.
“அம்மா, பயப்படாதே. அப்பா நல்லாவே இருக்காங்க. நான் சொல்ற முகவரிக்கு வாங்க’’ என்று அந்த வீட்டு முகவரியை அம்மாவிடம் தெரிவித்தான் மணிவண்ணன்.
சிறிதுநேரத்தில்அம்மா பரபரப்புடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.
“உடம்புக்கு என்னாச்சு. எப்படி இருக்கீங்க?’’ என்று படபடப்புடன் கேட்டுக்கொண்டே கணவரின் அருகில் வந்து அமர்ந்து கேட்டார்.
“எல்லாம் சரியாயிடுச்சி ராணி. பதட்டப்படாதே. நடந்ததை சொல்றேன் கேளு’’ என்று மனைவியை அமைதிப்படுத்திய மகேந்திரன் நடந்தவைகளை மனைவியிடமும் விவரித்தார்.
நிம்மதியடைந்த இராணி ரேவதியை அழைத்து அருகில் உட்கார வைத்துக்கொண்டார். அவருக்கு ரேவதியை மிகவும் பிடித்துவிட்டது.
கணவரையும் மகனையும் பார்த்தபடி பேசினார் இராணி.
“ஜோசியக்காரங்க சொன்னது எல்லாமே தப்பாயிடுச்சி பார்த்தீங்களா?’’ நான் வரக்கூடாதுன்னு சொன்னாங்க. ஆனாலும் நான் வந்துட்டேன். மணிவண்ணன் ரயிலும் வரலை. காரில்தான் வந்திருக்கான். நீங்க மட்டும்தான் பஸ்சில் வந்திருக்கீங்க போல. இந்த இடம் அமைவதும் சந்தேகம்னு ஜோசியக்காரங்க சொன்னதும் பொய்யாயிடுச்சின்னு நெனைக்கிறேன்.’’
இதைக்கேட்ட மகேந்திரன் பலமாக சிரித்தார். பிறகு நிதானமாகப் பேசினார்.
“இராணி, நானும் பஸ்சில் வரலை. நான் வந்த பஸ்சும் ரிப்பேர் ஆயிடுச்சி. அதனால் நேரமாயிடும்னு நெனைச்சி வடகைக் கார் வைச்சிக்கிட்டுத்தான் வந்தேன். ஜோசியக்காரங்க சொன்னது எதுவுமே பலிக்கலை. இனிமே நான் ஜோசியக்காரர் பக்கமே போகமாட்டேன்.’’
அப்பா கூறியதைக் கேட்ட மணிவண்ணனும், ”நானும்தான் இனிமே ஜோசியக்காரங்க பக்கம் போகமாட்டேன்’’ என்றான். இப்படி கூறியவனின் பார்வை அப்படியே ரேவதியின் மீது பதிந்தது.