Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாசகர் மடல்

‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ சனவரி 1 – 15 இதழினைப் படித்தேன். அதில் கட்டுரைகள், கதைகள், சில குறிப்புகள் ஆகியவை அனைத்தும் அருமை. திருச்சியில் நடந்த கருஞ்சட்டை பேரணி குறித்த தகவல்கள்  அருமை. இதுபோன்ற கருஞ்சட்டை பேரணிகளை தமிழகத்தின் பல இடங்களில் நடத்த வேண்டும். என்னைப் போன்ற இளைஞர்களிடம் பெரியாரினைக் கொண்டு சேர்க்கும் பணியினை தீவிரப்படுத்துங்கள். குறிப்பாக, கொங்கு நாட்டில் இவற்றையெல்லாம் செய்யுங்கள். ஏனெனில் தற்சமயம் இப்பகுதிகளில் புதிது புதிதாக புதிய பெயர்களில் மதவாத அமைப்புகள் தோன்றிக் கொண்டுள்ளன. அவை மக்களை தன் பக்கமிழுக்க விதவிதமான செயல்களை செய்துகொண்டுள்ளன. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த அறிவியல் பரப்புரைகளை இப்பகுதிகளில் செய்ய வேண்டும். பேச்சில் வல்லவர்களான திராவிடர் இயக்கத்தினர் கார்ப்பரேட் சாமியார்களின் வண்டமான பித்தலாட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். அப்போதுதான் இப்பகுதி தொடர்ந்து அமைதியாக இருக்கும். இல்லையெனில் பல விபரீத விளைவுகள் வருங்காலத்தில் ஏற்படலாம். கல்லூரி மாணவிகளின் சிந்தனையினை தூண்டவல்ல, “பெண் ஏன் அடிமையானாள்?’’, “இந்தியாவில் ஜாதிகள்’’ ஆகிய இரு புத்தகங்களை அவர்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு அல்லது இலவசமாகவோ வழங்கலாம். தமிழகத்தினைப் பொறுத்தவரையில் மேற்கண்டவற்றையெல்லாம் திராவிடர் கழகம் செய்தாக வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகம் இன்னும் முன்னேற்றத்தையும் சாதனைகளையும் புரியும் மாநிலமாகும்.

சுயமரியாதை திருமண நிலையத்தின் கிளைகளை சென்னையினைத் தவிர தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களில் அமைக்க வேண்டும். பொருள் செலவற்ற அர்த்தமுள்ள இம்மணமுறையினைப் பற்றி இன்றைய இள வயதினரிடம் அதிகம் பிரச்சாரம் செய்தாக வேண்டும். இவையெல்லாம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக துடைத்தெறியும் என்பது என் நம்பிக்கை.

– எக்ஸ்ரே, சென்னை