கவிதை
-கவிமுகில் பெ.அறிவுடை நம்பி
அகமும் – புறமும்
வாழ்க்கை நெறியென
கண்டது – தமிழ்ப் பண்பாடு!
அய்ந்து நிலங்களை
அழகுடன் பகுத்து
வாழ்ந்ததும் நம் பண்பாடு!
கட்டிடக் கலையிலும்
கட்டிய அணையிலும்
கட்டியம் கண்ட தமிழ்நாடு!
முத்தமிழ் வளர்க்கவே
முச்சங்கம் அமைத்து
முத்திரை பதித்தது நம்நாடு!
தைத்திரு நாளே
தமிழன் ஆண்டாய்
தலைமேல் வைத்துக் கொண்டாடு!
கடல் கடந்த வணிகங்கள்
கட்டுமரப் பயணங்கள்
கண்டது நமது பண்பாடு!
காலத்தால் அழியாத –
காவியங்கள் பல தந்து
களிப்புற்ற உயர் பண்பாடு!
வாடிய பயிர்கண்டு
வாடிய உளங்கொண்ட
வள்ளலார் வளர்த்த பண்பாடு!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்று,
உலகிற்கு நீதிசொன்ன ஓங்கு புகழ்
வள்ளுவரின் வாழ்வியல் பண்பாடு!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றே
உலகமும் நம் உறவெனும் உயர்நிலை பண்பாடு!
இது,
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகெனும்
பகுத்தறிவுத் தந்தையின்,
பாசறை வழி வந்த
பண்பட்ட நமது தமிழ்நாடு!