கே: டாக்டர் அம்பேத்கரைத் தவிர இதுவரை வேறு ஒரு ஒடுக்கப் பட்டோருக்கும் ‘பாரத ரத்னா’ விருது தரவில்லையே இதைப் பற்றி தங்கள் கருத்து?
– மு.இனியன், சிறுவரப்பூர்
ப: அம்பேத்கருக்குக் கூட காலந்தாழ்ந்து அதுவும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில்தானே தரப்பட்டது!
கே: பட்டேல் சிலைரூ.4,000 கோடி. கும்பமேளா ரூ.7,100 கோடி. மேலும், ராமன், அனுமன் சிலைகளுக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறதே மக்களுடைய வரிப்பணம் வீணாவதைத் தடுக்க சட்டப்படி வழியுண்டா? அல்லது தேர்தல் மூலம்தான் தீர்வா?
– சி.பரசுராமன், சென்னை
ப: ஆமென்! Make in India என்னவாயிற்றுஎன்ற கேள்வி காற்றினிலே வரும் கீதம் – சீனாவிலிருந்து தயாரிக்கப் பட்டு வந்ததே!
கே: இதுவரை நேரடி அரசியலில் பங்கு பெறாமல் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மட்டும் ஈடுபட்டு வந்த பிரியங்கா காந்தி தற்பொழுது நேரடி அரசியலில் பங்கெடுத்திருப்பது பி.ஜே.பி.க்கு பாதிப்பு அதிகமாகுமா?
– ஆ.கனகராஜ், செந்துறை
ப: உ.பி.யில் மட்டுமல்ல, அதன் தாக்கம் மற்ற வடமாநிலங்களிலும் அதிமாகக் கூடும்!
கே: சென்னையில் நடைபெறும இந்து மத ஆன்மிக கண்காட்சியில் குழந்தைகள் பாத பூஜை செய்யும் பிற்போக்குதனத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்?-
— பா.முருகன், சைதை
ப: தமிழக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதுதான் ஒரே வழி! காலில் விழுவது, வணக்கத்திற்குப் பதில் ராம், ராம் கூறுவது வடக்கேயிருந்து இறக்குமதியானவை. தவிர்க்கப்படல் அவசியம்!
கே: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகையால் பா.ஜ.க. பலனடைய முயலும் திட்டம் செல்லுபடியாகுமா?
–கு.வேலாயுதம், கூடுவாஞ்சேரி
ப: ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற வாஜ்பேய் இரண்டாம் முறை வர முயன்றபோதே முடியவில்லை;இப்போது எல்லா தரப்பினரின் அதிருப்தி மலைபோல் உள்ள நிலையில், வீண் கனவு பலிக்காது! “எண்ணெய் செலவே தவிர பிள்ளை பிழைக்காது!’’
கே: தந்தை பெரியாரின் கொள்கைகளை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல ஆங்கில, இந்தி மொழி பெயர்ப்புகளை வெளியிடுவீர்களா?-
– சி.சுப்ரமணியன், தாராபுரம்
ப: ஏற்கனவே பல வெளியீடுகள் உள்ளன. இணையதளம் உள்பட, பல ஏற்பாடுகள் இனி உருவாகும் – விரிவாகும்!
2019 ஆம் ஆண்டு கும்பமேளா காட்சி
கே: கடவுள் நம்பிக்கை, பூசை, கும்பாபிஷேகம் என்று பக்தி கொண்ட மனிதர்கள்தானே கொலை, கொள்ளை, வல்லுறவுகளில் தினம் தினம் ஈடுபடுகிறார்கள். பக்தி மக்களை நெறிப்படுத்துகிறது என்பது மோசடிப் பிரச்சாரம் தானே?
– ந.பலராமன், வேலூர்
ப: காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் தேவநாதன் துவங்கி, நாளும்ஜெயிலுக்குப் போகும் காவிச் சாமியார், சாமியாரிணிகளே இதற்குத் தக்க சான்றுகள் இல்லையா? நாமக்கல் ஆஞ்சிநேயர்கூட அவரது அர்ச்சகரைக் காப்பாற்ற சக்தி இல்லையே, இவர் முன்பு பறந்தார் இலங்கைக்கு, மலையை எடுத்தார் என்பது எவ்வளவு பெரிய ‘கப்சா’ – தெரிந்து கொள்க.
கே: எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க விழாவுக்கு வந்த மோடியின் முகத்தில், எள்ளும் கொள்ளும் வெடித்தது எதைக் காட்டுகிறது?
– க.முத்துசாமி, நெல்லை
ப: தமிழகத்தின் ‘திரும்பிப் போ மோடியே’ என்பது உலக சாதனை. Hashtag# ஆகிவிட்டது தான் அதற்குக் காரணம்!
கே: பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆதரிப்பதற்குக் காரணம் தெளிவின்மையா? தேர்தல் நோக்கா?
— து.ராம்குமார், மதுரை
ப: தெளிவின்மை + துணிவின்மை! குறைந்தபட்சம் கனிமொழி அவர்களின் தீர்மானத்தை – பார்லிமெண்ட் செல்க்ட் கமிட்டிக்கு மசோதாவை அனுப்பிய பரிந்துரை தீர்மானத்தின்மீது வாக்களித்திருந்தால்கூட, இந்த வரலாற்றுப் பிழை வந்திருக்காது. அரசியல் படித்தோருக்கு அறம் குற்றமாகாமல் தடுத்திருக்கலாம்!