சமூக நீதியைக் காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்

பிப்ரவரி 01-15 2019

ழகரன்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமே சமூகநீதியைப் பாதுகாக்கத்தான் 1951இல் ஏற்பட்டது. ஆனால், சமூகநீதியை அடியோடு குழித்தோண்டி புதைக்க 103ஆவது சட்டத்திருத்தம் ஏற்பட்டுள்ளது. உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு என்ற போர்வையில் உயர்ஜாதி பார்ப்பனருக்கு இதுவரை இல்லாத 10% இடஒதுக்கீடு அளிக்க வழிகோலுவதுதான் இந்தத் திருத்தம். அதுவும் உரிய கால அவகாசம் அளிக்கப்படாமல் இதுவரை இல்லாத அளவில் அவசர அவசரமாக இரண்டே நாட்களில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. நீட் தேர்வில் விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளாக இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆனால், உயர் ஜாதியினருக்கு என்பதால் இரண்டே நாளில் கையெழுத்திடுகிறார் குடியரசுத் தலைவர்.

இந்நிலையில் சமூகநீதியின் தாயகமான தமிழ்நாட்டில் மட்டும் இதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அநீதியான இந்த சட்டத்தை எதிர்த்து சமூகநீதியில் கொள்கை ரீதியாகவும், அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் செயல்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்டு சென்னை பெரியார் திடலில் 19.01.2019 அன்று நடைபெற்றது. சமூகநீதிக் காவலரான திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன், தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிஜாமுதின், மனிதநேய மக்கள் கடசித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.அய் கட்சி மாநில பொருளாளர் உமர்பரூக், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் எஸ்றா சற்குணம், விவசாயத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார், பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் அமைப்பின் பொறுப்பாளர் பார்த்தசாரதி, தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இரத்தினசபாபதி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர் சாந்தி ஆகியோர் பங்கேற்று  சமூகநீதி வரலாறு குறித்தும், 10% பொருளாதார இடஒதுக்கீட்டின் தீங்கு குறித்தும் கருத்துகளை வழங்கினர்.

“இந்தச் சட்டம் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகவும் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிராகவும் உள்ளதை சுட்டிக்காட்டி, எந்தவித புள்ளி விவரங்களும் அறிவியல்பூர்வ கணக்கீடுகளும் இல்லாமல் இத்தகைய ஒதுக்கீடு அளிப்பது சட்ட விரோதம் என்றும் தெரிவித்துக் கொள்வதுடன், 8 இலட்ச ரூபாய் வருமானமுள்ள உயர்ஜாதியினரை ‘வீக்கர் செக்ஷன்’ என்று குறிப்பிடுவது ‘மகா மோசடி’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆபத்தை அகற்ற,

1. நீதிமன்றங்கள் வழியாக செயல்படுவது.

2. மக்கள் மத்தியில் பிரச்சாரம், போராட்டம் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

3. துண்டறிக்கைகள் வழங்குவது.

4. நாடு தழுவிய அளவில் பொதுக்  கூட்டங்களை நடத்துவது.

5. மாணவர், இளைஞர் மத்தியில் கொண்டு செல்லுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *