ஆசிரியர் பதில்கள் : பணத்திற்கு வாக்களித்து உரிமைகளை இழக்கக் கூடாது!

மார்ச் 1-15 2019

 

கே:       தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் அது குற்றம், தண்டனை. அதையே ஆளுங்கட்சி ‘நிவாரணம்’ என்ற பெயரில் கொடுத்தால்?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           ‘தானிக்குப் பேர் ஏமி’ என்ற தெலுங்குப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! தேர்தல் அறிவிப்பதற்கு முன் இது அவசர அவசரமாகத் தரப்படுவதிலிருந்தே புரியவில்லையா?

கே:       பெரியார் பேருரையாளர் அய்யா ராமநாதன் அவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி போன்று, அய்யாவின் கொள்கை அகிலமெங்கும் பரவிடும் வகையில் இக்கால இளைஞர்கள், மாணவர்களுக்கு ஏதுவாக இன்றைய கணினி யுகத்திற்கேற்ப பெரியார் கணினி வழிக் கல்லூரி தொடங்கப்படுமா?

                – மன்னை சித்து, மன்னார்குடி-1

ப:           நல்ல யோசனை _ ஏற்கனவே ‘பெரியாரால் வாழ்கிறோம்’ இணையத்தில் உள்ளது. தங்கள் யோசனைப்படி விரிவாக்குவோம்.

கே:       தி.மு.க., அண்ணா தி.மு.க., ஆட்சியை மிக கேவலமாகப் பேசி குறைகூறிய கட்சி மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் சேர்ந்துள்ள கேவலத்தை, சுயநலத்தை மக்கள் நிராகரிக்கத்தானே செய்வர்?

                – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப:           சென்றவர்கள் வெட்கத்தை மறந்தாலும் வாக்காளர்கள் கூச்சப்பட்டு நிச்சயம் இத்தகைய ஏலதாரிகளைப் புறக்கணிப்பது நிச்சயம்!

கே:       மனு, ஸ்மிருதி போன்ற அவலங்களை சிறு துண்டறிக்கையாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்பும், அவற்றின் மீது வெறுப்பும் உண்டாக்க வழி செய்வீர்களா?

                – மா.சண்முகசுந்தரம், மதுரை

சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

தலைமையில் மனு தர்மம் எரிப்பு போராட்டம்

ப:           நிச்சயம் செய்வோம். யோசனைக்கு நன்றி!

கே:       ‘அறிவியல் உலகம்’ நகைக்குமே என்ற எண்ணம் துளியுமின்றி, இராமர் கோயில் கட்டுவதில் காவிகள் இவ்வளவு தீவிரம் காட்டுவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதுதானே?

                – பா.சுந்தர்ராஜன், உறையூர்

ப:           இது ஒன்றுதானா மோடி ஆட்சியில் அரசியல் சட்டவிரோத நடைமுறை. 10சதவிகித இடஒதுக்கீடு, முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் என்ற தேர்தல் வித்தை -_ அரசியல் சட்டத் திருத்தமே அதற்கு முற்றிலும் முரண்தானே இப்படி எத்தனையோ ந(க)டந்த 5 ஆண்டு ஆட்சியில்!

கே:       புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடைபெருகிறதே இது மதக் கலவரத்திற்குத் துவக்கமா?

                – எஸ். தமிழரசன், வடலூர்

ப:           தீவிரவாதம்தான் எதிரியே தவிர, அதற்காக அப்பாவிகளைத் தாக்குவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல; வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

கே:       இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர்களில் 62 பேர்தான் பெண்கள், 2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 9% மட்டுமே பெண்கள். பெண்கள் அதிகம் தேர்வு பெற பெண்களுக்கென்று தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியது கட்டாயம் அல்லவா?

                – கே.செல்வமணி, வேலூர்-2

ப:           ஓட்டுப்போடும் பெண்களிடம் இந்த உரிமை உணர்வு பெருகவில்லையே! ஏதோ, சில ரூபாய் நோட்டுக்கு அவர்கள் மயங்கி வாக்களித்து, உரிமையைக் கோட்டை விட்டுவிடுகிறார்களே!

தம்பிதுரை

கே:       பி.ஜே.பி. எதிர்ப்பில் தாண்டிக் குதித்த தம்பிதுரை பா.ஜ.க. கூட்டணி அமைத்ததும் பி.ஜே.பியை ஆதரிக்கிறாரே எல்லாம் நாடகமா?

– க.அருள், திண்டிவனம்

ப:           சண்டைக்குப் போனவர்களில் ஒருவர் தன் மனைவியிடம் சொன்னாராம்! “மற்றவங்க துப்பாக்கியை (எதிரி) பிடுங்கி வைத்தான்; என் துப்பாக்கியை வாங்கி வைத்தான் என்று! (மற்றவர்களாவது முண்டி, முரண்டு பிடித்து பிறகு தோற்று இருக்கிறார்கள். இவரோ கேட்கும் முன்பே கொடுக்கத் தயராக இருந்ததால்’’ வாங்கி வைத்தனர்.) அந்தக் கதை போன்றவர் தம்பிதுரை. எல்லாம் மக்களவைத் தேர்தலில் புரியும்.

கே:       10% உயர் ஜாதியினர் வருவாய் அடிப்படை ஒதுக்கீட்டை உடனடியாக, வேகமாக பி.ஜே.பி அரசு அமல்படுத்துகையில் உச்ச நீதிமன்றத்தின்வழி அதைத் தடுப்பதில் தாமதம் ஏன்?

– பா.மகிழ், சைதை

ப:           தயவுசெய்து விளங்கிக் கொள்ளுங்கள். அரசியல் சட்ட திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் – தடையாணை வழங்குவது இல்லை. முழு விசாரணை நடந்த பின்பே முடிவு வரும். காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை; வரும் பொதுத் தேர்தலில் மோடி அரசு தோற்கடிக்கப்பட்டால் இது, தானே புதைகுழிக்குச் செல்வது உறுதியாகும்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *