கி. வீரமணி
10.10.1985 அன்று காரைக்குடி ‘ரோட்டரி’ கிளப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “இன்னும் துடைக்கப்படாத கண்ணீர்’’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். “ஈழத் தமிழர்களின் கண்ணீர்தான் இன்றைக்கும் துடைக்கப்படாத கண்ணீராக இருக்கின்றது-. இலங்கையைச் சுற்றி தண்ணீர் இருக்கின்றது; ஈழத்திலே கண்ணீர் ஒருபக்கம், கண்ணீர் மட்டுமல்ல; அது செந்நீராகவும் வழிந்துகொண்டிருக்கிற நிலைதான் இருந்து கொண்டு வருகின்றது. “எதிர்கால ஈழத் தமிழ்ச் சமுதாயம் மானத்தோடு வாழ -_ தனி ஈழமே தீர்வு என்றும் வேறு எந்தச் செயலாலும், அவர்களுடைய கண்ணீரைத் துடைக்க முடியாது’’ என்றும் எடுத்துக் கூறினேன்.
மயிலாடுதுறை வட்டம் மாதிரிமங்கலம் சீனிவாசன்-_தனம் ஆகியோரின் செல்வன் மூர்த்தி, திருச்சி வட்டம் திருப்பாய்த்துறை மறைந்த கண்ணன்_தனம் ஆகியோரின் செல்வி அமுதா ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 20.10.1985 அன்று மயிலாடுதுறை கூறைநாடு ஏ.ஆர்.சி.எஸ். காமாட்சித் திருமணக் கூடத்தில் என் தலைமையில் நடைபெற்றது. எனது உரையில் சமுதாயத்தினுடைய சிந்தனைகளை மறுபரிசீலனை செய்கின்ற ஒரு தத்துவார்த்த நிகழ்ச்சியாகக் கூட இந்தத் திருமணத்தை நாம் கருதுகின்றோம் என்று வாழ்த்தி உரையாற்றினேன். திராவிடர் கழக துணைத் தலைவராக இருக்கின்ற கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் (அன்றைய பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர்) விழாவில் வரவேற்புரை ஆற்றினார்.
திருச்சி மாவட்டம், அக்கியம்பட்டியில் நடைபெற்ற மலேசிய மருதமுத்து நினைவு நாள் -_ அவரது மகன் மணநாள் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் ஒரே மேடையில் 28.10.1985 அன்று நடைபெற்றன. விழாவில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினேன்.
சுயமரியாதைக் குடும்பம் என்பது எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு அருமையான எடுத்துக்காட்டான குடும்பமாக, குடும்ப நிகழ்ச்சியாக நடைபெற்றது.
அதே மேடையில் அடுத்த நிகழ்ச்சியாக மலேசிய மருதமுத்து அவர்களின் செல்வி அமுதராணிக்கும், குருசாமி அவர்களுடைய செல்வன் அன்பு இராவணனுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்து வைத்தேன்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்படுவதை வரவேற்று 09.11.1985 அன்று முக்கிய அறிக்கையை ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் பதிவு செய்து இருந்தேன். அதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மூன்று தமிழர் நீதிபதிகள் நியமனத்தைப் பாராட்டி, வரவேற்று, மூன்று நீதிபதிகளுக்கு வாழ்த்துகளையும் என் சார்பிலும், கழகத்தின் சார்பிலும், தமிழ் மக்களின் சார்பிலும் தெரிவித்து இருந்தேன். திருவாளர்கள் பி.பாஸ்கரன், எஸ்.டி.இராமலிங்கம், பெல்லி ஆகிய மூவரும் சமூகநீதியை மறந்துவிடாமல், ஓர்ந்த கண்ணோட்டத்துடன் தேர்ந்து செயல்படவும், சமூக பார்வையுடன் நீதி பரிபாலனம் அமைவது அவசியம் என்று கேட்டுக்கொண்டேன்.
“10.11.1985 அன்று விருதுநகரில் பேராசிரியர் க.அன்பழகனுடைய சகோதரர் க.திருமாறன் அவர்களுடைய மணிவிழாவில் நான் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினேன். “திருமாறன் அவர்கள் பொருளாதாரத்திலே வேண்டுமானால் சாதாரணமானவர்களாக இருக்கலாம். ஆனால், கொள்கை என்பதன் மூலமாக அவரை அளந்து பார்க்கும்பொழுது மிகப் பெரிய அளவில் அவர் உயர்ந்து காணப்படுகின்றார்’’ என்று குறிப்பிட்டேன்.
கழக துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை_சரோஜா ஆகியோரின் மகன் டாக்டர் ஜி.எஸ்.குமாருக்கும், ராஜரத்தினம்_ புஷ்பா ஆகியோர்களுடைய செல்வி ஆர்.சாலினிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 17.11.1985 அன்று சேலம் அயோத்தியா பட்டணத்தில் என் தலைமையில் நடைபெற்றது.
நான் உரையாற்றும்போது, துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் மிகப் பெரிய நிதியைப் போன்றவர்கள் எங்களுடைய இயக்கத்தின் விலைமதிக்க முடியாத பொருள் போன்றவர்கள். அன்னை மணியம்மையார் அவர்கள் இருந்திருந்தால் அவர்களுடைய தலைமையில் இந்தத் திருமணம் நடைபெற்று இருக்கும்.
கோ.சாமிதுரை அவர்களுடைய திருமணத்தையே அன்னை மணியம்மையார் அவர்கள்தான் நடத்தி வைத்தார்கள்’’ என்பன போன்ற பலவற்றை நினைவுகூர்ந்து பேசினேன்.
காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி ‘துக்ளக்’ இதழில் இதழில் கட்டுரை ஒன்றை ‘சோ’ ராமசாமி எழுதியிருந்தார். தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ பற்றி முரண்பட்ட செய்திகளை எழுதியதுடன், அப்போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை மறைத்து திரித்து எழுதினார். இதனைக் கண்டித்து, ‘விடுதலை’யில் 19.11.1985 மற்றும் 20.11.1985 ஆகிய இரு நாட்களும் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி வரலாற்றைப் பதிவு செய்தேன்.
விடுதலையில் எழுதியதுடன் இல்லாமல், “திராவிடர் இயக்கம் 70ஆவது ஆண்டையொட்டி 20.11.1985, 21.11.1985 மற்றும் 22.11.1985 ஆகிய நாட்களில் சென்னை பெரியார் திடலில், “காங்கிரஸ் 100 ஆண்டுகள் _ தெரியாத 100 தகவல்கள்’’ என்ற தலைப்பில் ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினேன். அச்சொற்பொழிவில் காங்கிரஸ் கட்சி தொடக்க காலம் முதல் அங்கு நிலவிய வருணாசிரமக் கொடுமைகள், உயர்ஜாதி ஆதிக்கம் இவை குறித்து விளக்கமாக உரையாற்றியதுடன், திராவிடர் இயக்கத்தின் தாக்கத்தால் காங்கிரசில் ஏற்பட்ட மாற்றங்களையும் சுட்டிக்காட்டி விளக்கியிருந்தேன்.
“மறைக்கப்பட்ட எல்லா உண்மைகளும் தரப்படவில்லை. இது பனிப்பாறையின் முனைதான் (Trip of the Iceberg) அவற்றை முழுவதும் தரப் பல தொகுதிகள் எழுதப்பட வேண்டும். அவசியப்பட்டால் அவைகளும் வெளிவரும்’’ என்ற தெரிவித்து நிறைவு செய்தேன். இந்த சொற்பொழிவுகள் முழுமையாகத் தொகுத்து “காங்கிரஸ் வரலாறு மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்’’ (ஆதாரபூர்வ தகவல்கள் அடங்கியது) என்ற நூலாக வெளிவந்தது.
இந்த நூலினை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவில் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.
கேரள மாநிலத்தில் நாராயண குரு அவர்களின் நினைவு நாளையொட்டி ஸ்ரீநாராயணகுரு தர்ம பாடசாலை சார்பில் ‘பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு’ மாநாடு திருச்சூரில் 24.11.1985 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு அழைக்கப்பெற்று கலந்துகொண்டு உரையாற்றினேன்.
டெல்லியில் சந்திரஜித் யாதவ் தலைமையில் நடந்த சமூகநீதி பேரணி (6.12.,1985)
“ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் மண்புழுக்கள் அல்ல; அவர்களும் மனிதர்கள்தான். அவர்களையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்று மரியாதையை உருவாக்கியவர்கள் பெருமதிப்பிற்குரிய நாராயண குரு அவர்கள்.
அவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட மக்களிடையே பேரொளியாக விளங்கி பல லட்சம் மக்களிடையே அறிவொளியாகத் திகழ்கிறார்.
குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவர்களை சந்தித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பற்றிய தொகுப்பு நூலினை வழங்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் இதே கேரள மாநிலம் வைக்கத்திலே நாய் போகலாம், பன்றி போகலாம், கழுதை போகலாம். ஆனால், ஆறு அறிவு உள்ள மனிதன் நடக்கக் கூடாது என்று இருந்த நிலையை எதிர்த்துப் போராடி ஒருமுறை அல்ல; இரண்டுமுறை சிறை சென்றார்கள். அவருடைய துணைவியாரும் தங்கையும் அந்தப் போராட்டத்திலே கலந்துகொண்டு மனித உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றார்கள். அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டன் என்ற வகையில் நான் இந்நிகழ்வில் கலந்துகொள்வதை எண்ணி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டு, இடஒதுக்கீட்டில் நாம் பெற்றுள்ள வெற்றிகளை வரிசைப்படுத்திக் கூறினேன்.
‘ஈழ ரகசியப் பயணம் மேற்கொண்ட பழ.நெடுமாறன் அவர்களைப் பாராட்டி 03.12.1985 அன்று மாலையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டு விழா கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நானே துண்டேந்தி நிதி வசூல் செய்து புலிகளுக்கு அனுப்பி வைத்தேன். எனது உரையில், “நாலரைக் கோடி தமிழர்களிலே அரைக்கோடியை விட்டால்கூட _ கண்ணீர் சிந்தக்கூடிய தமிழன் ஆளுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தால்கூட எட்டு கோடியிலிருந்து பத்துக்கோடி ரூபாய் வரையிலே நாம் திரட்டிக் கொடுப்போமானால் தமிழ் ஈழம் ஆயுதத்தாலே புலிகளால் அமைக்கப்படும். அந்தச் சூழ்நிலையை உருவாக்குவோம்! உருவாக்குவோம்! என்பதையே நெடுமாறன் அவர்கள் மேற்கொண்ட இந்த தியாகப் பயணம் உணர்த்துகிறது’’ என்று அவரைப் பாராட்டிப் பேசினேன்.
இந்தியாவின் தலைநகரில் மண்டல்குழு அறிக்கையை அமலாக்கக் கோரி ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடும், சமூகநீதி கோரி எழுச்சிப் பேரணியும் 06.12.1985 அன்று டெல்லியில் பெரிய அளவில் நடைபெற்றன. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான அன்று டில்லியில் பல்லாயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் சமுதாய மக்களுக்கு சமூகநீதி கேட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.
இடஒதுக்கீடு செயல் கமிட்டித் தலைவர் சந்திரஜித் யாதவ் உள்பட பல தாழ்த்தப்பட், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முன்னணித் தலைவர்கள இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தேசிய ஒன்றிணைந்த தூதுக் குழுவினர் உடன் சென்று குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். பேரணியின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உள்ளபடி விளக்கி குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்படி உரிமைகளை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஆணை இடவேண்டும் என்று நாங்கள் குடியரசுத் தலைவரிடம் வற்புறுத்தினோம்.
தூதுக்குழுவினரின் விளக்கங்களை நல்லவண்ணம் கேட்ட குடியரசுத் தலைவர் இப்பிரச்சினையில் கட்சி சார்பின்றி ஒருமித்து நின்று இதனை வற்புறுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
அனைத்துக் கட்சி இந்தி எதிர்ப்பு மாநாட்டில் சிறப்பிக்கப்படும் மா.இளஞ்செழியன்,
பட்டம்மாள் பாலசுந்தரம், புவனகிரி நமச்சிவாயம்.
நான், குடியரசுத் தலைவர் அவர்களை தனிமையில் சந்தித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலினை வழங்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.
அவர், இடஒதுக்கீட்டுத் துறையில் தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களும் முன்னேற வேண்டும். இதில் தமிழ்நாடுதான் முன்னேறிய மாநிலம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
மறுநாள் 7.12.1985 அன்று டெல்லி விட்டல்பாய் மண்டபத்தில் பல மாநில முக்கிய பிரதிநிதிகளைக் கொண்ட சமூகநீதிப் பணியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றினேன்.
சென்னை பரங்கிமலைப் பகுதியில் ஆலந்தூரில் 11.12.1985 அன்று பகுத்தறிவாளர் கழக துவக்க விழா. இந்தி அழிப்பு போராட்டத்தில் சிறை சென்றவருக்குப் பாராட்டு விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
12.12.1985 அன்று நான், “சுப்ரீம் கோர்ட்டில் தாழ்த்தப்பட்டவரை நீதிபதியாக்குக’’ என்று பிரதமர், குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி பி.என்.பகவதி உள்ளிட்டோருக்கு தந்தி கொடுத்தேன். மேலும், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி வரதராசன் ஓய்வு பெற்ற பிறகு _ தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதிகளே இல்லை. எனவே, சமூகநீதி வழங்கிடும் வகையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
19.12.1985 அன்று மலேசியாவிலிருந்து வெளிவரும் ‘சமநீதி’ ஏட்டின் ஆசிரியர் இராமன், விடுதலை அலுவலகத்தில் என்னை சந்தித்து உரையாற்றினார்.
அய்யா அவர்கள் நினைவு நாளையொட்டி அனைத்துக் கட்சி இந்தி எதிர்ப்பு மாநாடு, கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் 24.12.1985 காலையில் துவங்கி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து கழகக் குடும்பங்கள் திரண்டு வந்தனர். பிற மாநிலத்தாரும் அன்று வந்து கலந்துகொண்டனர்.
மாநாடு துவங்குவதற்கு முன்னதாகவே பெரியார் திடலின் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வக விரிவாக்கமாக (ஆடியோ _ வீடியோ ‘ஒலி, ஒளி நாடாப் பகுதியையும் பிரிவையும் டாக்டர் கலைஞர் அவர்கள் துவக்கி வைத்தார்.
பெரியார் திடலில் ஒலி – ஒளி நாடாப் பகுதியை டாக்டர் கலைஞர் அவர்கள் துவக்கி வைத்தல்.
தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி _ பிற மாநிலப் பிரமுகர்களும் மாநாட்டில் பங்கேற்று இந்தி மொழித் திணிப்பை சாடிப் பேசினர்.
மாநாட்டில் இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகள் படத்தை பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார்.
1938_1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற பெயரில் நூல் வடித்த மா.இளஞ்செழியன் அப்போராட்டத்தின் ஏழாம் சர்வாதிகாரியாக இருந்து சிறை சென்ற புவனகிரி பெரியவர் நமச்சிவாயம் இப்போராட்டத்தில் அடுத்தடுத்து இருமுறை சிறையேகிய பட்டம்மாள் பாலசுந்தரம் ஆகியோர் மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டனர்.
இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகள் படத்தை திறந்து வைக்கும் பேராசிரியர் அவர்கள்.
மயிலாடுதுறையிலிருந்து சைக்கிள் பேரணியாக வந்த தோழர்கள் தந்த ஒளிச்சுடரை மாநாட்டு மேடையில் நான் பெற்றுக் கொண்டேன். மாநாட்டு மேடையில் ஒரு மண விழாவும் நடைபெற்றது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் ஆங்கிலம் இணைப்பு மொழி எனச் சட்டத் திருத்தம் தேவை, டில்லி அரசின் பொது மொழியாகவும் ஆங்கிலமே தேவை, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மொழி தொடர்பான இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவின் பகுதி ஙீக்ஷிமிமிஅய் நீக்கி உரிய சட்டத்திருத்தம் மூலம் புதிய பிரிவை இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்துக் கட்சி இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட மக்களில் ஒரு பகுதியினர்.
மாநாட்டில் ஏராளமான பெரியார் பற்றாளர்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டார்கள். பல்வேறு மாநிலம், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்கள். அவர்களுள், பழ.நெடுமாறன், அப்துல் லத்தீப், எஸ்.டி.சோமசுந்தரம், செ.கந்தப்பன், சி.டி.தண்டபாணி, இனியன் சம்பத், கே.டி.கே.தங்கமணி, டாக்டர் மா.நன்னன், டாக்டர் மு.தமிழ்க்குடிமகன், பேராசிரியர் மா.இளஞ்செழியன், பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், தி.சு.கிள்ளிவளவன், ஏ.எஸ்.வேணு, தவத்திரு மதுரை ஆதினகாத்தர், இந்திராமோகன் எம்.பி. (தெலுங்கு தேசம், ஆந்திரா), சேனல் எடமருகு (கேரளம்), பேராசிரியர் ஏ.எம்.தருமலிங்கம் (கருநாடகம்), சந்தோஷ்குமார் கோஷ் (மேற்கு வங்கம்) மற்றும் நமது கழகப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
(நினைவுகள் நீளும்…)