நிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்!

பிப்ரவரி 16-28 2019

தொகுப்பு  : க.கலைமணி

இந்திய இந்து சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் சிலர் உயர்ந்தவர்கள், பெரும்பான்மை மக்கள் சூத்திரர்கள்,

பஞ்சமர் என பல நூறு ஆண்டு காலமாக கற்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சூத்திரர், பஞ்சமர் எனப்பட்ட மக்களுக்கு கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப்பட்டன. அந்த மக்கள் பல இழிவுகளை சுமந்து வந்தனர்.

ஜாதியின் அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்பின் அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றிற்கு மாறாக மத்திய அரசின் 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று அறிவித்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

சமூகரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்குத்தான் இடஒதுக்கீடு அளிக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டம் இதைத்தான் அனுமதிக்கிறது. இப்படி இருக்கும் சட்டப் பிரிவுகளை திருத்தி எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை காத்திருந்து இடஒதுக்கீட்டில் கை வைத்துள்ளனர். ஆனால் சமூகநீதி – இடஒதுக்கீட்டில் கைவைப்பவர்கள் யாரும் நிலைத்தது இல்லை என்பதை இவர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். அதனை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது என்பதை வலியுறுத்திடும் வகையில் இந்தியாவிலே முதல் முதலாக குரல் கொடுத்தது தமிழகம் தான் அதற்கு அச்சாரமாக “உயர் ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடா?’’ என்னும் தலைப்பில், காந்தியார் அண்ணா நினைவு நாளை நினைவு கூர்ந்து வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக் கூட்டம் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து சமூகநீதி தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டன.

இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்று உரையாற்றினர். முதலாவதாக, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன்  அவர்கள் தனது உரையில், இந்தியாவிலேயே தமிழ் மண் சமூகநீதியில் முன்வரிசையில் இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் என்றார்.

அவரைத் தொடர்ந்து மனிதநேய  மக்கள் கட்சியின் நிறுவனர் – தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில் சமூக நீதித் திசையில் தந்தை பெரியார், திராவிடர் கழகம், திராவிட கட்சிகள் பொறித்த முத்திரைகளை வெகுவாகப் பாராட்டி,                உயர் ஜாதிக்காரர்கள் இப்பொழுதுள்ள இட ஒதுக்கீட்டு முறையால் ஏதோ பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்ல முயல்வது அடிப்படைத் தவறு. உண்மைக்கு எதிரானது என்று எடுத்துரைத்தார்.

இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிவரும், சாதித்துவரும் சமூக நீதிக்கான சாதனைகளை மனந் திறந்து பாராட்டினார். மண்டல் குழுப் பரிந்துரைகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் சட்டரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைத்தது என்றால் அதற்கு முதற் காரணம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

தொடர்ந்து, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார். அவர் தம் உரையில்,பொருளாதாரக் கண்ணோட்டப்படி பார்த்தாலும் ஏழைகளாக பெரும்பாலும் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே – உயர் ஜாதியினர் தாம் பொருளாதாரத்திலும் மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர் என்பதற்கு தக்க புள்ளி விவரங்களை எடுத்து வைத்தார்.

பின்னர் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில் காந்தியார், அண்ணா நினைவு நாளில் அவர்கள் ஆற்றிய தொண்டுகளை பெரிதும் பாராட்டி பேசினார். சமூகநீதியில் கலங்கரை விளக்கமாக, தூண்டும் சக்தியாக இருப்பவர் எனது அண்ணன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார்கள்.

“வாழ்ந்த காந்தியார் வருணாசிரமவாதி; மறைந்த காந்தியார் வருணாசிரமத்தை ஒழிக்க விரும்பிய காந்தியார். காந்தியார் சுயமரியாதைக்காரராகி விட்டார்” என்று தந்தை பெரியார் தனது நாட்குறிப்பில் எழுதியது.

இன்றைக்கு தமிழ்நாடு மக்கள் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர் என்றால் அதற்கான முழு முதற் காரணம் நமது ஆசிரியர் அவர்கள்தான்! ஆட்சியினருக்குச் சட்ட ரீதியான ஆலோசனைகளைக் கூறி செயல்பட வைத்தவரும் அவரே! 31சி சட்டத்திற்கான நகலைத் தயாரித்துக் கொடுத்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்றார்.

நிறைவாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை உரையாற்றினார். தமது உரையில் “இந்தியா ‘சுதந்திரம்‘ பெற்றது 15.8.1947இல், காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948இல் அதாவது சுதந்திரம் பெற்ற 165ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947இல் காந்தி கொல்லப்பட்டது 30.1.1948இல், அதாவது அவர் “நம் நாடு மதச்சார்பற்றது” என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப் பட்டார்.

காந்தி இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து சுயமரியாதைக்காரராகி விட்டார்.  அவர் கொல்லப்படா விட்டால் இந்த நாடு சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்” என்று தந்தை பெரியார் அவர்கள் தமது டைரியில் எழுதியிருந்த குறிப்பினை தலைவர் ஆசிரியர் வெளிப்படுத்தியபோது, மேடையில் அமர்ந்திருந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஆர்வமுடன் கேட்டனர்.

“வாழ்ந்த காந்தியார் வருணாசிரமவாதி; மறைந்த காந்தியார் வருணாசிரமத்தை ஒழிக்க விரும்பிய காந்தியார். காந்தியார் சுயமரியாதைக்காரராகி விட்டார்” என்று தந்தை பெரியார் தனது நாட்குறிப்பில் எழுதியது அந்தப் பொருளில்தான் என்று கூறிய தமிழர் தலைவர்  -_ மதச்சார்பின்மையும், சமூகநீதியும் தேவை என்று உணர்ந்த காந்தியார் கோட்சே உருவில் பார்ப்பனர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றார்.

இறுதியில் வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தின் துவக்கத்தில் மயிலை நாத்திகன் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *