சென்னை புளியந்தோப்பில் உள்ள பட்டாளம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதி. தற்சமயம் எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை பொருளாதாரம் பயின்று வருகிறார். தன்னம்பிக்கையின் உருவமான இவர், கைப்பந்து (Volly Ball) ஆட்டத்தில் பல சாதனைகள் புரிந்து வருபவர். சாதனையாளரான ஜோதி கூறுகையில்,
“சென்னை சூளையில் உள்ள செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே கைப்பந்து போட்டி மீது ஆர்வம் கொண்டேன். 8ஆம் வகுப்பு படிக்கும்போதே கைப்பந்து பயிற்சி பெறத் துவங்கிவிட்டேன். அந்தப் பள்ளியில் உள்ள பயிற்சியாளர் ஜான் ஏஞ்சல் அய்யாவின் அறிமுகம் கிடைத்தது.
அவர் மூலம் ‘டாக்டர் சிவந்தி கைப்பந்து கிளப்’பில் விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘நீ பெரிய ஆளாய் வருவாய்’ என என்னை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி படிக்க உதவி செய்தார்கள்’’ என கடந்துவந்த பாதையைக் கூறுகிறார்.
“என் குடும்பமும் வறுமையான குடும்பம், தொடர்ந்து கஷ்டம்தான். அண்மையில் அப்பாவும் இறந்துவிட்டார். அம்மா, வீட்டு வேலைகள் செய்து எங்களை காப்பாற்றி வருகிறார். அண்ணன் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
10ஆம் வகுப்பு படிக்கும்போதே தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது 12 வீராங்கனைகள் தேர்வானார்கள். அதில் நான் மட்டுமே, டாக்டர் சிவந்தி பயிற்சிக் கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டேன். பின்னர், உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்திய அணிகளுக்கான போட்டிகளில் பங்கேற்றோம். எங்கள் அணிக்கு 3ஆம் இடம் கிடைத்து.
11ஆம் வகுப்பு படிக்கும்போது, கர்நாடகாவில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டிற்காக விளையாடினேன். 12ஆம் வகுப்பு படிக்கும்போது மேற்கு வங்கத்தில் நடந்த போட்டிகளில் 3ஆம் இடம் பிடித்தோம். தொடர்ந்து ஆசிய நாடுகளுக்கான போட்டிகளில் விளையாட நான் தேர்வானேன். புனேவில் ஒன்றரை மாதம் பயிற்சி பெற்றோம்’’ என மகிழ்வுடன் கூறுகிறார்.
என்னுடைய எதிர்கால லட்சியம், ரெயில்வே கைப்பந்து குழுவில் ஆடுவதுதான், உலக அளவிலும் வெற்றிவாகை சூட வேண்டும். பொருளாதார சிரமமும் உள்ளது. அரசு வேலைவாய்ப்பு கிடைத்தால் உதவிகரமாக இருக்கும்.
அவர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு சிவந்தி பயிற்சி கழகத்தினர் உடை, உபகரணங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். கல்லூரியிலும் ஆசிரியர்கள் அவருக்காக தனியாகத் தேர்வெழுத அனுமதி கொடுக்கின்றார். தினமும் அதிகாலை ஆறு மணிக்கும், மீண்டும் மாலை கல்லூரியில் இருந்து வந்ததும் கைப்பந்து பயிற்சிக்கு செல்கிறார்.
“எங்கள் வீட்டின் அருகில்தான் பயிற்சி மையம். ஆகவே, சைக்கிளில் சென்று விடுவேன். என்னுடைய எதிர்கால லட்சியம், ரெயில்வே கைப்பந்து குழுவில் ஆடுவதுதான், உலக அளவிலும் வெற்றிவாகை சூட வேண்டும். பொருளாதார சிரமமும் உள்ளது. அரசு வேலைவாய்ப்பு கிடைத்தால் உதவிகரமாக இருக்கும். மேலும், பயிற்சி மற்றும் படிப்புக்கு பணம் தேவைப்படுகிறது. அரசின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கிறேன்’’ என்ற அவரது எதிர்பார்ப்பில் உள்ள ஏக்கம் போக்க அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும். இவரைப் போன்ற ஆற்றலாளர்களைக் கண்டறிந்து அரசு அவர்களுக்கு பயிற்சியும் பண உதவியும் செய்வது கட்டாயம்.
தகவல்: சந்தோஷ்