தலையங்கம்

மார்ச் 1-15 2019

திராவிடர் கழக மாநாடுகள் வாகை சூடின!

இத்திங்கள் (பிப்ரவரி) 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் திராவிடர் கழகச் சார்பில் நடைபெற்ற திராவிடர் கழக, சமுகநீதி மாநாடுகள் _- வரலாறு படைத்து விட்டன என்றால் மிகையல்ல!

முக்கியமாக அம்மாநாட்டின் சிறப்புகளில் தலையாயது திராவிடக் கொள்கை அறிக்கை பிரகடனம் (Dravidian Manifesto) அறிவிப்பும்  அதற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பும் ஆதரவும்.

பங்குகொண்ட கட்சிகளில் பலரும் அதனை ஏற்று வழிமொழிந்ததுபோல் ஆற்றிய உரைகள், இது ஒரு வரலாற்றுக் கொள்கை ஆவணம் என்பதற்கு- சிறந்த சான்றுகளாகும்!

இரண்டு மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் கலந்துகொண்ட அத்துணைக் கட்சித் தலைவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டி வழிமொழிந்து உரையாற்றியது தனித்ததோர் வரலாற்றுப் பெருமையாகும்!

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் நூற்றாண்டின் முன்னோட்டக் கருத்தரங்கம் நம் மாநாட்டின் வெற்றி மகுடத்தில் பதிக்கப்பட்ட முத்து ஆகும்!

தி.மு.க. தலைவராக, முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞருக்குப் பின், பொறுப்பேற்ற  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மதவெறி, ஜாதிவெறி, பதவி வெறிச் சக்திகளுக்கும், பார்ப்பன ஆதிக்கச் சக்திகளுக்கும் முகத்தில் அறைந்தது போன்று செய்த கொள்கைத் திட்டப் பிரகடனம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய சிறப்புடைய ஒன்றாகும்!

பெரியார் திடல்தான் கலங்கரை வெளிச்சமாய் நின்று தி.மு.க.வுக்கு வழிகாட்டும் என்ற அவரது பிரகடனம் போன்ற முழக்கம், திராவிடர் இயக்க வரலாற்றுத் தொடர்ச்சியாய் என்றும் நிற்கும் தெளிவுமிக்க ஒன்றாகும்!

பார்ப்பன ஏடுகளும், சில எழுத்தாளர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், “திராவிடர் கழகத்திலிருந்து சற்றே விலகி நில்லும் பிள்ளாய்’’ என்ற வீண் அறிவுரையை வழங்கினர்.

அவர்கள் இதன்மூலம் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியிருப்பார்கள் என்பது நிச்சயம்!

கடுமையாக உழைத்த கழகச் சிங்கக் குட்டிகளுக்கு இது நல்ல கொள்கை விளைச்சலின் அறுவடையாகும்! பரிசாகும்!

வருகின்ற தேர்தலில் மதவெறி, ஜாதிவெறி, பதவி வெறிச் சக்திகளைத் தோற்கடிக்க விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள், சரியான நேரத்தில், சரியான வழிகாட்டுதலாக அமையும் என்பது நிச்சயம்!

– கி.வீரமணி,

ஆசிரியர்,

‘உண்மை’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *