ஆசிரியராய் பணியாற்றிக் கொண்டே அரும்பெரும் தொண்டாற்றும் கனகலட்சுமி

பிப்ரவரி 01-15 2019

சென்னை செனாய் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் முனைவர் கனகலட்சுமி. இவரின் சொந்த ஊர் கோவில்பட்டி. பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை சராசரி மாணவியாகவே இருந்திருக்கிறார். கனவை நனவாக்கவே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்தார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், ஆசிரியர் பயிற்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ராமநாதபுரத்தில் உள்ள கடுக்காய் வலசை கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய இவர், மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகக் கற்பித்தால் போகலூர் ஒன்றியத்தின் ஆசிரியர் பயிற்றுநர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் செங்கல் சூளைகளில் உள்ள குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார்.

தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாகக் குழந்தைத் தொழிலாளர்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள ‘கசடறக் கற்க கற்பிக்க தமிழ் வாசிக்க எழுத 45 நாட்கள்’ புத்தகம் தமிழ் படிக்க, எழுதத் தெரியாத மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. கணக்குப் பாடத்தை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் ‘கணக்குக் கையேடு’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் இவரின் தமிழ்ப் புத்தகத்தைக் கொண்டு விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வாக்கியங்களைப் பிழையில்லாமல் எழுதவும் சரளமாகப் படிக்கவும் செய்துள்ளனர்.

இவரின் புத்தகங்களை வைத்துத் தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. “தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வளைவுக்கும் வரி வடிவங்களுக்கான ஒலி வடிவ முறை உண்டு. ஆனால், நாம் ஒலி வடிவங்களை மறந்ததன் விளைவு பிள்ளைகளுக்குத் தமிழை எழுதக் கற்றுத் தருவதற்குப் பதிலாக ஓவியம் போல் வரையவே கற்றுக் கொடுக்கிறோம். இது மாற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் இலக்கியங்களில் தமிழ் எழுத்துகள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதை ஆய்வு செய்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன்’’ என்கிறார் கனகலட்சுமி. தற்போது முதியோர் கல்விக்கும் இந்தப் புத்தகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலக சாதனை

இவரது புத்தகத்தைக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எளிமையான முறையில் தமிழைக் கற்பிக்கும் முறை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் 1,56,170 அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழை வாசிக்கச் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு அமெரிக்காவின் உலக சாதனை நிறுவனம் சார்பில் பாராட்டி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் பள்ளிப் பணியினை முடித்துவிட்டு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தமிழின் உயிர் எழுத்து, மெய் எழுத்துகளை உச்சரிப்புடன் சொல்லித் தருகிறார்.

தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவே தனக்கு வந்த பணி உயர்வையெல்லாம் தவிர்த்திருக்கிறார். “வாழ்வின் இறுதி வரை தமிழ் மொழிக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே லட்சியம்’’ என்கிறார் ஆசிரியர் கனகலட்சுமி.

தகவல் : சந்தோஷ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *