பொதட்டூர் புவியரசன்
காதல்! அன்பு, ஆசை, ஆர்வம், அரவணைப்பு என அனைத்தையும் உள்ளடக்கிய வார்த்தை. இலக்கியங்களில் காணப்பெறும் கற்பு, களவியல், வீரம், வேட்கை, உடன்போக்கு இவை யாவும் எதன் விளைவு? அவ்வளவு ஏன்? திருக்குறளில் எழுதப்பட்டுள்ள மூன்றாம் பாலின் முகவரி காதல்தானே? ஆங்கிலக் கவிஞன் ‘வேர்ட்ஸ் ஒர்த்’ தன் ‘டேஃபடல்ஸ்’ என்ற கவிதையில் காட்டும் காதல் வயப்பட்ட மனநிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பாலியல் மருத்துவரைப் போன்று ஆதியோடந்தமாக எழுதியுள்ளார்.
“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்’’
என்று புரட்சிக்கவிஞர் எழுதியவற்றை யெல்லாம் விஞ்சும் அளவிற்கு இன்றைய புதுக் கவிஞர்களின் கவிதைகளும், திரைப்பாடல்களும் கூறும் காதல் என்பதுதான் என்ன? பாலியல் உணர்வின் முன்னுரையா?
காதல் என்பது நம் உடலுக்குள் உள்ள ஒரு சில சுரப்பிகளின் பருவ காலக் கிளர்ச்சி, காதல் உணர்வு ஏற்படும்போது மூளையில் இரண்டு விதமான அமிலங்கள் சுரக்கின்றன. அவற்றுள் ஒன்று ‘டோபமைன்.’ இது மூளை நரம்புகளுக்கிடையில் செயல்படும் செய்தித் தொடர்பாளர். காதல் வயப்படுவதில் இதன் பங்கு அதிகம். மிகுதியாக சுரந்தால் மனநோயும் உண்டாகும்.
காதல் என்பது இயற்கையின் மீதும், உலக உயிர்கள் மீதும், சக மனிதர்கள் மீதும் நாம் காட்ட வேண்டிய அன்புணர்வு, பாச உணர்வு என்பது மறைக்கப்பட்டு பாலின ஈர்ப்பு மட்டுமே என்றாகி விட்டது.
அடுத்தது ‘நார்எபினஃப்ரைன்.’ இது சுரக்கும்போது இதயம் படபடக்கும்; மனதில் மத்தாப்பு கொளுத்தும்; மூளையில் அமைதியின்மை ஏற்படும். இரண்டும் கலந்து மூளையில் ஆதிக்கம் செலுத்தும்போது பாலுணர்வாக மாறுகிறது. சில நேரங்களில் வரம்பு மீறிய பாலியல் வன்முறையாக உருவெடுக்கிறது.
மனித இனத்தைத் தவிர பிற உயிரினங்கள் கருப்பை உணர்ந்தே உறவு கொள்ளும். பருவகாலம் பாராமல் எந்த நேரத்திலும் வன்புணர்வு காண முடியாது. ஆறறிவு கொண்டதாகப் பெருமைபட்டுக் கொள்ளும் இந்த மனித இனத்தில் மட்டுமே பருவம் பாராமல், வேட்கை அறியாமல் மலராத மொட்டுகளிடம்கூட பாலியல் வன்முறை செய்வதைக் காண முடிகிறது.
ஒரு சிலர் தம் வேட்கையைப் பக்குவமாகக் கையாள்கிறார்கள். அந்த இலக்கை அடையவும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் தேன் தடவிய சொற்களால் தோழமையை அலங்கரித்துக் கொள்கின்றனர். அதற்கு காதலர் தினத்தைக் கூட்டணியாக சேர்த்துக் கொள்கின்றனர்.
அது என்ன காதலர் தினம்? மூன்றாம் நூற்றாண்டில் ரோமாபுரியை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் இளைஞர்களின் திருமண வாழ்க்கைக்குத் தடை விதித்தான். இல்லறத்தில் இருப்பவர்களைவிட மணமாகாத இளைஞர்களே சிறந்த போர் வீரர்களாக உள்ளனர் என முடிவெடுத்து இப்படி ஒரு தடை விதித்தானாம்.
அத்தகைய தடைக்காலத்தில் ‘வாலன்டைன்’ என்ற பாதிரியார் இளைஞர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு தடையை மீறி கமுக்கமாகப் பலருக்குத் திருமணம் செய்து வைத்தாராம்.
இச்செய்தி மன்னனுக்குத் தெரிந்து அவருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றப் பட்டதாம். அவர் மறைந்த அந்த நாளே ‘வாலன்டைன் டே’ என்று பின்பற்றப்பட்டு வந்தது.
உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விழிக்கொடை நாள், சுற்றுச் சூழல் நாள், மகளிர் நாள், மனித உரிமைகள் நாள் எனப் பல்வேறு நாள்களை அய்.நா. அவை அறிவித்துள்ளது. அந்த நாள்கள் பற்றிய இன்றியமையாமை ஓரளவே அறியப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் காதலர் தினம் மட்டும் பரபரப்பாக சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது. இதில் வணிக நோக்கமும் புகுந்து விளம்பர வெளிச்சம் கண்ணைக் கூச வைக்கிறது.
காதல் என்பது இயற்கையின் மீதும், உலக உயிர்கள் மீதும், சக மனிதர்கள் மீதும் நாம் காட்ட வேண்டிய அன்புணர்வு, பாச உணர்வு என்பது மறைக்கப்பட்டு பாலின ஈர்ப்பு மட்டுமே என்றாகி விட்டது. இன்னும் வசதியாக ‘மீட்டிங்’ ‘அவுட்டிங்’ ‘டேடிங்’ என்று பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு உல்லாசம் பொங்க உலா வருகிறார்கள்.
பருவ வயதில் அடி மனத்தின் ஆழத்தில் சுரக்கும் மின்சாரக் காதல், கடைக்கண் பார்வையில் கட்டிப் போடும் கவர்ச்சிக் காதல், கவிதை எழுதிப் பேசும் புலமைக் காதல், வீரம் பேசி வளைத்துப் போடும் ஆளுமைக் காதல், கணிப்பொறி வலையில் சிக்கும் கிறுக்குக் காதல், கண்கள் கசிய சிணுங்கிப் பேசும் கண்ணீர்க் காதல் எனப் பலவகையான காதல் ஆங்காங்கே அரங்கேறும் இந்த நாளை ஏதோ ஒரு விதத்தில் கொண்டாட நினைக்கும் மனப்போக்கு வளர்ந்து வருகிறது.
தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டதால் விளக்கொளியில் சிக்கும் விட்டில் பூச்சிகளாய் சிக்கிக் கொண்டு இறந்த காலத்தைத் தொலைத்து விட்டு நிகழ்காலத்தில் நடைப் பிணமாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் பலர்.
“அன்பே உலகத்தின் பொது மொழி’’ என்றார் புத்தர்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ என்கிறார் திருவள்ளுவர்.
அந்த அன்பின் ஈர்ப்பால் இரண்டறக் கலந்த இணை
“யாயும் யாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்’’ என வியந்து உறவாடியதாக குறுந்தொகை கூறுகிறது.
அப்படி யாரோ யாரோவாக இருந்து செம்புலப் பெயல் நீரெனக் கலந்ததே தமிழர் பண்பாடாக இருந்துள்ளது. இலக்கியங்கள் இப்படித்தான் இயம்புகின்றன. அந்த அன்புடை நெஞ்சங்களுக்கு சாதிப் போர்வை போர்த்தப்பட்டது எப்போது? அந்த சாதிப் பார்வையில் நடத்தப்படும் ஆணவக் கொலைகள் கொடுமையானவை அல்லவா? உலக உருண்டையில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்த அவலம் இந்தப் ‘புண்ணிய பூமியில்’ மட்டும் உள்ளது.
‘சதி’க்கு கால் முளைத்து சாதியானது என்பார்கள் கவிஞர்கள். அந்தச் சாதியை ஏதேனும் சதி செய்தேனும் சாய்த்தாக வேண்டிய தருணமிது.
இதே காதலில் இன்னொரு கொடுமையும் நடந்து வருகிறது. திரைப்படங்களின் தாக்கத்தால் தன்னை ஒப்பிலா நாயகனாகக் கருதிக் கொண்டு கற்பனையில் மிதந்தபடி, படிக்கின்ற பெண்கள் பின்னால் சுற்றும் ஒரு தலைக் காதல் மன நோயாளிகளின் கொடூரம் ஏற்க முடியாத ஒன்று. இவர்களுடைய காதலை எற்க மறுக்கும் பெண்கள் மீது நடத்தப்படும் திராவக வீச்சுகளும், படுகொலைகளும் கொடுமையானது; எந்த வகையிலும் எற்க முடியாத ஒன்று. எப்படி காதலை வெளிப்படுத்தும் உரிமை உள்ளதோ அதே போன்று கோரிக்கையை மறுக்கும் உரிமையும் காதலைப் புறக்கணிக்கும் உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒரு தலைக் காதல் மன நோயாளிகளின் குரூரம் கண்டிக்கத் தக்கது; தண்டிக்கத் தக்கது.
இந்தக் காதல் உயிர்பெறும் காலத்தில் அவர்களுடைய படிப்பில், பழக்கத்தில், உணவில், உடையில் என அனைத்திலும் நுட்பமான வேறுபாட்டைக் கவனிக்கலாம். எது எப்படியோ? இந்தக் காதல் வைரஸ் நெருங்கும்போது அன்பும் பாசமும் கலந்து ஆதரவாகப் பேசுவோரிடம் மடியில் முகம் புதைத்து ஆறுதல் தேடுகின்றனர். இந்தத் தருணத்தில்தான் இளம் பெண்கள் இளைஞர்கள் வலையில் சிக்குகின்றனர்.
இந்தப் பருவகாலப் புயல் மழையை அதற்குரிய பாதுகாப்போடு எதிர் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை. அறிவார்ந்த ஆளுமையுடன் நுட்பமாகப் புரிந்து கொள்ளும்போது காதலைக் குற்றமாகக் கருதி கொலை செய்யும் கொடுமை நீங்கும்! சாதி ஒழிப்பிற்கு சரியான தீர்வாகவும் காதல் மணங்கள் ஓங்கும்!