க.கலைமணி
தந்தை பெரியார் பற்றி சில புரட்டான குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘தமிழை காட்டுமிராண்டி மொழி’ என்றார். ‘தமிழ் கலைஞர்களைத் தாக்கினார்’ கலைஞர்களை வெறுத்தார். ‘அவருக்கு இலக்கியம் தெரியாது’. ‘திராவிடர் என்னும் கோட்பாட்டை உருவாக்கி தமிழர் உரிமைகளை பின்னுக்குத் தள்ளினார். ‘தமிழ் இலக்கியங்களை இழிவுப்படுத்திப் பேசினார்’ என்பது போன்ற அடிப்படை ஆதாரமற்ற இதற்கு முன்பே பலரால் சொல்லப்பட்டு வாந்தியெடுக்கப்பட்ட சொத்தை வாதங்கள் அவை. இவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக தந்தை பெரியார் தமிழுக்குச் செய்த தொண்டுகளையும், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கங்களில் இருந்து தமிழை மீட்டதில் பெரியாரின் பங்கு, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு ஒரு படைப்பாளராய், பேச்சாளராய், இதழாளராய், பதிப்பாளராய் அவரது பங்களிப்பு ஆகியவற்றை விளக்கும் விதமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்னும் தலைப்பில் புதிய ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
அந்நூலின் வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. புத்தகக் கண்காட்சியில் 17.01.2019 பிற்பகலில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா தொடக்கமாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்ற பொறுப்பற்ற கேள்விக்கு, ஒரே பதில் _ பொறுப்புடன் கூடிய பதில் ‘தமி-ழுக்கு என்ன செய்யவில்லை பெரியார்?’ என்பதே! அறிஞர் பெருமக்கள் விரிவாக அலசினார்கள்.
எழுத்தாளர் இமையம்
நூலினைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய எழுத்தாளர் இமையம் அவர்கள் உணர்ச்சிவயப்பட்டு உரை நிகழ்த்துகையில் ஆசிரியரின் ஒப்பற்ற உழைப்பு இந்நூலில் காணப்படுகிறது.
“தமிழ் இலக்கிய வரலாறுகளையும், புராண, இதிகாசங்களையும் தமிழ் அறிஞர்களைவிட தந்தை பெரியாரே அதிகம் படித்து பொய்ப் புரட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் மீது சுமத்தப்பட்ட பழியை இந்நூல் களைந்தெறிந்துவிட்டது’’. இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘மொழி ஆராய்ச்சி’ என்னும் தந்தை பெரியார் அவர்களின் கட்டுரையை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.
தமிழ் மட்டுமல்ல, தமிழிசையை வளர்த்தெடுப்பதற்கு தமிழிசை மாநாட்டை நடத்தியவரும் தந்தை பெரியாரே!
சமஸ்கிருத சொல்லாடல்களில் இருந்த வழக்கத்தை தமிழுக்குக் கொண்டு வந்தவர் தந்தை பெரியாரே! பட்டிதொட்டியெல்லாம் தமிழ்ப் பெயர்களை வைத்தவர் தந்தை பெரியாரே!’’ என்றார் தமது உரையில்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
நூலை வெளியிட்டு உரையாற்றிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் “1949 ஜனவரி 15, 16 ஆகிய நாள்களில் பொங்கல் விழாவினையொட்டி சென்னை பிராட்வேயில் திருக்குறள் மாநாட்டினை நடத்தியதோடு இல்லாமல் திருக்குறளை பட்டிதொட்டி யெல்லாம் பரவச் செய்தவர் தந்தை பெரியார்.
இந்நூலினை நமது ஆசிரியர் அவர்கள் எழுதி, அதன் வெளியீட்டு விழாவையும் பொங்கலையொட்டி இங்கு வெளியிட்டு இருப்பது மிகவும் பொருத்தமானது. ஒவ்வொருவருக்கும் பொங்கல் பரிசாக இந்த நூலை ஆசிரியர் நமக்கு அளித்துள்ளார். இதைவிட ஒரு பொங்கல் பரிசு நாம் பெறவும் முடியாது” என்றார்.
பேராசிரியர் அவ்வை நடராசன்
தமது ஆய்வுரையில், இந்நூல் தமிழர் களிடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தக் கூடியது என்றார். தமிழ்நாட்டில் தமிழ் _ தமிழர் நிலை என்னவாக இருந்தது என்பதை விளக்கினார்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரையாற்றினார். அவரது ஏற்புரையில் தந்தை பெரியாருக்கும் தமிழறிஞர்களுக்குமான உறவை பட்டியலிட்டார். பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் நன்றியுரையாற்றினார்.இந்த நூல் வெளியிட்ட பத்து நாட்களில் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்து விட்டன என்பது கூடுதல் தகவலாகும்.