ஆறு. கலைச்செல்வன்
தொண்டையைக் கனைத்துக் கொண்டே செல்லதுரையின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணாயிரம். அவர் எதற்காக வந்துள்ளார் என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டார் செல்லதுரை. சூலை மாதம் வந்துவிட்டால் விவசாயக் கல்லூரி மாணவர்களோ, மாணவிகளோ கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தில் அவர்களின் கிராமத்தை தேர்வு செய்து ஆண்டுதோறும் வருவார்கள். அவர்கள் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்குப் பெரும்பாலான கல்லூரிப் பேராசிரியர்கள் கண்ணாயிரத்தைத் தான் தொடர்பு கொள்வார்கள். அவர் அந்த அளவுக்கு வெளியுலகத் தொடர்பு வைத்திருந்தார். இவ்வாண்டு இருபது மாணவிகள் அவர் வசிக்கும் கிராமத்திற்கு பயிற்சிக்காக வர உள்ளனர். அவர்கள் தங்க செல்லதுரையின் வீட்டைக் கேட்டுத்தான் வந்தார் கண்ணாயிரம்.
“வா கண்ணாயிரம். சூலை மாதம் வந்துட்டுது இல்லையா! வழக்கம்போல கோரிக்கையோடுதான் வந்திருக்கேன்னு நெனைக்கிறேன்’’ என்றார் செல்லதுரை.
“ஆமாம் செல்லதுரை. இந்த வருஷம் இருபது மாணவிகள் வர்ராங்க. எல்லோரும் கடைசி வருஷம் படிக்கிறாங்க. அடுத்த வருஷம் வேலை, கல்யாணம்னு போயிடுவாங்க. காலியாயிருக்கிற உன்னோட மாடி வீடுதான் வழக்கம்போல அவங்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும். உன் வீட்டுல தங்கி பயிற்சி எடுத்துக்கிட்டு அடுத்த வருஷமே அவங்க வேலைக்குச் சேர்ந்தா உனக்கும் பெருமைதானே!’’
“ம்… ம்… வரட்டும். வரட்டும். என் வீட்டில் தங்க அது மட்டும்தான் காரணமா கண்ணாயிரம்?’’
“அதெல்லாம் நான் சொல்லணுமா! நம்ம ஊரில் பலர் வேறு சாதி பொண்ணுங்க வந்தா வீடு கொடுக்க மாட்டாங்க. தாழ்ந்த ஜாதின்னு சொல்ற பொண்ணுங்க வந்தா யோசனை பண்றவங்களும் ஊரில் இருக்கத்தானே செய்றாங்க செல்லதுரை!’’
“ஆமாம் கண்ணாயிரம். அதையெல்லாம் சரி பண்ணனும். ஜாதியை ஒழிக்கணும். அதுக்கு நம்மாலான உதவியை செய்ஞ்சுத்தானே ஆகணும்!’’
“உண்மைதான் செல்லதுரை. உன்னைப் பார்த்து ஊரில் பலர் திருந்திகிட்டு வர்ராங்க. ஆனா, மொத்த கிராமத்தையும் திருத்தனும். முக்கியமா உன் மனைவியைக்கூட….’’ என்று இழுத்தார் கண்ணாயிரம்.
காரணம் அப்போது செல்லதுரையின் துணைவியார் அமிர்தம் அங்கு வந்தார். அவரைப் பார்த்து விட்டுத்தான் பேச்சை நிறுத்தினார் கண்ணாயிரம். அவர் கையில் காப்பி டம்ளர் இருந்தது.
“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பதைப் போல தங்கச்சி வர்ரதுக்கு முன்பே கமகமன்னு காபி வாசம் வருது. கொடும்மா காப்பியை’’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார் கண்ணாயிரம்.
“அப்படின்னா என் ஆத்துக்கார அம்மாவை யானைன்னு சொல்றீயா? பார்த்தியா அமிர்தம்! கண்ணாயிரம் உன்னை யானைன்னு சொல்றார்!’’ என்று கிண்டலடித்தார் செல்லதுரை.
அமிர்தமும் சற்று வெட்கத்துடன் “நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்க்கிறேன். பட்டினிகூட கிடந்து பார்த்துட்டேன். ஆனா உடம்புதான் குறைய மாட்டேங்குது’’ என்றார்.
“உடம்பு குறைய நடைப்பயிற்சி செய்யணும்மா. வாக்கிங்தான் பெஸ்ட் எக்சசைய்ஸ். அதுக்கு எந்த செலவும் இல்லை. எந்தக் கருவியும் வேணாம். காட்டுக்கு ராசா சிங்கம் என்பதைப் போல உடல் பயிற்சிக்கு ராசா நடைப்பயிற்சிதான்’’ என்றார் கண்ணாயிரம்.
“என்னப்பா கண்ணாயிரம். நீ சொல்றதைப் பார்த்தா நானும் நடைப்பயிற்சி செய்யலாம் போலிருக்கே’’ என்றார் செல்லதுரை.
“கண்டிப்பா. உனக்கு சர்க்கரைக் குறைபாடு இருக்கு. நீ தினமும் ஒரு கிலோ மீட்டர் முதல் அய்ந்து கிலோ மீட்டர் வரை நடந்தால் நல்லது. அல்லது ஒரு மணி நேரமாவது நடக்க வேணும். சுருண்டு கிடக்கிற மெலிசான ரத்தக் குழாய்கள் எல்லாம் விரிஞ்சி கொடுக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மாரடைப்பும் பக்கவாதமும் தடுக்கப்படும். நடந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். உடல் பருமனும் இதனால் குறையும்.’’
“இதையெல்லாம் எங்கு படிச்சே கண்ணாயிரம் நிறைய சொல்றீயே’’
“இன்னும் இருக்கு செல்லதுரை. நடக்கும்போது காற்றை நல்லா உள்வாங்கறதால சுவாச நோய்களும் குறையும். மன அமைதியும் ஏற்படும். முழங்கால் வலியும் போகும். உணவும் செரிமானம் ஆகும். மலச்சிக்கலும் வராது.’’
“பரவாயில்லை கண்ணாயிரம். நாளை முதல் நானும் நடைப்பயிற்சி செய்றேன். அமிர்தம், நீயும் என்னோட வா’’ என்று துணைவியாரிடம் கூறினார் செல்லதுரை.
கண்ணாயிரம் காப்பியை உறிஞ்சியபடியே “அப்புறம் அந்த மாணவிகள் விஷயம்’’ என்றார்.
“ம். வீடு தரமாட்டேன்னு சொன்னா விடவா போற. அதுக்காகத்தானே இவ்வளவு நேரம் பேசினே. உனக்காக வீடு தர்ரேன். பொம்பள புள்ளங்க. பத்திரமா தங்கியிருக்கனும்’’ என்றார் செல்லதுரை.
கண்ணாயிரம் மகிழ்ச்சியுடன் விடைபெறத் தயாரானார். கிளம்பும் முன் அமிர்தம் பக்கம் திரும்பி, “உங்க பையன் மலர்மன்னன் நல்லாயிருக்காரா? எப்போ ஊருக்கு வர்ரார்?’’ எனக் கேட்டார்.
“சென்னையிலேயிருந்து அடிக்கடி வரவா முடியுது! லீவு அதிகம் கிடைக்கலையாம். எப்பவாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால்தான் உண்டு’’ என்றார் அமிர்தம்.
“ஒரு விவசாயியின் மகன். விவசாயத் துறையில் வேலையில் இருக்கிறது எவ்வளவு பெருமையா இருக்குத் தெரியுமா?’’ என்று கூறியபடி கிளம்பினார் கண்ணாயிரம்.
ஆம். செல்லதுரை_அமிர்தம் ஆகியோரின் மகன் மலர்மன்னன் வேளாண் துறையில் அலுவலராகச் சென்னையில் பணியாற்றுகிறான்.
சில நாட்கள் கடந்த பின் ஒரு நாள் மாலை செல்லதுரையின் வீடு முன்பு ஒரு வேன் வந்து நின்றது. அது விவசாயக் கல்லூரி வேன். அதிலிருந்து கல்லூரி மாணவிகள் பெட்டிகளுடன் கீழே இறங்கினர்.
கண்ணாயிரம் தயாராக இருந்து அவர்களை வரவேற்றார். அந்த இருபது மாணவிகள் கொண்ட குழுவிற்கு தலைவியாக கலாராணி என்ற மாணவி பேராசிரியர்களால் நியமனம் செய்யப்பட்டிருந்தாள். அவள் தன்னை செல்லதுரையிடமும், கண்ணாயிரத்திடமும் அறிமுகம் செய்துகொண்டாள்.
“அமிர்தம், வீட்டு சாவியை எடுத்து வா’’ என்று துணைவியாரிடம் கூறினார் செல்லதுரை.
“அதெல்லாம் நான் சொல்லணுமா! நம்ம ஊரில் பலர் வேறு சாதி பொண்ணுங்க
வந்தா வீடு கொடுக்க மாட்டாங்க. தாழ்ந்த ஜாதின்னு சொல்ற பொண்ணுங்க வந்தா
யோசனை பண்றவங்களும் ஊரில் இருக்கத்தானே செய்றாங்க செல்லதுரை!’’
“அம்மா கலாராணி. பக்கத்து வீட்டில்தான் நீங்க தங்கப் போறீங்க. எல்லா வசதியும் இருக்கு. ஏதாவது குறையிருந்தா கண்ணாயிரத்திடம் சொல்லுங்க. உடனே செஞ்சித் தர்ரேன்’’ என்று கூறிய செல்லதுரை அமிர்தம் எடுத்துவந்த சாவியை கண்ணாயிரத்திடம் கொடுத்து அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். மாணவிகள் அனைவரும் துள்ளிக் குதித்தபடிச் சென்றனர்.
அடுத்த நாள் அந்தத் தெருவே கிடுகிடுத்தது. மாணவிகள் தங்கியிருப்பதை அறிந்த அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் அவர்களைக் காண ஆவலுடன் வந்தனர். சிறுமிகள் அவர்களின் உடைகளை ஆவலுடன் பார்த்தனர். பலரும் மாணவிகளுடன் ஆசையாகப் பேசி அவர்களுக்கு ஏதேனும் உதவி என்றால் செய்து தருவதாக உறுதியளித்தனர்.
இருப்பினும் சில பெண்கள் வந்திருக்கும் மாணவிகளின் ஜாதிகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். தங்களின் கற்பனைக்கேற்றபடி ஒவ்வொரு பெண்ணும் இன்ன இன்ன ஜாதியாக இருக்குமோ எனக் கிசுகிசுத்துக் கொண்டனர்.
சற்று நேரத்திலேயே மாணவிகள் அனைவரும் வெளியே வந்து ஊரில் விவசாயம் செய்யும் மக்களைச் சந்தித்துப் பேசத் தொடங்கினர். தங்கள் வருகையின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறினர்.
மறுநாள் தொடக்கவிழா நடைபெற்றது. வேளாண் கல்லூரிப் பேராசிரியர்கள் வந்தனர். செல்லதுரை, கண்ணாயிரம் உட்பட ஊரிலுள்ள விவசாயிகள் பலரும் அதில் கலந்து கொண்டனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த செல்லதுரையின் மகன் மலர்மன்னனும் விழாவில் கலந்து கொண்டான். விழாவில் குழுத் தலைவி என்ற முறையில் கலாராணி வரவேற்புரையாற்றினார். வேளாண் அதிகாரியான மலர்மன்னனும் பேசினான். விவசாய மேம்பாட்டுக்கான அரசின் திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தான்.
மறுநாள் முதல் மாணவிகள் அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்தனர். வயல்களில் இறங்கி நவீன முறையில் நாற்றுகளை நட்டுக் காட்டினர். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைப் பற்றி எடுத்துக் கூறி அவைகளை அழிக்கும் முறைகளையும் எடுத்துரைத்தனர். விதைகளை சேகரிக்கும் முறை, பாதுகாக்கும் முறை ஆகியவைகளையும் செய்து காட்டினர். வீடுகளில் உள்ள தோட்டங்களில் கீரை விதைகள், காய்கறி விதைகளை தக்க பாத்திகள் அமைத்து ஊன்றினர். கலாராணி பம்பரமாகச் சுழன்று சற்றும் சளைக்காமல் வேலைகளில் ஈடுபடுத்தினாள்.
மலர்மன்னனுக்கு ஏனோ மேலும் சில நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டும்போல் தோன்றியது. மூன்று நாட்களுக்கு விடுப்பும் போட்டுவிட்டான். கலாராணியின் அபாரமான செயல்பாடு அவனை மிகவும் கவர்ந்தது.
மறுநாள் கலாராணியைச் சந்திக்கச் சென்றான் மலர்மன்னன். மாணவிகள் அனைவரும் குழுமியிருந்த நேரத்தில் அங்கு சென்ற மலர்மன்னனை அனைவரும் வியப்புடன் பார்த்தபடி வரவேற்றனர். மலர்மன்னன் தயங்கித் தயங்கி பேசினான்.
“எங்க வயலில் நெல் நடவு செய்துள்ளோம். காணிக்கு வருஷா வருஷம் அறுபது மூட்டை நெல் அறுவடை செய்வோம். நானும் வேளாண்மை அலுவலர்தான். என்னால் அவ்வளவுதான் முடிஞ்சுது. நீங்களும் வயலை வந்து பார்த்து விளைச்சலை மேலும் அதிகரிக்க யோசனை சொல்லணும்’’ என்றான்.
கலாராணியும் அதற்கு ஒப்புக்கொண்டு சக மாணவிகளையும் அழைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றாள்.
வயலுக்குப் போட்ட உரங்களைப் பற்றியெல்லாம் மலர்மன்னனிடம் கேட்டாள்.
“குப்பை எரு, பசுந்தாள் உரம் எல்லாம் வயலுக்கு கொடுத்தீர்களா?’’ என்று கேட்டாள்.
மலர்மன்னன் இயற்கை உரங்களை எப்போதுமே பயன்படுத்துவதில்லை.
“இல்லை’’ என்று பதிலளித்த அவனை ஏறிட்டு நோக்கினாள் கலாராணி.
“இயற்கை உரம், இயற்கை பூச்சிமருந்து இவைகளைப் பயன்படுத்தணும். இரசாயண பூச்சிக் கொல்லிகளை அடித்து நன்மை தரும் பூச்சிகளை அழிக்கக் கூடாது. நண்டு, நத்தை போன்ற உயிரினங்களை அழிக்கக் கூடாதல்லவா!’’ என்றாள்.
மேலும் இயற்கையான பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் முறையினையும் எடுத்துரைத்தாள்.
அவளுடைய பேச்சும் செயல்பாடும் அவனை மிகவும் கவர்ந்தது. விடுப்பை மேலும் சில நாட்களுக்கு நீடித்தான். கலாராணியை அடிக்கடி விரும்பி சந்தித்தான். இதையெல்லாம் கவனித்த பிற மாணவிகள் ஏதோ இரகசியமாகப் பேசிக் கொண்டனர். சிலர் கலாராணியைக் கிண்டல் செய்யவும் தொடங்கினர்.
கலாராணி அவர்களைக் கடுமையாக எச்சரித்தாள்.
“நாம இங்கு வந்திருப்பது விவசாயப் பயிற்சி பெறுவதற்காக. மத்தவங்க நம்மகிட்ட வந்து பேசினால் நாம் அவங்களோட சந்தேகங்களைப் போக்க வேண்டும். அதுதான் நம்ம கடமை. அதுக்கு வேற எந்த முலாமும் பூச வேண்டாம்’’ எனக் கூறி மாணவிகளைக் கடிந்து கொண்டாள்.
ஆயினும் இதையெல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த செல்லதுரைக்கும் கண்ணயிரத்துக்கும் குழப்பமாகவே இருந்தது.
ஒரு நாள் மலர்மன்னனைச் சந்தித்துப் பேசினார் கண்ணாயிரம்.
“தம்பி, நீ நல்ல வேலையிலும் இருக்க. கை நிறைய சம்பாதிக்கிற. கல்யாணம் பண்ற வயசும் ஆயிடுச்சு. பொண்ணு பார்க்கட்டுமா?’’ எனக் கேட்டார்.
மலர்மன்னன் தயங்கியபடியே நின்றான். அவன் ஏதோ சொல்ல முயன்றான். ஆனால், அதற்குள் கண்ணாயிரமே முந்திக்கொண்டு,
“நீயே பெண் பார்த்துட்டியா? அப்படின்னா சொல்லு’’ என்றார்.
“கலாராணி நல்ல பெண்தானே மாமா?’’ என்று பட்டென கேட்டுவிட்டான் மலர்மன்னன்.
தாங்கள் நினைத்தது சரிதான் என்பதை உணர்ந்த கண்ணாயிரம் மெல்ல புன்னகைத்தவாறே,
தம்பி, அவ என்ன ஜாதின்னு தெரியுமா?’’ எனக் கேட்டார்.
“ஜாதிதான் முக்கியமா மாமா?’’ என்று கேட்டான் மலர்மன்னன்.
“நீ ஒரு முற்போக்காளன்தான். கலாராணி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதை அறிந்துகொண்டேன். உங்க அப்பாவைப் பற்றி பிரச்சினை இல்லை. ஆனா, உங்கம்மா விரும்ப மாட்டாங்களே.’’
“அதை நீங்களும் அப்பாவும்தான் பக்குவமா அம்மாகிட்ட எடுத்துச் சொல்லணும்’’
“சரிப்பா. கலாராணி ரொம்ப கண்டிப்பான பொண்ணு. இப்ப இதைப் பற்றி அவகிட்ட எதுவும் கேட்கக் கூடாது. பயிற்சிதான் அவளுக்கு முக்கியம். அவ அம்மா அப்பாகிட்டே பேசிடுவோம். அதுக்கு முன்னாடி உன்னோட அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லணும்’’ என்று கூறியபடியே சென்றார் கண்ணாயிரம்.
ஆயினும், கலாராணி மலர்மன்னன் தன்னை விரும்புவதை அறிந்தே இருந்தாள். அதை அவள் காட்டிக் கொள்ளவில்லை.
செய்தியைக் கேள்விப்பட்ட செல்லதுரை கலாராணியை மருமகளாக்கிக் கொள்ள முழு மனதுடன் விரும்பினார். ஒரு நாள் அந்தச் செய்தியை அமிர்தத்திடம் சொல்லிவிட்டார். அவருக்கு மயக்கமே வந்துவிட்டது.
“என்னதான் நெனைச்சிகிட்டீங்க. ஒரு தாழ்ந்த ஜாதி பொண்ணையா என் பையனுக்கு பாக்கறீங்க’’, என்று கத்தினார்.
“அமிர்தம், ஜாதி என்பது பாதியில் வந்த சதி! நடத்தையும், பண்புமே பார்க்கப்படணும்! கலாராணியோடு பழகிப் பார்’’ என்றார்.
அப்போது ஊரே சோகத்தில் மூழ்கும் நிகழ்வு நடந்தது. அனைவர் வயல்களையும் புகையான் பூச்சி தாக்கிவிட்டது. பயிர்கள் அழுகி வீணாயின. செல்லதுரையும் தனக்கு நிறைய நட்டம் ஏற்பட்டு விடுமோ எனப் பயந்தார். விவசாயிகள் நிலத்தில் இறங்கினாலே பயிர்களில் பூச்சிகள் பறந்தன. கால்களை மொய்த்தன. கலாராணி துணிந்து இறங்கி பூச்சிகளின் தாக்கத்தின் தன்மையை ஆய்வு செய்தாள். பேராசிரியர்களையும், அலுவலர்களையும் கொண்டுவந்து காட்டினாள்.
இயற்கை பூச்சி மருந்தை தயாரித்தாள். எருக்கு இலை, வேப்பம் இலை, தும்பை, துளசி, குப்பைமேனி ஆகியவற்றைக் கொண்டு இயற்கைப் பூச்சி விரட்டியைத் தயார் செய்து பயிர்களுக்குத் தெளிக்க ஏற்பாடுகள் செய்தாள். அதற்கு நல்ல பயன் கிடைத்தது. பூச்சிகள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. பயிர்கள் காப்பாற்றப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் கலாராணியின் திறமையையும் உழைப்பையும் கண்டு வியந்தனர். அமிர்தமும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
ஆனால், கடும் உழைப்பின் காரணமாக கலாராணியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடும் சுரத்தினால் அவதிப்பட்டாள். மருத்துவனைக்கும் சென்று வந்தாள்.
ஒரு நாள் மாலை செல்லதுரை வெளியில் சென்றவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார். உடன் கண்ணாயிரமும் வந்தார். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைத் திகைப்படையச் செய்தது. கூடவே மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அங்கு வீட்டிற்குள் கலாராணி கட்டிலில் படுத்திருந்தாள். அவளுக்கு மாத்திரையை பிரித்துக் கொடுத்துக் விழுங்கச் செய்து கொண்டிருந்தார் அமிர்தம். மேலும், அவள் நெற்றியில் தைலத்தைத் தடவி வாஞ்சையுடன் அவளைத் தன் மடியிலும் சாய்த்துக் கொண்டார்.
“என்ன?’’ என்பதுபோல் திகைப்புடன் அவரை செல்லதுரையும் கண்ணாயிரமும் பார்த்தனர்.
“என் வருங்கால மருமகளுக்கு நான் மருந்து கொடுத்து பணிவிடை செய்கிறேன். ஊர்ப் பயிர்களின் நோயைப் போக்கிய இவளுக்கு இவளின் நோயைப் போக்க வேண்டியது நம் கடமையாயிற்றே’’ என்று சொன்ன அமிர்தத்தை மகிழ்வுடன் நோக்கினர் இருவரும்.