சிறுகதை : கடவுள் நகரங்கள்!

பிப்ரவரி 16-28 2019

 

-ஆறு.கலைச்செல்வன்

“ஏங்க, என் தோழி சாரதா நம்ம எல்லோரையும் அவ ஊருக்கு வரச் சொல்லி ரொம்ப நாளா போன் பண்ணிக்கிட்டு இருக்கா. இந்த வாரம் நானும், நீங்களும் நம்ப புள்ளையை அழைச்சிக்கிட்டு போயிட்டு வரலாமுங்க’’, என்று கணவன் பாபுவிடம் ஆசையாகக் கேட்டாள் தாமரை.

“என்ன திடீர்னு கூப்பிடுறாங்க. ஏதாவது விசஷேமா?’’ என்று கேட்டான் பாபு.

“அவளோட ஊரில் தேரோட்டம் நடக்குதாம். அவள் இருக்கிற இடம் கடவுள் நகரமாச்சே. அதோட அவள் இப்ப மட்டுமா கூப்பிடுறா! வருஷா வருஷம்தான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கா. நம்மால்தான் போக முடியலை. இந்த வருஷமாவது போயிட்டு வரலாமுங்க’’ என்று கெஞ்சலாகக் கேட்டாள் தாமரை.

“உன் தோழியோட ஊர் இங்கேயிருந்து நானூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கு. நம்ப பையனுக்கு இப்பத்தான் அஞ்சு வயது முடியப்போவுது. அவ்வளவு தூரம் பயணம் பண்ண வேணுமா?’’ என்றான் பாபு.

மீண்டும் பேசினாள் தாமரை.

-ஏங்க அது கடவுள் நகரம். அங்க போயிட்டு வந்தா நோயே வராதாம். அந்த ஊர் சாமிக்கு அவ்வளவு சக்தி இருக்காம். நம்ம புள்ளைக்கும் நல்லதுதானே.’’

“அது சரிதான் தாமரை, இப்ப நாம எல்லோரும் நல்லாத்தானே இருக்கோம். கடவுள் நகரத்திற்குப் போய்தான் நம்ம உடம்பை பாதுகாத்துக்கணுமா?’’

“நீங்க எப்பவுமே இப்படித்தான். சக்தியுள்ள சாமியைக் கும்பிட்டு வந்தா சகலமும் நல்லதா நடக்கும் என்கிறது அய்தீகம். உங்களுக்குத்தான் சாமி கும்பிடுறதே பிடிக்காதே.’’

“தாமரை, சாதாரண நாளில் கூப்பிட்டால்கூட போயிடலாம். திருவிழா சமயங்களில் போனா நிறைய கஷ்டங்களைத் தான் அனுபவிக்கனும். வேணும்னா ஒண்ணு செய்வோம்.’’

“என்னது? சொல்லுங்க’’

“ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களுக்குப் போயிட்டு வருவோம். இப்ப  நல்ல சீசன். போவோமா?’’

“நான் ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்றீங்க. போகாத ஊருக்கு வழி காட்டாதீங்க. சாரதா ஊருக்கு வரமுடியுமா முடியாதா என்பதை மட்டும் சொல்லுங்க?’’

இவ்வாறு தாமரை தீர்மானமாகக் கேட்டதும் பாபு வேறு வழியின்றி சாரதா ஊருக்குச் செல்ல ஒப்புக் கொள்ள நேரிட்டது.

ஒரு நாள் மூவரும் தொடர்வண்டி மூலம் சாரதா கேட்டுக்கொண்டபடி அவளது ஊருக்குப் பயணமானார்கள். அன்று தொடர் வண்டியில் நல்ல கூட்டம். நிற்கக்கூட இடம் இல்லை. நெருக்கியடித்துக்கொண்டு பயணம் செய்ததால் கலக்கமுற்ற அவர்களின் மகன் திருவரசன் அழ ஆரம்பித்து விட்டான். பாபுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவனுக்குக் கூட்டத்தைப் பார்த்தாலே பிடிக்காது. எப்படியோ ஒரு வழியாக ஊர்ப்போய் சேர்ந்தார்கள். தொடர்வண்டி நிலையத்திலிருந்து வாடகைக்கார் ஏற்பாடு செய்து கொண்டு சாரதா வீட்டிற்குக் கிளம்பினார்கள். வாடகைக்கார் கடைத்தெரு வழியாகச் செல்லும்போது திடீரெனப் பழுதாகிவிட்டது. தாமரையும் பாபுவும் தங்கள் மகன் திருவரசனுடன் கீழே இறங்கி பழுது நீக்கும் வரை காத்திருந்தார்கள். அப்போது திருவரசன் கழிவறை செல்ல வேண்டுமெனக் கேட்டான்.

பாபு மகனை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த நகராட்சி கழிவறைக்குச் சென்றான். அது ஒரு கட்டணக் கழிவறை. மலம் கழிக்க எவ்வளவு காசு என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் தொகை மட்டும் அழிக்கப்பட்டிருந்தது.

பாபு அங்கிருந்த பணியாளரிடம் மலம் கழிக்க இரண்டு ரூபாய் கட்டணம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தான். அந்தப் பணியாளர் பாபுவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

“மலம் கழிக்க இருபது ரூபாய்’’ என்றான்.

“என்னது? இருபது ரூபாயா?’’ என்று அதிர்ச்சியுடன் வினவினான் பாபு.

பணியாளர் தலையாட்டினார்.

பலரும் இருபது ரூபாய் கொடுத்தே உள்ளே சென்று வந்தனர்.

“இருபது ரூபாய்க்கு டிக்கெட் தருவீர்களா? எவ்வளவு காசு என்று எழுதப்பட்டிருக்கும் இடம் அழிக்கப்பட்டிருக்கே’’ என்று மீண்டும் கேட்டான் பாபு.

அப்போது அவனை வாட்டசாட்மான சிலர் சூழ்ந்து கொண்டனர்.

நிலைமையைப் புரிந்துகொண்ட பாபு, “ஓ! கடவுள் நகரம் என்றால் இப்படித்தான் இருக்கும்போல. நாம இங்கு வந்ததுதான் தப்பு’’ என்று நினைத்துக்கொண்டே ஏதும் பேசாமல் இருந்துவிட்டான்.

அப்போது காரின் பழுது நீக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அனைவரும் கிளம்பிச் சென்று சாரதா வீட்டை அடைந்தனர். சாரதாவும் அவள் கணவன் இரவியும் அவர்களை மிகவும் அன்புடன் வரவேற்றனர்.

மறுநாள் தேர்த் திருவிழா. அனைவரும் கிளம்பி தேர் செல்லும் பாதையில் வந்து நின்றனர். அங்கு பெருங்கூட்டம் குழுமியிருந்தது. பலரும் “ஓம் நமச்சிவாய’’ என முனகிக் கொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் முண்டியடித்துக் கொண்டு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். தேரின் சக்கரங்கள் கடகட வென்ற ஓசையுடன் உருண்டோடின.

சாதாரணமாக கூட்டமாக இருக்கும். பேருந்தில் ஆண்கள் யாராவது தெரியாமல் சற்று இடித்து விட்டாலே சத்தம் போட்டு திட்டித் தீர்க்கும் பெண்கள் இங்கு கூட்டத்தில் இடிபட்டும் அதுபற்றி துளியும் கவலை கொள்ளாமல் கயிற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பாபு, “பக்தி எப்படி அறிவை மயக்குகிறது?’’ என்பதை நினைத்து வருத்தப்பட்டான்.

அப்போது அங்கு 108 என்ற எண்ணைத் தாங்கி வந்த ஆம்புலன்ஸ் வண்டி வழிகிடைக்காமல் ஒலி எழுப்பியபடியே நின்றது. அதைக் கண்ட பாபுவின் மனம் பதைபதைத்தது.

“தேர் அடுத்தத் தெருவில் திரும்ப இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். அதுவரை ஆம்புலன்ஸ் நிற்க வேண்டியதுதானா?’’ என நினைத்தான் பாபு.

அப்போது ஆன்புலன்ஸ் வண்டியிலிருந்து இறங்கிய ஒருவன் மக்களையும் காவலர்களையும் பார்த்துக் கத்தினான்.

 கடவுள்களின் புண்ணிய பூமிகள் அனைத்தின் நிலையும் இதைவிட மோசம்! புகழ்பெற்ற புண்ணிய பூமிகள் என்றால் இன்னும் மோசம். இராமேஸ்வரம், காசி, கங்கை போன்றவை அசுத்தத்தின், நோய்த்தொற்றின் உச்சம்.

“அய்யா வழி விடுங்க. என் மனைவிக்கு பிரசவம். ஆஸ்பத்திரிக்குப் போகணும். கொஞ்சம் வழி விடுங்க’’ என்று கெஞ்சினான்.

ஆனால் அதை யாரும் செவி மடுக்கவில்லை.

“இந்த வழியாக ஏன் வந்தாய்?’’ என்று சிலர் அவனைத் திட்டவும் செய்தனர்.

“தேர் செல்லும் பாதையில் வந்த இவன் ஒரு ஆண்ட்டி இன்டியன்’’ என்று குடுமிவைத்த ஒருவன் கத்தினான்.

தேர் செல்லும் பாதை என்பதால் பக்தர்கள் பலரும் செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் கடும் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். ஆனாலும், பலர் சாலையில் எச்சில் துப்ப மட்டும் தயங்கவில்லை. அவைகளை மிதித்தபடியே மக்கள் நடந்து சென்றனர்.

பல இடங்களில் இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அவைகளை வாங்க மக்கள் போட்டி போட்டுக்கொண்டு கைகளை நீட்டிக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் பல பொட்டலங்கள் பிய்ந்து உணவு சாலை முழுவதுமாகச் சிதறிக் கிடந்தன.

இதையெல்லாம் கண்ட பாபு, “மக்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்களே’’ என நினைத்து வேதனைப்பட்டான். தானும் இங்கு வர நேர்ந்ததை நினைத்து வருந்தவும் செய்தான். இருப்பினும் இவைகளை நேரில் பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். சற்று நேரம் கழித்து தேர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது. பாபுவைத் தவிர மற்றவர்கள் தேரைப் பின்தொடர்ந்து செல்ல விரும்பினர். ஆனால், பாபு அதற்கு மறுத்துவிட்டான்.

“போதும், போதும். நல்லாவே பார்த்தாச்சு. சற்று நேரம் ஊரைச் சுற்றிப் பார்க்கலாமே’’ என்றான் பாபு.

அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டு நகரைச் சுற்றிச் பார்க்க தேர் கடந்து சென்ற திசைக்கு எதிர்த்த திசையில் நடக்க ஆரம்பித்தனர்.

“சாரதா, உங்க ஊரில் பிள்ளையார் கோயில் இருக்கா?’’ எனத் திடீரெனக் கேட்டாள் தாமரை.

“நிறைய இருக்கு தாமரை. கீழ வீதியில் சிறைமீட்ட விநாயகர் கோயில் இருக்கு. மேலவீதியில் வினைதீர்த்த விநாயகர் கோயில் இருக்கு. அப்படியே தெற்கு வீதியில் தான்தோன்றி விநாயகர் கோயில் இருக்கு. இன்னும்…’’’ என்று மேலும் சாரதா சொல்ல முற்பட்டபோது பாவுவால் சும்மா இருக்க முடியவில்லை. திடீரென சாரதாவிடம் ஒரு கேள்வி கேட்டான்.

“எல்லாம் சரிதான். உங்க ஊரில் நல்ல நூல் நிலையம் இருக்கிறதா கேள்விப்பட்டேன். அது எந்தத் தெருவில் இருக்கு?’’ என்றான்.

சாரதாவும் அவள் கணவனும் ஒரு கணம் திகைத்தனர். உண்மையில் அவர்களுக்கு நூல் நிலையம் எங்குள்ளது என்று தெரியவில்லை. அவர்களுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

“இந்தக் கேள்வியை இப்போது ஏன் கேட்டீர்கள்?’’ என்பதைப் போல கணவனை நோக்கினாள் தாமரை.

ஆனால், சாரதா அப்போதுதான் தன் தவறை உணர்ந்தாள். நாளையே நூல் நிலையத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவு செய்தாள்.

மறுநாள் அதிகாலையில் சாரதாவும் தாமரையும் நகரில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். முதல்நாள் தேர்த் திருவிழாவும், அன்று இரவு பல்வேறு கடவுள் நிகழ்ச்சிகளும் நடைபெற்ற சாலைகள் காலையில் குப்பை மேடாகக் காட்சியளித்தன. தடைசெய்யப்பட்ட டீ கப்புகள் தெருக்கள் முழுவதும் சிதறிக் கிடந்தன. பக்தியை சட்டம் கட்டுப்படுத்தாது போலும்! அன்று இரவு லேசாக மழை பெய்திருந்த நிலையில் பல டீ கப்புகளில்  மழை நீர் தேங்கியிருந்தது. கண்டிப்பாக அதில் டெங்குக் கொசுக்கள் உருவாகியிருக்கும். பல இடங்களில் பெண் பக்தைகள் ஒரே நிறத்தில் சேலையணிந்து கும்பல் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். சாலைகளில் வெண்ணிற நுரைகள் பனிக்கட்டிகள் போல் தென்பட்டன. பற்பசை கொண்டு பல்துலக்கிவிட்டு எச்சிலை சாலைகளில் அந்தப் பெண்கள் துப்பியிருக்கிறார்கள். அதைப் போலவே ஆண் பக்தர்களும் செய்திருக்கிறார்கள். அவைகள்தான் அந்த நுரைகள் என்பதை அறிந்த தாமரையும் சாரதாவும் மனம் நொந்தனர். பலரும் சாலைகளில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் முன்பாக எந்தவித கூச்சமும் இல்லாமல் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் சிறுநீர், சாக்கடை நாற்றம் குமட்டிக்கொண்டு வந்தது.

ஓரிடத்தில் ஒரு மருத்துவமனை காணப்பட்டது. அங்கு காலை நேரத்திலேயே நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது டெங்குக் காய்ச்சல் நகரில் அதிகமாகப் பரவிவிட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர்.

“சாரதா, ஆன்மீக நகரத்தில் நோயே இருக்காது என்றாயே. ஆனால், ஆஸ்பத்திரியில் இவ்வளவு கூட்டம் இருக்கு பார்த்தியா? டெங்கு காய்ச்சல் பரவிவிட்டதாமே’’ என்று சாரதாவிடம் கேட்டாள் தாமரை.

சாரதா எதுவுமே பேசவில்லை.

“கடவுள் நகரம் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. கொஞ்சம்கூட சுகாதாரம் இல்லை. எப்படித்தான் மக்கள் வசிக்கிறார்களோ! நல்ல வேளையா நீ நகருக்கு வெளிப்புறத்தில் குடியிருப்பது கூட நல்லதுதான். நகரம் ரொம்ப மோசமா இருக்கு’’ என்றாள் தாமரை.

“ஆமாம் தாமரை. நானும் இப்பத்தான் இதையெல்லாம் புரிஞ்சுக்கிறேன். இது ஆன்மிக நகரம் இல்லை. அபத்த நகரம். வா, வூட்க்குப் போயிடலாம்’’ என்று தாமரையை வீட்டிற்கு அழைத்தாள் சாரதா.

திரும்பி அவர்கள் சென்றபோது சாலையின் இரு பக்கங்களிலும் பக்தர்கள் வந்த பேருந்துகள், கார்கள் நின்று கொண்டிருந்தன. எதிரில் வந்த வாகனங்கள் பக்தர்கள் மீது மோதி பல இடங்களில் விபத்துகளும் நடந்து கொண்டிருந்தன. பல இடங்களில் அழுகுரல்களும் கூக்குரல்களும் கேட்டன. அப்போது ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் தாமரையிடம் இருந்த கைப்பையை பிடுங்கிக்கொண்டு பறந்தோடிவிட்டான். இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.

வீட்டிற்குச் சென்ற அவர்களிடம் நகரைப் பற்றி விசாரித்தான் பாபு. தாமரை தாங்கள் பார்த்தவற்றைக் கூறினாள். சாரதாவும் அதை ஆமோதித்தாள்.

பிறகு பாபு, சாரதாவைப் பார்த்துப் பேசினான்.

இந்த நகரம் மட்டுமல்ல, கடவுள்களின் புண்ணிய பூமிகள் அனைத்தின் நிலையும் இதைவிட மோசம்! புகழ்பெற்ற புண்ணிய பூமிகள் என்றால் இன்னும் மோசம். இராமேஸ்வரம், காசி, கங்கை போன்றவை அசுத்தத்தின், நோய்த்தொற்றின் உச்சம்.

ஆனால் எங்கள் ஊர், கிராமம்தான். சாதாரண கிராமம் இல்லை. பகுத்தறிவு கிராமம். அங்கு எந்தவித திருவிழாவும் நடக்காது. ‘பொங்கல்’ மட்டுமே கொண்டாடப்படும். தாமரை ஆன்மிக நகரத்தைப் பற்றி இப்போது புரிந்துகொண்டாள். திருவிழாவின்போது நகரம் எப்படியிருக்கும் என்பதை உணர்த்துவதற்காகத் தான் நானும் இங்கு வர சம்மதித்தேன். நீங்க அவசியம் எங்க கிராமத்துக்கு வரணும். பகுத்தறிவு கிராம் எப்படியிருக்கும்னு நீங்களும் தெரிஞ்சுக்கணும். பகுத்தறிவு உள்ளத்துக்கு மட்டுமல்ல. உடலுக்கும், நலத்துக்கும் நல்லது.’’

“கண்டிப்பாக வருகிறோம்’’ என்று ஒருசேரக் கூறினர் சாரதாவும் அவள் கணவனும்.’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *