ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா?

பிப்ரவரி 16-28 2019

சிகரம்

“சூரியன் தன் தேரில் ஏறி வடவழியை அடைந்ததும் நுகத்தடியின் கயிற்றை இழுத்துப் பிடிப்பதால் சூரியத் தேரின் நடை மந்தமாகி பகற்பொழுது அதிகமாகி இராப்பொழுது சுருங்குகிறது. சூரியன் தென்வழியை அடைந்ததும் கயிற்றைத் தளர விடுவதால் மண்டலத்துக்கு வெளியே சென்று விடுவதால் தேரின் நடை வேகமாகி, பகல் சுருங்குகிறது. இராப்பொழுது அதிகமாகிறது. சூரியன் தன் தேரின் கயிற்றை இழுக்காமலும் தளரவிடாமலும் மண்டலத்தின் மத்தியில் செல்லும்போது நடை மத்தியமாவதால் இராப்பொழுதும் பகற்பொழுதும் சமமாகின்றன. சூரியன் தன்னிடத்திலுள்ள கயிற்றை எப்போது இழுத்துப் பிடிக்கிறானோ அப்போது, மண்டலத்தினுள்ளும், எப்போது கயிற்றைத் தளர விடுகிறானோ அப்போது மண்டலத்திற்கு வெளியிலும் சூரியன் சுற்றி வருகிறான்.

இவ்வாறு சூரியனின் இரதம் ஒரு முகூர்த்தக் காலத்திற்குள் முப்பத்து நான்கு இலட்சத்து எண்ணூறு யோசனை தூரம் சுற்றுகிறது.  சூரியனின் இரதமான காலச் சக்கரம் வானவீதியில் சஞ்சரிக்கிறது. அந்த இரதத்திற்கு  ஒரே சக்கரம்தான். அதன் பன்னிரண்டு ஆரங்கள் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கின்றன. சூரியனின் இரதத்தை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.’’ என்கிறது இந்து மதம். (சூரிய புராணம்) சூரியன் சுற்றுகிறது என்பது அறிவியலுக்கு எதிரான கருத்து. சூரியன் நிலையாக நின்று தன்னைத்தானே சுற்றுகிறது என்பதே அறிவியல் உண்மை.

இரண்டாவதாக, சூரியன் தேரில் வானவீதியில் சுற்றுகிறான் என்பது அறிவியலுக்கும் அறிவிற்கும் ஒவ்வாத மூடக்கருத்து.

சூரியனின் கடும் வெப்பத்தில் தேரோ, குதிரையோ செல்ல முடியாதே! சூரியனிலிருந்து சிதறி விழுந்த சிறு பகுதியே பூமி. இந்த பூமியே இவ்வளவு பெரிதாய் இருக்கும்போது அந்தச் சூரியன் எவ்வளவு பெரிதாக இருக்கும். அப்படிப்பட்ட சூரியன் தேரில் அமர முடியுமா? குதிரைகள்தான் இழுக்க முடியுமா? சூரியன் ஒரு நெருப்புக் கோளம். அதை ஒரு ஆளாகக் கூறுவதைப் போன்ற முட்டாள்தனம் உலகில் உண்டா?

தேர் என்பதும் குதிரை என்பதும் பூமியில் ஓடக் கூடியவை. அவை எப்படி வானத்தில் பறக்கும்? இப்படி அறிவுக்கு ஒவ்வாத மூடக் கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படை என்பதைப் போன்ற முட்டாள்தன உளறல் வேறு இருக்க முடியுமா?

விந்தணுவை விழுங்கினால் கருத்தரிக்குமா?

“குஞ்சரன் எனும் வானர அரசன் பரமசிவனை நோக்கிக் கடும்தவம் புரிந்தான். அவனது தவத்தைக் கண்டு மெச்சிய பரமசிவன் அவன் முன்னே தோன்றி அவனுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கும்படிக் கூறினார். குஞ்சரன் தனக்கு இறவாத புத்திரனை அளிக்குமாறு கேட்டான். அதற்கு சிவபெருமான், “குஞ்சரா! உனக்கு விதிப்படி ஒரு பெண்ணே பிறப்பாள், இருப்பினும் அவளுக்கு சிரஞ்சீவியான புத்திரன் ஒருவன் பிறப்பான்’’ என்று கூறி அருளிவிட்டு மறைந்தார்.

சிலகாலம் கழித்து குஞ்சரனுக்கு அஞ்சனாதேவி எனும் பெண் பிறந்தாள். நற்குணவதியான அவள் பருவமடைந்ததும் கேசரி எனும் பெயர் பெற்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான்.

மணம் முடிந்து பல நாள்களாகியும் தனக்குப் பிள்ளைப் பேறு ஏற்படாததைக் கண்ட அஞ்சனாதேவி பிரமனை நோக்கிக் கடுந்தவம் செய்தாள்.

அவள் தவம் செய்து வந்த வனத்திலே, பரமசிவனும் பார்வதியும் வானர ரூபமேற்று விளையாடி மகிழ்ந்தனர். அதனால் பரமசிவனிடமிருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பூவில் விழுந்து கனியாக மாறியது. அந்தப் பழத்தை வாயு அஞ்சனையின் கரங்களில் சேர்க்க அவள் அதைப் புசித்து கர்ப்பமானாள். இவ்வாறு பரமசிவனின் அம்சம் கொண்ட வாயுபகவானின் புத்திரனாக அனுமன் பிறந்தான்.’’ என்று கூறுகிறது இந்துமதம். (சூரிய புராணம்)

பரமசிவனும் பார்வதியும் கடவுள்கள் என்கிறது இந்துமதம். அவர்கள் ஏன் குரங்காக மாறி விளையாட வேண்டும். அப்படிக் குரங்காக விளையாடியபோது சிவபெருமான் குரங்கு, பார்வதி குரங்கோடு உடலுறவு கொள்ளும்போது, சிவனின் விந்து ஒரு பழத்தின் மீது சிந்த, அப்பழத்தைச் சாப்பிட்ட அஞ்சனா தேவி கர்ப்பமடைகிறாள் என்று இந்து மதம்  கூறும் கருத்து அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா?

பழத்தோடு வயிற்றுக்குள் செல்லும் விந்தணு மலக்குடல் வழியே வெளியேறும். வாய்வழியே சாப்பிடுவது கருப்பைக்குச் செல்லாது. பெண்ணுறுப்பு வழியே விந்து செலுத்தப்பட்டால்தான் கரு உண்டாகும். இதுதான் அறிவியல் உண்மை. அப்படியிருக்க வாய் வழியே சென்ற விந்துவால் கரு தரித்தாள் என்பது மூடக் கருத்தல்லவா? இப்படிப்பட்ட கருத்தைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

ஒரு பெண்ணின் தொடையில் கர்ப்பம் உண்டானது என்கிற இந்து மதத்தைப் போல முட்டாள் மதம் உலகில் உண்டா? கரு பெண்ணின் கருப்பையில் தான் உண்டாகும். தொடையில் எப்படி உண்டாகும்?

பெண்ணின் தொடையில் கர்ப்பம் உருவாகுமா?

“கார்த்தவீரியன் காலத்தில் ஹைஹைய நாடு செழிப்புடன் இருந்தது. பிருகு வமிசத்தில் உதித்த அந்தணர்கள் அவனால் போற்றப்பட்டனர். அவனும் மனமுவந்து அவர்களுக்குப் பலவிதச் செல்வங்களை வாரிவாரி வழங்கினான். அந்தணர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள். கார்த்தவீரியனுக்குப் பின்னர் அந்த வமிசம் மெல்ல மெல்லக் குன்றத் தொடங்கியது. அந்த அரச பரம்பரையினரின் சொத்துக்கள் குறைந்தன. தன் மூதாதையான கார்த்தவீரியன் செய்த தர்மத்தின் பயனாக அப்போது செல்வச் சீமான்களாய் விளங்கிய அந்தணர்களை அவ்வரச பரம்பரையினர் அணுகிப் பொருளதவி கேட்டனர். அதற்கு அவர்கள் தங்களிடம் ஒன்றுமில்லை என்று கூறி உதவி செய்ய மறுத்துவிட்டனர்.

அவ்வந்தணர்கள் தங்களிடமிருந்த பொன் பொருள்களைப் புதைத்து வைத்துவிட்டுத் தங்களிடம் செல்வம் ஏதும் இல்லை எனத் தெரிவித்ததை அறிந்த அவ்வரசர்கள், பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுமே என்பதைக் கூடப் பொருட்படுத்தாது அவர்களைக் கொன்றனர். அந்த இனமே நன்றிகெட்ட இனம் என்று முடிவு செய்து, கண்முன் பார்த்த பிராமணர்கள், பிராமணப் பெண்கள் ஆகியோரைக் கொன்றனர். அவ்வரசர்களின் பிடியிலிருந்து தப்பிய சில பிராமணப் பெண்கள் இமயமலைச் சாரலை அடைந்தனர். அங்குத் தேவியை நோக்கிக் கடுந்தவம் புரியலாயினர்; தேவியின் அருளினால் ஒரு பிராமணப் பெண் தொடையில் கர்ப்பம் ஏற்பட்டது. பிராமணர் இருப்பிடத்தை அறிந்த ஹைஹையர்கள் அங்கேயும் வந்து, அவர்கள் வமிசத்தை முற்றிலும் அழிக்க முயன்றனர். அப்போது அந்தப் பிராமணப் பெண்ணின் கர்ப்பத்திலிருந்து குழந்தை ஒன்று வெளியே வந்தது. அதனிடமிருந்து உண்டான பேரொளியால் ஹைஹைய அரச பரம்பரையினர் கண்கள் குருடாயின. பின்னர், அந்தப் பிராமணப் பெண்ணின் தொடையில் பிறந்த பிருகுவின் அமிசமான பார்க்கவரிடம் அந்தக் குருடர்கள் சரணாகதியடைந்தனர். தாங்கள் செய்த பாவங்களை மன்னித்துக் காப்பாற்றும்படி அவரை வேண்டினர். அவரும் அவர்களுக்குக் கண்பார்வை மீண்டும் ஏற்பட அருளினார். அதற்குப் பின் அவ்வமிசத்தவர்கள் பிராமண இம்சையைக் கைவிட்டனர்.

ஒரு பெண்ணின் தொடையில் கர்ப்பம் உண்டானது என்கிற இந்து மதத்தைப் போல முட்டாள் மதம் உலகில் உண்டா? கரு பெண்ணின் கருப்பையில்தான் உண்டாகும். தொடையில் எப்படி உண்டாகும்?

தொடையிலிருந்து குழந்தை வெளிவந்ததும் அதன் கண்ணிலிருந்து வந்த ஒளிபட்டு குருடானார்கள் என்று இந்து மதம் (தேவி பாகவதம்) கூறுகிறது.

தொடையில் குழந்தை பிறந்தது என்பதே அறிவுக்கு எதிரானது? அக்குழந்தையின் கண்ணில் ஒளி வந்தது என்பது அசல் மூடக்கருத்து. இப்படி அறிவியலுக்கு எதிரான கருத்துகளின் களஞ்சியமான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்…)

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *