கே: துப்புரவு பணியாளர் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டும் நிலையில் திராவிடர் கழகம் இதை வலியுறுத்துமா?
– புரட்சிதாசன், சிதம்பரம்
ப: தலையில் மலம் சுமக்கும் அவலமும்கூட இருப்பதா என்று வெகுகாலமாக எதிர்த்து வருவதோடு, பெரியார்_மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு புது யந்திரமும்கூட கண்டுபிடித்து _ சோதனைக்குத் தயாராக உள்ளது. திராவிடர் கழகமே துப்புரவுத் தொழிலாளர் கழகம்தான் என்று 35 ஆண்டுகளுக்கு முன்பே புத்தகம் வெளியிட்டது திராவிடர் கழகம்.
கே: அறிஞர் அண்ணாவிடம் தங்களால் மறக்கமுடியாத நிகழ்வு எது? அண்ணாவின் மறைவு நாளான பிப்ரவரி 3இல் ஆட்சியாளருக்கு சொல்ல விரும்பும் கருத்து?
– இன்பா, மதுரை
ப: தலைவர் தந்தை பெரியாரிடம் காட்டிய, ‘குருபக்தி’ போன்ற தலைமைத்துவத்தை மதித்துப் போற்றிய பண்பு. தனது அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாகப் பிரகடனப்படுத்தியது. ‘தனது வாழ்வின் வசந்தம்’ தந்தை பெரியாருடன் இருந்த காலமே என்ற அரிய உண்மைக் கூற்று. இதில் ஒரு சிலவற்றைப் பின்பற்றாவிட்டாலும், மாறாக நடக்காமல் இருப்பதே இன்றைய ஆட்சியாளர் பெரியாருக்குச் செய்யும் கைமாறு ஆகும்.
கே: இடஒதுக்கீட்டில் படித்து வந்தவர்களே, அதைப் பற்றிய அடிப்படை தெரியாமலிருப்பதன் காரணம் என்ன?
– விநாயகம், தாம்பரம்
ப: யாரோ பாடுபட்டு சேர்த்துக் கொடுத்த மதிப்பு, லகுவாக எளிதில் பெற்று அனுபவிப்போருக்கு எப்படி சரியாகத் தெரியாதோ அதேபோன்ற நிலைதான்! எதையும் போராடிப் பெற்றால் அதன் அருமை புரியும்!
கே: உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக வடஇந்தியத் தலைவர்கள் யாருக்கும் புரிதல் இல்லையா? அல்லது வேண்டுமென்றே வாக்குவங்கி அரசியல் செய்கிறார்களா?
– உ.விஜய், சோழங்குறிச்சி
ப: இரண்டும்தான். முன்பேகூட முதல் சட்டத் திருத்தத்தின்போதும் மண்டல் போராட்டத்தின் போதும்கூட இதே நிலை. தெற்கும் திராவிடமும் ‘வகுப்பு’ எடுத்த பிறகே புரிந்து நம்மோடு இணைந்தார்கள். அடுத்து வருவார்கள்!
கே: ‘இந்தியாவை வாழவைப்போம்’ என்ற போர்வையில், பார்ப்பனரை வாழவைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வை தமிழர்கள் சிலரும் ஆதரிப்பது ஏன்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: கோடரியின் காம்பு மரம்தானே. அதுதானே மரத்தை வெட்ட உதவுகிறது அதுபோல!
கே: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் தங்களை மிகவும் கவர்ந்தது எது?
– மா.வேலுச்சாமி, திருச்சி
ப: எல்லாம். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பது ‘மானிட சமுத்திரத்தை’ முழுதும் அளந்த பரந்த பார்வை!
கே: தம்பிதுரை மட்டும் பி.ஜே.பி.யை எதிர்க்கும் நிலையில் எடப்பாடியின் மவுனம் எதைக் காட்டுகிறது?
– அ.கன்னியப்பன், வேலூர்
ப: மடியில் கனம்; வழியில் பயம். பழமொழி தெரியுமல்லவா?
கே: உயர்ஜாதிக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுப் பயனை பார்ப்பனர்களே பெரிதும் அறுவடை செய்வர் என்ற எனது கருத்து சரியா?
– பா.மாணிக்கம், ஈரோடு
ப: 100க்கு 100 சரி. மற்ற ஜாதியினரில் உ.பி.யில் 12 சதவீதம் அவர்கள்தான். வட இந்திய மாநிலங்களிலும் சரி, இங்கும் சரி. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளை கபளிகரம் அதிகம் யார் செய்தார்கள்? அவர்கள்தானே!