புதுக்கோட்டைமாவட்டம் -_ வீரப்பட்டி ஒன்றியத்தில் உள்ள காலாடிப்பட்டி சத்திரம் எனும் சிறிய கிராமத்தில் வசிப்பவர் மல்லிகா.. அரசின் ‘புதுவாழ்வு’ திட்டம் மூலம் தன் சமூகப் பணியைத் தொடங்கிய இவர் கடந்த 5 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறார். கிராம மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
“என் பெற்றோருக்கு ஒன்பது பிள்ளைகள். நான் சின்ன வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்குத் தொழில் விவசாயம். அவருடன் அண்ணன்களும்தான் எங்களைப் படிக்கவைத்து ஆளாக்கினார்கள். எனக்குப் பிறவியிலேயே குறைபாடு, மிகவும் குள்ளமாக இருப்பேன். என் தம்பிக்கும் இந்தக் குறைபாடு இருந்தது. எனக்கு 30 வயது ஆன பிறகுதான், இந்தக் குறையை எண்ணி முடங்கிக் கிடக்கக் கூடாது என்ற உத்வேகம் ஏற்பட்டது. என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதற்கு, அரசின் ‘புதுவாழ்வு’ திட்டம் துணைபுரிந்தது என்கிறார்.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்களின் திறன்களை வளர்ப்பதற்கு வழிகாட்டுதல், வாழ்வாதார மேம்பாட்டிற்கு மக்களுக்குத் தேவையான தொழில்களில் நிதி உதவியுடன் முதலீடு செய்து சந்தைப்படுத்துதல் போன்றவை முக்கியச் செயல்பாடுகளாகும்.
அடையாள அட்டை வாங்கித் தருவது, உதவித் தொகைகள் பெற்றுத் தருவது, சான்றிதழ்கள் விண்ணப்பித்து தருவது என பல்வேறு பணிகள் இருக்கும். இங்கே மாற்றுத் திறனாளிகளின் நிலை மிகவும் மோசமானது. வெளியுலகம் பெரிதாகத் தெரியாததால் வீட்டிலேயே முடங்கும் நிலை. அவர்களை அணுகி, அவர்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலையும் உதவியையும் செய்வேன். குழுக்களை அமைத்து தொழில் தொடங்குவதற்கு அரசுத் திட்டங்களில் கடன்களை ஏற்பாடு செய்து தருவது, தனி நபர்கள் கடனுதவித் திட்டங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருப்பது உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்’’ என்று கூறும் மல்லிகா. தன் குடும்பத் தேவைக்காக நூறு நாள் வேலைப் பணியில் பதிவேடு எழுதுவது முதலான நிர்வாகப் பணிகளில் துணைபுரிகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு கிராமங்களில் கழிப்பிடத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுப் பாடங்களையும் நடத்துகிறார். இவரது சமூகப் பணிக்கு சமீபத்தில் விருது கிடைத்ததை உத்வேகமாக எண்ணுகிறார் மல்லிகா.
டாடா தேசிய இணைய கல்விக் கழகம், இந்தியாவின் 9 மாநிலங்களில் இருந்து 34 பெண்கள் உட்பட 74 கல்விக் கழகப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்தது. இதில், தமிழகத்தில் இருந்து விருது பெற்றவர்களில் மல்லிகாவும் ஒருவர். சமுதாயத்தில் மிக எளிய மனிதராக பல்வேறு துறைகளில் ஆற்றியுள்ள பங்கினையும், மக்கள் நலனுக்கு ஆற்றிய மகத்தான சேவையைக் கவுரவிக்கும் வகையிலும் இவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
“நான் சிறுமியாக இருக்கும்போது என் தோற்றத்தைக் கருதி வெளியே போகப் பயப்படுவேன். மற்றவர்களைப் போல் வாழ முடியவில்லை என்ற கவலை வெகுவாக இருந்தது. ஒரு நாள் மனத்தடைகளை உடைத்துக்கொண்டு சமூக வெளியில் பயணிக்கத் தொடங்கினேன்.
என்னைச் சுற்றியுள்ள மாற்றுத் திறனாளிகள் என் உதவியைக் கூட நாடாத வகையில் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு அவர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். நிச்சயம் செய்வேன்’’ என்று கூறினார் ‘உயர்ந்த மனுஷி’ மல்லிகா.
தகவல்: சந்தோஷ்