தலையங்கம்

பிப்ரவரி 01-15 2019

அரசியல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாய் சட்டத் திருத்தம் ! சமூக நீதிக்கு எதிரானது!

ஒரு நாள் இரவில் (நவம்பர் 8, 2016) பண மதிப்பிழப்பு (Demonetisation) பிரதமர் மோடி அறிவித்தார்.

ஒரு நாள் இரவு நடுநிசியில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது!

100 ஆண்டு வரலாற்றையும், பல்வேறு போராட்டங்களையும் வரலாறாகக் கொண்ட சமூகநீதி என்ற பெயரால் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினரான ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு – வேலை வாய்ப்பு, கல்வி  இரண்டு துறைகளிலும் அளிக்கப்படும் என்ற அரசியல் சட்டத் திருத்தத்தை இரண்டே நாட்களில் மக்களவை, மாநிலங்களவைகளில் நிறைவேற்றி – அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய கெசட்டிலும் வெளியிட்டு, 14.1.2019 முதல் அமலாக்கத்திற்கு வந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இவ்வளவு அவசர («)காலத்தில் ஒரு சட்டத் திருத்தம் இதற்கு முன் எப்போதும் நிறைவேறியதாகத் தெரியவில்லை!

தும்பை விட்டு வாலைப் பிடித்தவர்களைப்போல, எதிர்க்கட்சிகளில் தி.மு.க.வைத் தவிர மற்றவர்கள் எதிர்த்து வாக்களிக்காமல், ஓட்டுப் போட்டு நிறைவேற விட்டுவிட்டு, பிறகு இதன் உள்நோக்கம்பற்றி விசாரிப்பது – அண்மைக்கால அரசியல் விசித்திரங்களில் ஒன்று!

2019 இல் நடைபெறும் தேர்தலுக்கு இன்னும் 100 நாள்கள் கூட இல்லை; 2019 மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வரவிருக்கும் நிலையில், எந்த ஓர் அரசியல் சட்டத் திருத்தமும் – இவ்வளவு ‘ஜெட்’  வேகத்தில் சரியான விவாதங்களோ – செலக்ட் கமிட்டி விவாதமோ, திருத்தங்களோ ஏதும் இல்லாத வகையில் நிறைவேற்றப்பட்ட ஒரே சட்டத் திருத்தம் இந்த 103 ஆவது திருத்தம்தான்!

சில மாதங்களுக்குமுன் 2018 இல் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களிலும் அதுவும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். மண் என்று அவர்களால் நம்பப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இந்தி மாநிலங்களில் ஆட்சியை இழந்த பதற்றத்திலிருந்து, இனிவரும் தோல்விகளிலிருந்து தப்புவதற்குப் பல வழிவகைகளையும் காணும் முயற்சியிலே இப்படி – காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்ட வேகம்!

இது அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே அடியோடு தகர்க்கும் சட்டத் திருத்தம் அல்லவா என்ற கேள்வி நாடு தழுவிய அளவில் சட்ட நிபுணர்களால் கேட்கப்படுகிறது!

சில கேள்விகள் – இதுவரை மோடி அரசு பதில் கூறாதவை:

1. இப்படி ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே மத்திய அரசு, ஏதாவது ‘சர்வே’ நடத்தி உயர்ஜாதி ஏழைகள் எத்தனை சதவிகிதம் என்று கண்டறிந்துள்ளதா?

2. உயர்கல்வி நிறுவனங்களில் சேராத, சேர்ந்து படிக்காமல் தவிக்கும் உயர்ஜாதி ஏழைகள் – பலவீனமான பிரிவினரில் அல்லது (இப்போது கூறும்) பொதுப் பிரிவினரிலிருந்து எவ்வளவு சதவிகிதம் என்பது கண்டறியப்பட்டதா? புள்ளி விவரம் உள்ளதா?

3. 10 சதவிகிதம் என்பது, எந்த அடிப்படையைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது?

4. ஏற்கெனவே முந்தைய அய்க்கிய முன்னணி அரசால் பொதுத் துறை நிறுவன வங்கிகளில், சொத்து ஜாமீன் (Collateral Security)  ஏதும் இல்லாமலே கல்விக் கடன், உயர்கல்வி படிக்கும் ஏழைகளுக்கு வழங்கும் சட்டம் இருக்கும்போது, இப்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு உயர்ஜாதியினருக்கு உயர் கல்வியில் தேவை என்பது தேவையா? இது ஒரு அரசியல் வித்தை (Political Gimmick) என்பதல்லாமல் வேறு என்ன?

5. ஏற்கெனவே 19.10.2006 இல் – எம்.நாகராஜ் & மற்றவர்கள் Vs அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில் இரண்டு அளவுகோல்கள் முக்கியம் என்று வற்புறுத்தப்பட்டுள்ளதே.

1. சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட தன்மை (socially backwardness)

2. போதிய பிரதிநிதித்துவம் இன்மை – இவை கருத்தில் கொள்ளவேண்டியவை. (In adequacy of representation) (இது பின்னால் பல தீர்ப்புகளில் பின்பற்றப்பட்டுள்ளது).

இந்நிலையில், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு இப்போது, இது உயர்ஜாதியினருக்கு மட்டுமல்ல, எல்லா ஏழைகளுக்கும் அல்லது பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கும் என்று ஏடுகளில் திட்டமிட்ட ஒரு பித்தலாட்டப் பொய்யை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்!

103 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டு, அமலாக்க, மத்திய அரசு வற்புறுத்தும் சட்டத்தில்,

(6) Nothing in this Article or sub-clause (g) of clause (1) of Article 19 or clause (2) of Article 29 shall prevent the State from making,
(a) any special provision for the advancement of any economically weaker sections of citizens other than the classes mentioned in clauses (4) and (5); and….

‘‘16(4) சரத்தின் 4 ஆவது பிரிவு, 5 ஆவது பிரிவின்கீழ் வருகின்றவர்களைத் தவிர மற்றவர்கள்’’ என்றால், அதன் பொருள் என்ன?

தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.,),

மலைவாழ் மக்கள் (எஸ்.டி.),

இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.) தவிர என்பதுதானே?

உயர்ஜாதியினருக்குப் பொருளாதார (மறைமுகமாக) பலவீனம் இட ஒதுக்கீடு என்றுதானே பொருள்?

பொதுப் பிரிவினர் திறமை அடிப்படையில் தேர்வு என்பது, சுருங்கிய நிலையில், இதுவரை இந்த ‘‘உயர்ஜாதியினர்’’ குற்றம் சாட்டி வந்த ‘‘தகுதி, திறமை’’ வாதம் என்னவாயிற்று?

இனிமேலாவது பார்ப்பனர்கள் ‘‘தகுதி-திறமை’’ இட ஒதுக்கீட்டால் போய்விட்டது என்ற நீலிக் கண்ணீர் விட்டு அழாமல் இருப்பார்களா?

பார்ப்பனர்களுக்கு இரட்டை வேடம்; இரட்டை நாக்கு; இரட்டைப் போக்கு எப்போதும் கைவந்த கலையாகும்.

‘‘பிறப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது – தகுதி அடிப்படையில்தான் இருக்கவேண்டும்” என்பார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆக, ‘‘தகுதி’’ ஆகமப்படிப்பில் வெற்றி – அடிப்படை தேவை என்றால், அப்போது பிறப்பு அடிப்படையில் பாரம்பரிய அர்ச்சகர் முறை தேவை என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடுவார்கள்.

இதையும் இப்போது புரிந்துகொள்ளுங்கள்!

கி.வீரமணி

ஆசிரியர்,

‘உண்மை’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *