ஞா.தேவநேயப் பாவாணர்
பிறந்த நாள் : 07-02-1902
‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ஓர் ஊழி அறிஞர்; தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; இலக்கியப் பெட்டகம்; வாராது வந்த மாமணி; தமிழ் மானங் காத்தவர்; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக் கொண்டவர்.
தமிழரின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருந்தகை; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்த செம்மல், நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; அதை மரமாக வளர்த்து மாண்புறச் செய்தவர் செந்தமிழ்ச் செல்வர் தேவநேயப் பாவாணர்.
அவரது வரலாறு தமிழினத்தின் வரலாறு. 79 ஆண்டுகாலம் இம்மண்ணில் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த அறிஞர். தம் வாழ்வு முழுவதையும் மொழி ஆய்வுக்காக ஈகம் செய்த இவ்வறிஞரின் இறுதிப் பொழுதும் ஆய்வுப் பொழுதாகவே அமைந்தது.