டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்‘’ எனும் தலைப்பில் ஆழமானதொரு உரையினை ஆற்றினார்.
அன்று (23.11.1946) ‘சேலம் நகராட்சி கலைக் கல்லூரியில் தத்துவ விளக்கம்‘ எனும் தலைப்பில் தந்தை பெரியார் ஆழமானதொரு உரையாற்றினார். இன்று (4.2.2019) டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் “தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்‘’ எனும் தலைப்பில் பெரியார்தம் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆழமானதொரு விளக்க உரையினை வழங்கினார்.
டில்லி பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறை அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தத்துவத் துறையின் பேராசிரியர் பி.கேசவகுமார் தலைமை வகித்தார். முனைவர் ஆயிசா கவுதம் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
டில்லி பல்கலைக் கழக மாணவர்கள், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் பல துறை சார்ந்த பேராசிரியப் பெருமக்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் தமிழர் தலைவர் உரையினை செவிமடுத்தனர்.
மேலும், கூட்டத்தில் கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்மகுமார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரது உரையினைக் கேட்க வருகை தந்திருந்தனர். ஏறக்குறைய 70 நிமிடங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்பற்றி விளக்க உரையாற்றினார். அதற்கடுத்து 20 நிமிடங்கள் வருகை தந்தோரின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் விடையளித்தார்.