ச. தீபிகா
தொல்லியல் ஆய்வாளர்
இலக்கியங்கள் அவை உருவான காலகட்டத்தில், அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நிலைக்கும் வகையில் பதிவு செய்பவை. அவ்வகையில் பண்டைத் தமிழர்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகளை சங்க கால இலக்கியங்களில் இருந்தே நாம் பெறுகிறோம். பல அறிஞர்கள் இச்செய்திகளின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தி, தங்களின் அய்யங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற வினாக்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள தொல்லியல் அகழாய்வுகளும், கள ஆய்வில் கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான சங்க காலக் கல்வெட்டுகளுமே விடைகளாக அமைகின்றன. சங்க காலக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில், சங்க கால எழுத்து வடிவமான ‘தமிழி’ எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. (எழுத்துவடிவம் காலப்போக்கில் மாறி வருவதால், அதனைத் தெளிவுபடுத்த மொழியையும், எழுத்துவடிவத்தையும் இக்கட்டுரையில் தனித்துக் குறிப்பிடுகிறோம்.) நமக்குக் கிடைக்கும் சங்க காலக் கல்வெட்டுகள் பெரிதும் சமணர் படுக்கைகளிலேயே கிடைத்து வருகின்றன. இத்தகைய கல்வெட்டுகள் பல வரலாறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. ஆனால், தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கண்டெடுக்கப்படும் அதே காலகட்டத்தைச் சார்ந்த பானை ஓடுகளிலும், நாணயங்களிலும் பெயர்ச் சொற்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆகையால் சங்க கால கல்வெட்டுகள் அக்கால நிகழ்வுகளை அறிவதற்கான முதன்மை ஆவணமாக கருதப்படுகின்றன.
ஆய்வாளர்களால் சங்ககால கல்வெட்டுகளுள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது 2006ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பெற்ற வீர நடுகள் கல்வெட்டுகளாகும்.
இறந்துபோன வீரர்களைப் பெருமைப்படுத்தும் வண்ணம் கல் நாட்டுவது பண்டை தமிழ் மரபு ஆகும். அன்றைய சமூகத்தில், இலக்கியங்கள் கூறுவதைப்போல் ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் போன்ற செயல்களே பெரும் போர்களாக விளங்கின. நாளடைவில் அவை நிலப்பகுதிகளுக்கான போர்களாக மாறின. தமிழர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை தொல்காப்பியம் (தொல்: 20:3) தொட்டு பல சங்க இலக்கிய நூல்கள் எடுத்துரைக்கின்றன. கி.மு. 4 முதல் 3ஆம் நூற்றாண்டுகளிலேயே வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்தமைக்கும், அதிலும் முக்கியமாக ‘ஆநிரை கவரும்பொழுது வீரன் இறந்த செய்திக்கும் தொல்லியல் சான்றாக 2006ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான்கோம்பை எனும் இடத்தில் கிடைத்த நடுகற்களே சான்றாக அமைகின்றன.
(படம்: புலிமான்கோம்பை _ சங்க கால நடுகற்கள்)
இதுவே நமக்குக் கிடைத்துள்ள வரையில் சங்க காலத்தைச் சார்ந்த முதல் நடுகல்லாகும். இக் கண்டுபிடிப்பிற்கு முன்புவரை கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இருளப்பட்டி நடுகல்லே பழைமையானதாக கருதப்பட்டு வந்தது.
அடுத்த முக்கியத்துவம் மிக்க கல்வெட்டு 2012ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களால் புதுக்கோட்டை மாவட்ட பொற்பனைக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு சங்ககால நடுகல் ஆகும். இந்த நடுகல் முக்கோண வடிவத்தில், 5 வரிகளில், தமிழி எழுத்து வடிவைக் கொண்டுள்ளது.
(படம்: பொற்பனைக்கோட்டை நடுகல்)
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 5 சங்ககால நடுகற்கள் கிடைத்துள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களிலேயே மிகப் பழமையானவையாகும்.
கல்வெட்டுகளை எழுதுவதற்கு சில நடைமுறைகளை பிற்காலத்தில் பின்பற்றத் தொடங்கினர். இத்தகைய நடைமுறைகள் மற்றும் கல்வெட்டுகளின் அமைப்பைக் கொண்டு அவை எக் காலத்தைச் சார்ந்த, எந்த மன்னனின் கல்வெட்டு என்பது வரை நாம் அறிந்துகொள்ள முடியும். இத்தகைய அமைப்புமுறைகளை தொடக்க காலக் கல்வெட்டுகளில் காணமுடிவதில்லை. எனவே, அப்போது இத்தகைய முறைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கணிக்கலாம். கல்வெட்டுகள் எழுதும்போது மெய் எழுத்துகளுக்குப் புள்ளி இடும் வழக்கமோ, வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடும் வழக்கமோ இல்லை. பொதுவாக கல்வெட்டு பொறிக்கப்படுவதற்-கு முன் பாறையின்/ கல்லின் அந்தப் பகுதியை சமப்படுத்தி பின்பு கல்வெட்டுகளை பொறிப்பர். ஆனால், பல (சங்க காலத்) ‘தமிழி’ கல்வெட்டுகள் சமதளத்தின் மீது கூட வெட்டப்படாமல் மேடு பள்ளமிக்க கடின கற்பாறைப் பகுதியின் மீது பொறிக்கப்பட்டுள்ளன. சான்றாக, பூலாங்குறிச்சி கல்வெட்டுகளைக் கூறலாம்.
முன்பு குறிப்பிட்டிருந்ததைப் போல பெரும்பாலான சங்க காலத் ‘தமிழி’ கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்கு செய்து கொடுத்த கல்படுக்கைகளில் இருந்தே நமக்குக் கிடைக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று புகளூர் கல்வெட்டு. கரூர் மாவட்டத்தில் புகளூர் என்ற ஊரில் “ஆறு நாட்டார்’’ என்ற ஒரு மலையில் மொத்தம் 12 கல்வெட்டுகள் இருக்கின்றன. அனைத்தும் தமிழ் மொழியில், சங்க காலத் ‘தமிழி’ எழுத்துருவில் காணப்படுகின்றன. இவற்றில் 2 கல்வெட்டுகள் சேர மன்னர்கள் சமணத் துறவிகளுக்கு கொடையாக செய்து அளித்த படுக்கைகளைப் பற்றிக் கூறுகின்றன. இக்கல்வெட்டுச் செய்தி மூலம் சேர அரசின் மூன்று தலைமுறை அரசர்களின் பெயர்கள் கிடைக்கின்றன.
‘கே ஆதன் செல்லிரும்பொறை மகன்
கடுங்கோன் மகன் ளங்
கடுமுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்’’
அடுத்த சங்க காலக் கல்வெட்டு திருப்பரங்குன்றத்தில் மூன்று குகைகளில் உள்ளது. தற்போது முருகன் வழிபாட்டில் பெருங்கோயிலாகத் திகழ்வது 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த கோயிலாகும். இக்குன்றில் இயற்கையாக அமையப் பெற்ற குகைத்தளங்களில் பல சமணப் படுக்கைகள் உள்ளன. அவற்றில் ‘தமிழி’ கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகக் குறிப்பிடத்தக்க கல்வெட்டு,
“எருக்காட்டூர் இற்குடும்பிகன் கொலாலையன்
செய்தான் ஆய்சயன் நெடுசாதன’’
இக் கல்வெட்டை அறிஞர்கள் இருவகையாகப் பொருள் கொள்கின்றனர். சிலர் அக்கல்வெட்டின் அர்த்தத்தை ‘ஈழத்தைச் சேர்ந்த பொலாலையன் என்பவரும் ஆய்சயன் நெடுசாதன என்பவரும் சமணர் படுக்கை செய்து கொடுத்தனர்’’ என்று கருதுகின்றனர். இப்பொருளைக் கொண்டால் ஈழம் குறித்துக் கிடைக்-கும் முதல் கல்வெட்டாக இதைக் கருதலாம். ஆனால், சில அறிஞர்கள் இதை ஈழக்குடும்பத்தைச் சேர்ந்த எக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செய்தது என்று கருதுகின்றனர். ‘ஈழர்’ என்ற சொல்லிற்கு பனை மரத்தில் பதினி இறக்கும் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் பொருள் உண்டு.
அம் மலைக் குன்றில் 2013 தொல்லியல் ஆய்வு மாணவர்களின் கள ஆய்வில் மற்றொரு ‘தமிழி’ கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்து வடிவத்தைக் கொண்டு இவை கி.மு. 1ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என கருதப்படுகின்றன.
மதுரை மாவட்டம் அழகர் மலையில் மொத்தம் 13 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 5 கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றியுள்ள வணிகர்கள் செய்த சமணக் கொடையைப் பற்றிக் கூறுகின்றன.
சான்று:
“மத்திரைகே உபு வணிகன் வியகன்’’
மதுரையைச் சேர்ந்த உப்பு வணிகன் வியகன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சமணம் வளர்ச்சியடைவதற்கு தமிழ் வணிகர்களின் ஆதரவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். எழுத்து வடிவத்தைக் கொண்டு இவை கி.மு. 1ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கருதலாம்.
இன்னும் நூற்றுக்கணக்கான சங்க காலக் கல்வெட்டுகள் பல இடங்களில் கிடைத்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் இன்னும் பல புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. காலம் செல்லச் செல்ல கல்வெட்டுகளிலுள்ள எழுத்து வடிவமும், எழுதும் முறைகளும் மாற்றங்கள் அடைவதை நாம் காணலாம்.
தொடக்க காலத்தில் மன்னர்களைத் தவிர பிறரும் பல கல்வெட்டுகளைப் பொறித்துள்ளனர். காலப்போக்கில் கல்வெட்டுகள் தமிழகத்தில் மன்னர்களுக்கும், அவர்களைச் சார்ந்த அரசு குடியினருக்கும் உரியது என்ற தன்மைக்கு எப்படி மாற்றம் அடைகின்றது என்பதை நாம் அடுத்த கட்டுரையில் காணலாம்.
(தொடரும்)