நேயன்
அண்ணல் அம்பேத்கரை தந்தை பெரியார் எந்த அளவிற்கு ஏற்றிப் போற்றி எழுதினார் என்பதற்கு கீழ்க்கண்டவற்றைப் படித்தாலே எவரும் எளிதில் அறியலாம்.
1925ஆம் வருஷத்திலே இந்த நாட்டில் ‘சுயமரியாதை இயக்கம்’ தோன்றியது. இந்த நாட்டிலே மதத்தை எதிர்த்து, மற்ற பேதங்களை எதிர்த்துக் காரியம் செய்வதென்றால், அவ்வளவு கஷ்டமல்ல; மக்களுக்குள் நீண்ட நாட்களாகவே அந்த உணர்ச்சி இருந்து வந்திருக்கிறது என்பதால். ஆனால், வடநாட்டில் அப்படியல்ல.
வடநாட்டில் இருக்கிற இந்த பேதத்தைப் பற்றி, இழிசாதித் தன்மையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ‘சூத்திரன்’, ‘பஞ்சமன்’ என்றால் ஏதோ ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ பட்டம் என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிற மக்கள் வாழும் நாடு அது. அங்கு இந்த உணர்ச்சியைக் கிளப்புவதென்றால் கடினமான காரியமாகும். ஆனால், அங்கேயே 1927, 1928லேயே அம்பேத்கர் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசியிருக்கிறார். நாசிக்கில் கூடிய ஒரு மாநாட்டில் இராமாயணத்தைப் போட்டுக் கொளுத்தியிருக்கிறார். (‘விடுதலை’ 16.5.1952)
1930லே என்று நினைக்கிறேன். ‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு. இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லீம் ஆகவேண்டும்; நானும் முஸ்லீம் ஆகப் போகிறேன்’ என்று அவர் சொன்னார்.
அப்போது, தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், ‘நீங்கள் ஒண்டியாகப் (தனியாக) போகக்கூடாது. குறைந்தது ஓர் இலட்சம் பேரோடு மதம் மாறவேண்டும். அப்போதுதான் முஸ்லீம் மதிப்பான். இல்லாவிட்டால் தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்கமாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முஸ்லீம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவு பற்றி நீங்கள் பேசினால், ‘முஸ்லீம் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதா?’ என்பதாகக் கிளப்பி விடுவார்கள். ஆகையால், ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும்போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்கள் தருகிறேன்’ என்பதாகத் தந்தி கொடுத்தேன். (‘விடுதலை’ 16.5.1952)
உள்ளபடி சொல்லுகிறேன் இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால், அது தோழர் ஜின்னா அவர்களிடமும், தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான். தோழர் ஜின்னாவிட மிருந்து விடுதலை பெற்று விட்டார்கள். ஆனால், அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெற முடியவில்லை. அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார். (‘விடுதலை’ 16.5.1952)
டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது. இன்று மட்டுமல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான் கூறியிருக்கிறேன். 1930 முதலே எனக்கு அவரைத் தெரியும். நமது ‘குடிஅரசு’ ஏட்டில் என்னென்ன கருத்துக்கள் வருமோ அவைகளை எல்லாம் அவர் பேசியிருக்கிறார். நமக்கு ஏற்ற நண்பர் என்பதை எண்ணி அவரை நான் பாராட்டி வந்தேன். நமது ‘குடிஅரசி’ல் அவரைப் பாராட்டி எழுதியதைப் பார்த்துத்தான் தாழ்த்தப்பட்டவர்களே அவரை உணர்ந்தார்கள். (‘விடுதலை’ 20.6.1972)
மறைந்த பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்து மதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர்களின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல, அவைகளைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பலமாகவும் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதியாகவும் பலமாகவும் இலட்சியங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாக, பார்ப்பனர் போற்றிப் பிரச்சாரம் செய்யும் ‘கீதை’ என்பதை ‘முட்டாள் உளறல்’ என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.
இப்படிச் சில விஷயங்களில் மாத்திரமல்ல, பல விஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ, அதே அபிப்பிராயம்தான் எனக்கு இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப்பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதும் உண்டு. (‘விடுதலை’ 22.02.1959)
பர்மாவில் நடந்த உலக பவுத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து, ‘என்ன இராமசாமி, நாம் இப்படிப் பேசிக்கொண்டே இருப்பதால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள், நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம்’ என்றார்.
நான் சொன்னேன், ‘ரொம்பச் சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால், தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறேன். இந்துக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும், இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்துகொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும், ‘நீ அதைச் செய்யக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால், நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால், அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே, நான் வெளியில் இருந்துகொண்டு புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்’ என்பதாகச் சொன்னேன்.
என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று மாத்திரம் சொல்லி வரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான சாதி, மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லிவருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார். (‘விடுதலை’ 22.2.1959)
நான் பம்பாயில் சுற்றுப் பயணம் செய்தபோது ‘அகில இந்திய முஸ்லீம் லீக்’ தலைவர் ஜனாப் முகமது அலி ஜின்னாவையும், ஆதி திராவிட சமூகத் தலைவர் டாக்டர் அம்பேத்கரையும் சந்தித்து சில மணி நேரங்கள் அவர்களுடன் மனம் விட்டுத் தாராளமாகச் சம்பாஷித்தேன்.
நாங்கள் காங்கிரஸின் ஆரம்பம் முதல் அரசியல் நிர்வாகத் திறமையின்மை வரை பல்வேறு விஷயங்கள் பற்றிச் சம்பாஷித்தோம். ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் காங்கிரசைப் பற்றிக் கூறிய அபிப்பிராயங்கள் என் சொந்த அபிப்பிராயத்தை ஒத்தவையாக இருந்தன. நாங்கள் மூவரும் காங்கிரசின் செல்வாக்கினால் ஏற்படும் தீங்குகளை அகற்ற ஒன்றுகூடி முயற்சிப்பதென முடிவு செய்தோம். (‘குடிஅரசு’ 26.1.1940)
கட்டாய இந்தி சம்பந்தமாக என் கருத்துக்களை ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் ஆதரித்தனர். கட்டாய இந்தித் திட்டம், நம் கலைகளுக்கு விரோதமாக, பிராமண மதத்தையும், கலைகளையும் பலப்படுத்தி விஸ்தரிக்கும் ஒரு குறுகிய நோக்குள்ள திட்டமென்று நான் அபிப்பிராயப்படுவது போன்றே, ஜனாப் -ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் அபிப்பிராயப்பட்டனர். நான் நமது மாகாணத்தில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மீண்டும் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்ட விஷயமாகப் பிரஸ்தாபித்தபோது ஜனாப் ஜின்னா அவர்கள், ‘நீங்கள் என் பூரண ஆதரவைப் பெறுவீர்கள்’ என்று கூறினார். இவ்விஷயத்தில் டாக்டர் அம்பேத்கரும் என் அபிப்பிராயத்தை ஆதரித்தார். (‘குடிஅரசு’ 26.1.1940)
(தொடரும்…)