அயோத்திதாசரை இருட்டடிப்பு செய்தாரா பெரியார்?

பிப்ரவரி 01-15 2019

 நேயன்

பெரியார் ஈ.வெ.ரா கடவுள் என்பதை நிராகரித்தவர். எனவே, கடவுள் சார்ந்து அயோத்திதாசருடன் அவர் உடன்படவில்லை. அவர்கள் இருவருக்குமான மிக முக்கியமான வேறுபாடு இதுதான். மற்றபடி அயோத்திதாசரை பெரியார் மிகவும் உயர்த்திப் பிடித்தார்.

அயோத்திதாசரை மறைக்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு ஏதுமில்லை.

தனது வாழ்வில் ஏழு முறை பெங்களூரில் மிக முக்கிய நிகழ்வுகளில் பெரியார் கலந்து கொண்டுள்ளார்.

இதில் 1959, 1961 ஆகிய இரண்டு உரைகளிலும் மறக்காமல், மறைக்காமல் அயோத்திதாசப் பண்டிதரை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

1959இல் நடந்த நிகழ்வுக்கு தலைமை வகித்தவர் ‘தமிழன்’ ஆசிரியர் பண்டிதமணி ஜி.அப்பாத்துரையார். அவர் தலைமை வகித்துப் பேசும்போது, “புத்த நெறிக்கு புத்துயிர் ஊட்டி நல்லவண்ணம் அதைப் பரப்பும் இருபதாம் நூற்றாண்டின் புத்தர்தான் பெரியார்’’ என்று கூறியிருக்கிறார். (‘விடுதலை’ 13.1.1959)

அடுத்துப் பேசிய பெரியார்: இந்த ஊரில் அந்தக் காலத்திலேயே திரு.அயோத்திதாஸப் பண்டிதரும் தற்போது தலைமை வகித்திருக்கும் திரு.பண்டிதமணி ஜி.அப்பாத்துரையார் அவர்களும் அரும்பெரும் தொண்டாற்றினார்கள் என்று கூறி அதைப் பாராட்டியும்… (‘விடுதலை’ 13.1.1959) செய்தி வெளியிட்டுள்ளது விடுதலை.

1961 நிகழ்வை நடத்தியதே தென்னிந்திய புத்த சங்கம் கோலார் தங்கவயல். இதில் கி.வீரமணி கலந்துகொண்டு பெரியாருக்கு முன்னதாக புத்த அறிவு பற்றி பேசினார். இக்கூட்டத்தில் ஜி.அப்பாத்துரையார் படத்தை பெரியார் திறந்து வைத்துள்ளார். சிறந்த பவுத்த மார்க்க ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியரும், தந்தை பெரியார் அவர்களின் பேரன்பு பூண்டவருமான காலஞ்சென்ற பண்டிதமணி அப்பாத்துரையார்’ என்று ‘விடுதலை’ பெருமைப்படுத்தி உள்ளது. (‘விடுதலை’ 15.5.1961)

ஜி.அப்பாதுரையார் படத்தை திறந்து வைத்துப் பேசும்போதும் அயோத்திதாசரை பெரியார் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அயோத்திதாஸ் பண்டிதருடன் அப்பாத்துரை அவர்கள் ஈடுபட்டு பணியாற்றி வந்திருக்கிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு நெருங்கிய நேயம் உண்டாயிற்று.

“முதலாவதாக எனது அரிய நண்பர் காலஞ்சென்ற அப்பாத்துரை அவர்களின் படத்தை நான் திறந்து வைத்தேன். ஆகையால், அவரது தொண்டின் சிறப்புகளை எல்லாம் எடுத்துச் சொல்லுவது மிக மிக அவசியம் ஆகும்… ஒவ்வொருவரும் அப்பாத்துரையார் போலத் தாங்களும் தொண்டாற்ற முயற்சிக்க வேண்டும்…

தோழர்களே, எனக்கு நண்பர் அப்பாத்துரை அவர்களை 30 ஆண்டுகளாகத் தெரியும். சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு எங்கும் பிரச்சாரம் செய்துவந்தது போலவே இங்கும் அறிவுப் பிரச்சாரம் ஏற்பட்டு தொண்டாற்றி வந்து இருக்கின்றார்.

காலஞ்சென்ற அயோத்திதாஸ் பண்டிதர் அவர்கள் அறிவு விளக்க நூல்களை நாங்கள் எப்படி குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றோமோ, அதுபோலவே குறைந்த விலையில் வழங்கி வந்தார். அயோத்திதாஸ் பண்டிதருடன் அப்பாத்துரை அவர்கள் ஈடுபட்டு பணியாற்றி வந்திருக்கிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு நெருங்கிய நேயம் உண்டாயிற்று.

திரு.அப்பாத்துரை அவர்களின் அருமை மகள் திருமதி. அன்னபூரணி அம்மையார் அவர்களுக்கு எங்கள் ஈரோட்டிலேயே திருமணம் நடைபெற்றது. எங்கள் ஊரில் வேலையும் பார்த்து வந்தார். திருமதி அம்மையார் அவர்களும் பொதுத் தொண்டில் ஈடுபட்டு ஆர்வமுடன் தொண்டாற்றுபவர் ஆவார்.

பண்டிதமணி திரு.அப்பாத்துரை அவர்கள் எங்களைப் போலவே பல அரிய புத்தகங்களை எழுதி வெளியிட்டு உள்ளார்கள். அவர் எழுதிய நூல்களில் புத்த தர்ம விளக்கத்தைப் பற்றி ‘புத்த அருள் அறம்’ என்று எழுதி இருப்பது மிகவும் போற்றதர்குரியதாகும். (‘விடுதலை’ 15.5.1961) என்று பெரியார் பேசியிருக்கிறார்.

1926 ‘தமிழன்’ மீண்டும் தொடங்கப்பட்ட போது ‘குடிஅரசு’ (4.7.1926) வரவேற்று எழுதியது.

முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத்திதாசர் பண்டிதரவர்களால் ‘தமிழன்’ என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடத்தப்பெற்றது. அவர் காலத்திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப்பெற்றது. அதன்பிறகும் ஆதரிப்பாரற்று நின்ற போயிற்று. மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப்ஸ், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத்திருக்கும் திரு.பி.எம்.இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாதம் முதல் வெளியிடப்படுமென தெரிவிக்கப்படுகிறோம். திரு.இராஜரத்தினம் அவர்களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறுமென நம்புகிறோம்’’ என்று வரவேற்றார் பெரியார்.

அது மட்டுமல்ல, ஜி.அப்பாதுரையார் காலத்து ‘தமிழன்’ இதழ் பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் பெருமளவிற்குப் போற்றிப் புகழ்ந்தது. 05.02.1930, 12.03.1930, 08.08.1928, 25.07.1928, 05.09.1928, 10.10.1928, 30.01.1929, 21.03.1928, 07.03.1928, 15.08.1928, 20.03.1929 தமிழன் இதழ்களை படித்தால் இந்த உண்மையை எவரும் அறியலாம்.

1925ற்குப் பிறகு பெரியார் முழு நாத்திகராய் செயல்படத் தொடங்கியது முதல் பௌத்தத்தை ஆதரித்தார். கடவுள் சார்ந்தவற்றை எதிர்த்தார். மற்றபடி ஆரிய பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்றவற்றில் அயோத்திதாசருடன் ஒன்றியே செயல்பட்டார். அயோத்ததாசரை பல நேரங்களில் உயர்த்தி, பாராட்டி, போற்றினார். பலரும் அறியும்படிச் செய்தார்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *