அன்னை மணியம்மையார்
பிறந்த நாள்: மார்ச் 10, 1920
“அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பதரிது” என்றார் அவ்வைப் பிராட்டியார். இந்த அரிதான மானிடப் பிறப்பை பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம், இறந்தோம் என்று கழித்தவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சிலர் மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக, பொருள் நிறைந்ததாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு சிலரில் அன்னை மணியம்மையாரும் ஒருவர். மற்ற பெண்களின் வாழ்க் கையிலிருந்து இவரது வாழ்வும், பயணமும் மிகவும் வித்தியாசமானது.
வேலூரைச் சேர்ந்த கனகசபை என்ற ‘பெருந்தகையார்’ பெரியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர். இவருக்கும் பத்மா அம்மையாருக்கும் மகளாக 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்தவர்தான் மணியம்மையார். பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. தனித்தமிழ் ஆர்வலர் கு.மு. அண்ணல் தங்கோ காந்திமதி என்ற பெயரை, அரசியல்மணி என்று மாற்றம் செய்தார்.
அம்மையாரின் தந்தை கனகசபை பெரியாருக்கு நலம் விசாரித்து கடிதம் எழுதுவது உண்டு. ஒருமுறை பெரியாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவி செய்ய யாருமில்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனை படித்த கனகசபை துடித்துப் போனார்.
1943ஆம் ஆண்டு முதல் அம்மையார், பெரியாரின் அணுக்கச் செயலாளராக, தொண்டராகப் பணி யாற்றத் தொடங்கினார். ஏற்கெனவே பெரியாரின் கொள்கைகளாலும் பேராட்டம் நிறைந்த வாழ்க்கையாலும் ஈர்க்க ப்பட்ட அவர் இந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
பெரியார் மற்றும் இயக்கம் தொடர்பான வரவு செலவு கணக்குகளை கவனித்துக் கொள்வது, பெரியாரின் சொற்பொழிவுகளுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துத் தருவது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுப்பது, கூட்டங்களில் புத்தகங்கள் விற்பது – இதுதான் அம்மையாரின் பிரதான பணியாக இருந்தது.
பெரியாருக்கு உடல் நலம் குன்றியபோது, அவரது படுக்கையைச் சுமப்பது. சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்தார். இதுபற்றி பின்னாளில் மணியம்மையார் இப்படிக் குறிப்பிட்டார்.
“அவர் தொண்டுக்கு முழுக்க, முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி அந்தக் குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்”.
இளம்வயதில் ஒரு முதியவருக்குத் தாயானது அம்மையாரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?
பெரியாருக்கு உதவியாளர் என்ற வட்டத்துக்குள் நின்று விடாமல் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக, எழுத்தாளராக அம்மையார் விளங்கினார். நாகம்மை யாருக்குப் பிறகு பெரியாருக்குப் பின்னால் பெண்களை திரட்டுவதில் பெரும்பங்கு கொண்டார். 1944ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டில் “இரண்டும் ஒன்றே” என்ற தலைப்பில் கந்த புராண இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.
இதுவல்லாமல் நாட்டு நடப்புகள் குறித்த தனது கருத்துக்களை அவ்வப்போது குடிஅரசில் வெளியிட்டு வந்தார். 1948ஆம் ஆண்டு மொழி உரிமைப் போர் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த போராட்டத்துக்கு அம்மையார் தலைமை தாங்கினார். தடையை மீறிய தாகக் கைது செய்யப்பட்ட அம்மையார் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறையில் மூன்று மாதம் தண்டனை அனுபவித்தார். 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை தலைமை தாங்கி நடத்தினார்.
“1948ஆம் ஆண்டு மொழி உரிமைப் போர் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த போராட்டத்துக்கு அம்மையார் தலைமை தாங்கினார். தடையை மீறிய தாகக் கைது செய்யப்பட்ட அம்மையார் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறையில் மூன்று மாதம் தண்டனை அனுபவித்தார். 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை தலைமை தாங்கி நடத்தினார்.”
இதே ஆண்டில் ஜூலை 9ஆம் நாள் தந்தை பெரியார் மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதுவரை கே.அரசியல் மணி என்று அழைக்கப்பட்ட அம்மையாரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று பெயர் மாற்றினார் பெரியார்.
பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விமர்சனங்கள் எழுந்தன. பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி எழுதியும், பேசியும் வந்தனர். ஆனால் பெரியார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார். தனது திருமணம் பற்றி அவர் இப்படிக் கூறினார்.
“மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலனை பொதுத் தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டு மென்று என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்து கொள்கிறேன்” என்றார்.
சில காலத்திற்குள் விமர்சனங்களும், சர்ச்சைகளும் மறைந்து போனது.
திருமணத்திற்குப் பிறகு அம்மையார் தீவிர இயக்கப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். 1954ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக பெரியாரால் நியமிக்கப்பட்டார். அதோடு ‘விடுதலை’ இதழின் பதிப்பாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் பணியாற்றினார்.
1958ஆம் ஆண்டு “இளந்தமிழா புறப்படு போருக்கு” என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்காக, அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மணியம்மையாருக்கு பதிப்பாசிரியர் என்ற வகையில் 100 ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆனால் அம்மையார் அபராதத்தை கட்ட மறுத்து 15 நாள் சிறை தண்டனை அனுபவித்து தான் ஒரு சிறந்த தன்மானமிக்க பத்திரிகையாசிரியர் என்பதை நிரூபித்தார்.
(தொடரும்)