ஆய்வுக் கட்டுரை

ஜனவரி 16-31 2019

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள்

ச.தீபிகா, தொல்லியல் ஆய்வாளர்

இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கை சுமார் 60,000 அவற்றுள் 44,000 தென்னிந்தியாவைச் சார்ந்த கல்வெட்டுகளாகும். அதில் சுமார் 28,000 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள். இந்தியாவில் கிடைத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ பாதியளவு தமிழ்நாட்டில் கிடைத்ததாகும். இத்தகைய தனித்துவம் மிக்க தென்னிந்திய கல்வெட்டுகளை முறையாக ஆவணப்படுத்தும் செயல் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொடங்கியது.

கல்வெட்டியல் எனப்படுவது கல்லில் பொறிக்கப்பட்ட செய்திகளை முறைப்படி ஆவணப்படுத்தி, அதைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்து பதிவு செய்வதே ஆகும். அக்கால மன்னர்கள், அதிகாரிகள், வீரர்கள் போன்றவர்களால் முக்கிய நிகழ்வாக கருதப்பட்டவை கல்லில் குறிப்பாகவோ, விரிவாகவோ, எழுத்து வடிவில் வெட்டி வைக்கப்பட்டன. அவையே கல்வெட்டுகள் எனப்படுகின்றன. எழுத்து வடிவம் தொடங்கிய காலம் தொட்டே கல்வெட்டுகளும் தோன்றிய காரணத்தினால், வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கான மூல ஆவணமாக கல்வெட்டுகள் ஆய்வாளர்களுக்கு பயன்படுகின்றன. எழுத்துகளின் பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்தி வகைப்படுத்துவதற்கும் முதன்மையாக உதவுவன கல்வெட்டுகளே ஆகும்.

பெரும்பாலான கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலும், குன்றுகளிலும் பாறைகளிலும், தூண்களிலும், சிற்பங்களிலும் காணப்படுகிறன்றன. கற்கள், பாறைகளுக்குப் பதில் செப்புப் பட்டயங்களிலும் இத்தகைய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.

தொன்மை வரலாற்றை சிற்ப, கட்டிடக் கலைகளைத் தவிர மிகத் தெளிவாக வெளிப்படுத்துவன கல்வெட்டுகளே! இந்திய கல்வெட்டியலில் தென்னிந்திய கல்வெட்டுகளின் எண்ணிக்கையும், பங்களிப்புகளும் மிகவும் அதிகம். ஆதலால் தென்னிந்திய கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ளுதல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்று மாணவர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கல்வெட்டியலைப் பயில்வோர் கல்வெட்டியலாளர் என்று அழைக்கப்படுவர்.

தொன்மை வரலாற்றை சிற்ப, கட்டிடக் கலைகளைத் தவிர

மிகத் தெளிவாக வெளிப்படுத்துவன கல்வெட்டுகளே!

அச்செடுத்தல்

அவரின் பணி என்பது கல்வெட்டுகளிலுள்ள செய்திகளைப் படிப்பது மட்டுமின்றி கல்வெட்டுகளைத் தேடுதல் (Field work), அச்செடுத்தல் (Estampage), அடையாளப் படுத்துதல் (Identification), ஆராய்தல் (Research), மொழிபெயர்த்தல் (Translation), ஆவணப் படுத்துதல் (Documentation) போன்ற களப் பணிகளையும் உள்ளடக்கியதாகும். கிடைக்கும் கல்வெட்டுகள் பெரிதும் பல மொழிகளிலும், பழைய எழுத்து வடிவங்களிலும் உள்ளமையால் கல்வெட்டியலாளர்கள் பல மொழி அறிந்த வல்லுநர்களாகத் திகழ்வர். இவர்களின் பணி மற்றவர்களுக்கு எளிதாகக் காணப்பட்டாலும் வரலாற்றை உண்மையாக எழுதுவதற்கு இவர்களுடைய பங்களிப்பு முதன்மையானதாகும்.

இந்தியாவில் முதல்முறையாக கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளை சர். வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) அவர்கள், ஏசியாட்டிக் சொசைட்டி (Asiatic Society) என்ற அமைப்பின் மூலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தாவில் தொடங்கினார்.

தென்னிந்திய கல்வெட்டியல் என்னும் முறைப்படியான பணிகளை கர்னல் கோன் மென்கின்சி (Colonel Colin Meckenzie) (1754-1821) தொடங்கினார். அவர் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனியில் ராணுவ வீரராகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் ஆன இவர் தொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறை  மீதான அவரது ஆர்வத்தினால், அவருடைய பணிக்காலத்தில் உள்ளூர் உதவியாளர்களைக் கொண்டு சுமார் 8,000 கல்வெட்டுகளை சேகரித்து அச்செடுத்தார். அவர் சேகரித்த 8,000 கல்வெட்டுகளில் 1,300 கல்வெட்டுகள்  தமிழ் கல்வெட்டுகளாகும். அது மட்டுமல்லாமல் அவரே அதிகாரப்பூர்வமான முதல் தென்னிந்திய புவி வரைபடத்தை உருவாக்கினார்.

James Burgers என்னும் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் 1872ஆம் ஆண்டில் Indian Antiquary என்னும் ஆய்விதழைத் தொடங்கினார். இதன் காரணமாக நாட்டிலுள்ள பல்வேறு கல்வெட்டுகள் மொழிபெயர்க்கப்பட்டு பல வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்களால்  உறுதிப் படுத்தப்பட்டு இந்த ஆய்விதழில் (India Antiquary) வெளியிடப்பட்டன.

முறையாக அவற்றைத் தொகுத்து இந்திய தொல்லியல் வெளியீடுகளான “Epigraphia Indica & South Indian Inscriptions ”   ஆகியவற்றை வெளியிட்டார். அவர் கல்வெட்டியலாளராக பணியாற்றியபோது அசோகரின் கல்வெட்டுகளை முதன்முறையாக  படித்து, பொருள் தந்து (Decipher) சாதனை புரிந்தார்.

ஆர்தர் கோக் பர்னல் (Arthur Coke Burnell) ஒரு சிறந்த ஆய்வாளர். அவர், “Elements of South India Paleography”   என்னும் கையேட்டை 1874ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுவே தென்னிந்திய கல்வெட்டியல் ஆய்வின் முதல் வெளியிடாக அமைந்தது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தென்னிந்திய கல்வெட்டியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. மிக அதிகமான கல்வெட்டுகள் தென்னிந்தியாவில் கண்டறியப்பட்டதால், துல்லியமான பகுதி வாரியான கல்வெட்டுகள் குறித்த வெளியிடுகள் வெளிவரத் தொடங்கின. எடுத்துக்காட்டாக பெஞ்சமின் லூவிஸ் ரைஸ் (Benjamine Lewis Rice)  (1837_1927) அவர்கள் மைசூர் மாநில தொல்லியல் துறையின் முதல் இயக்குநராக பணியாற்றியபோது மைசூரைச் சுற்றியுள்ள 9000 கல்வெட்டுகளை மொழிபெயர்த்துத் தொகுப்பாக வெளியிட்டார். 1887_1921ஆம் ஆண்டுவரை Madras Epigraphical Report தொடர்ச்சியாக வந்தது. இது புது கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டது.

1945ஆம் ஆண்டு “Annual Report on Indian Epigraphy” என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தென்னிந்தியக் கல்வெட்டியலை அரசுத் துறைகளும், பல்கலைக்கழகங்களும் முறைப்படியாக செயல்படுத்தத் தொடங்கின. 1961ஆம் ஆண்டு தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை சென்னையில் தொடங்கப்பட்டது. இத்துறையில் குறுகிய மற்றும் நீண்ட கால கல்வெட்டியல் சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பல கல்வெட்டியல் ஆய்வாளர்களை உருவாக்குவதையும், கல்வெட்டியலின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டு பணியாற்றியது.

மேலும், இத்துறை 6000ற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை சேரித்து, ஆவணப்படுத்தி யுள்ளது. பல தற்கால கண்டுபிடிப்புகளையும், தொல்லியல் செய்திகளையும் வெளிக் கொண்டுவரும் வகையில் கல்வெட்டு என்னும் இதழை வெளியிட்டு வருகிறது.

1990ஆம் ஆண்டு (Archaeological Society of Tamil Nadu) என்னும் அமைப்பு ஆவணம் என்னும் பெயரில் ஆராய்ச்சி கட்டுரைத் தொகுப்புகளை மிகச் சிறப்பாக தற்போதும் வெளியிட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழகம் 1960ஆம் ஆண்டு தொல்லியல் படிப்பிற்கான தனித் துறையை மாணவர்களுக்காக உருவாக்கியது. அதன் பயனாக பல முக்கிய கல்வெட்டுகளை மாணவர்களைக் கொண்டு ஆவணப்படுத்தியது.

அடுத்த முக்கிய கல்வெட்டியல் துறை தஞ்சை தமிழ் பல்கலைக்கழத்தில் 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் சிறப்பு அம்சமாக கல்வெட்டியல் ஆராய்ச்சிப் பிரிவு அமைக்கப்பட்டது. கடந்த 20_30 ஆண்டுகளாக கல்வெட்டியல் படிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போதைய கல்வெட்டு கண்டுபிடிப்பாளர்களில் பலர் வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமே! அவர்கள் கல்வெட்டியலின் அடிப்படை முறைகளை அறியாதவர்களே ஆவர். இத்தகைய கண்டுபிடிப்புகள் முறையாக ஆவணப் படுத்தப்படாமல் தற்காலிகமாக சமூக வலைதளங்களில் வௌயிடப்பட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் வண்ணம், சுண்ணாம்பு, பளபளப்பான ஓடுகள் (Tiles) மூலம் அழிக்கப்படுகின்றன. இவை முறைப்படுத்தப்பட வேண்டும். தென்னிந்திய கல்வெட்டுகளை ஆவணப்படுத்த பல நூற்றாண்டுகளாக பல அறிஞர்கள் தங்களின் வாழ்க்கையை கல்வெட்டுகளுக்காக அர்ப்பணித்துள்ளனர். எந்தக் கருவிகளும் இல்லாமல், அவற்றை சேகரித்து, மொழிப் பெயர்த்து ஆராய்ந்து, தொகுத்து இன்றைக்கு தென்னிந்திய வரலாறு கோர்வையுடன் உண்மை நிகழ்வுகளுடன் நமக்கு கிடைத்தமைக்கு அவர்களின் கல்வெட்டுகளின் மீது இருந்த ஆர்வமும், உழைப்புமே காரணங்களாகும்.

தென்னிந்திய கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை அறிவது,  கல்வெட்டியலின் முக்கியத்துவத்தை அறிவதற்கான முதல் படி ஆகும். இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அறிஞர்களைத் தவிர கல்வெட்டு ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் உள்ளிட்ட இன்னும் பல அறிஞர்களும் அவர்களுடைய எண்ணற்ற பணிகளால் தென்னிந்திய கல்வெட்டுகளின் பெருமைகளை உலகம் போற்றும் வண்ணம் எடுத்துரைத்து தங்களுடைய பங்களிப்புகளை கல்வெட்டியலுக்குக் கொடுத்துள்ளனர். வரலாற்றை வரையறுக்க நமக்குக் கிடைத்துள்ள சில முக்கியமான கல்வெட்டு ஆவணங்கள் குறித்து அடுத்தடுத்து காண்போம்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *