வரலாற்றுச் சுவடுகள்

ஜனவரி 16-31 2019

காந்தியார் படுகொலை நாள் : ஜனவரி 30

காந்தியார் படுகொலையும் பெரியாரின் எதிர்வினையும்

வழக்குரைஞர் சு.குமாரதேவன்

இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியார் வி.டி.சாவர்க்கரால் மூளைச் சலவை செய்யப்பட்டு நாதுராம் வினாயக் கோட்சேவால் கொல்லப்பட்டார். அரசியலில் மதத்தைக் கலப்பது என்பது வாயகன்ற அகலப் பாத்திரத்தில் நிரப்பப்பட்டுள்ள பாலில் ஒரு சில துளிகள் விஷம் கலந்தால் மொத்த பாலும் விஷமாகி யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பதை உலக மக்கள் குறிப்பாக இந்திய மக்கள் அறிந்துகொண்ட நாள் ஜனவரி 30.

காந்தியார் கொலையில் பங்கு பெற்றவர்கள்

பெரும்பான்மையினரான இந்துக்கள் சிறுபான்மையினரான மற்ற மத மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதும் காந்தியாரின் இறுதிக் கால நோக்கமாக இருந்தது.     

ஆனால் காந்தியாரின் எண்ணத்திற்கு மாறாக இந்து மத வெறியர்கள் எங்கே காந்தியாரின் சொற்கள் மக்களை சென்றடைந்து ஒரு மத நல்லிணக்கம் உருவாகிவிடுமோ என்பதற்க்காகவும் அப்படி மத நல்லிணக்கம் உருவாகும் பட்சத்தில் தங்களின் சித்தாந்தமும் நோக்கமும் மக்களால் புறக்கணிக்கப்படும் என்ற அச்சத்தில் காந்தியைக் கொன்றுவிட முடிவு செய்திருந்தனர். அந்த முடிவுக்கு இந்து மத வெறியர்கள் தேர்ந்தெடுத்த கைகூலிகள்தான் வினாயக் கோட்சே, நாராயணன் ஆப்தே இவர்களை இயக்கும் மூளை வி.டி.சாவர்க்கர். காந்தியார் படுகொலைக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்த நபர்கள் விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, டாக்டர்.பார்சுரே, சங்கர் கிஸ்தையா, திகம்பர் பாட்கே (அப்ரூவர்) கோபால் கோட்சே ஆகியோர். காந்தியாரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி டாக்டர் பார்ச்சுரே வாங்கித் தந்ததாகும். காந்தியார் கொலையில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு திகம்பர் பாட்கேவின் வாக்கு மூலம் பெரிதும் உதவியாக இருந்தது. தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு இந்த வழக்கிற்கு (காந்தியார் கொலை) யார் மூலக்காரணமாக இருந்தார்கள் என்பதை நீதிமன்றத்தில் அஞ்சாமல் எடுத்துரைத்தார்.

பெரியாரின் எதிர்ப்பும் ஆதரவும்

எந்த அளவிற்கு தந்தை பெரியார் காந்தியாரை ஆதரித்தாரோ அதே அளவிற்கு சற்றும் குறையாமல் அவர் கொள்கைகளை விமர்சனம் செய்தார். காங்கிரஸ், ராட்டை, கதர், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் நேர் எதிரான கருத்துக்களை கொண்டிருந்தது மட்டுமில்லாமல் அதை கடுமையாக எதிர்த்தும் பிரச்சாரம் செய்துவந்தார். பூனா ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு டாக்டர். அம்பேத்கருக்கு ஆதரவாக நின்றார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. காந்தியாரின் நிர்மாண திட்டங்கள் குறிப்பாக ராமராஜ்யம், வர்ணாசிரம ஆதரவு நிலை ஆகியவற்றை பக்கம் பக்கமாக பெரியார் விமர்சித்து எழுதி வந்தார். 1942ஆ-ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் காங்கிரஸின் அராஜகப் போக்கையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பிரசாரம் செய்தார். காந்தியாராலும் அவரது கொள்கையாலும் நாடு முன்னேற்றம் அடையாது, அது பல நூற்றாண்டுகள் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் பெரியார் கூறினார். 1927 முதல் 1947 வரை காந்தியாரை விமர்சனம் செய்த தந்தை பெரியார் கோட்சேவால் காந்தியார் கொலை செய்யபட்டவுடன் மிகுந்த துயரம் அடைந்து அதற்காக உளப்பூர்வமாக வருந்தினார்.

தன்னுடைய மனநிலை காந்தியார்கொலை நடந்த போது எவ்வாறு இருந்தது என்பதை  அன்று கீழ்கண்டவாறு தந்தை பெரியார் பதிவு செய்கிறார்.

காந்தியார் மறைவுக்கு நான் துக்கப்பட்டது, பெரும்பாலோருக்கு முதலைக் கண்ணிராகவே தோன்றியது; தோன்றினால் தோன்றட்டும். அவர் மறைவுக்கு இனிப்பு வழங்கிய மாபாதகக் கூட்டத்திற்கு வேண்டுமானால் அவர் செத்ததைப் பற்றிக் கவலை இல்லை; மகிழ்ச்சி கூட அடைந்தது. ஆனால் அவர் துர்மரணமடைந்த சேதியைக் கேட்டதும் எனக்குத் துக்கம் தாங்க முடியவில்லை; தலைவலி வந்துவிட்டது; என்ன செய்கிறேன் என்பதுகூட புரியாமல் நெடுநேரம் 15 சதுரமுள்ள அறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தேன். காரணம் என்னவென்றால் அவரிடம் அந்தரங்கத்தில் எனக்கு இருந்த பற்றுதல், அவர் கொள்கைகளில், உழைப்பில் இருந்த நலன்கள்; அப்படிப்பட்டவருக்கு இதுதானா கூலி என்ற மனவேதனை ஆகியவைகளே. அவருடைய முறையில் வேண்டுமானால் அபிப்பிராய பேதம் பலமாக இருந்தது உண்டு. ஆனால், அவருடைய முக்கியக் கொள்கையில் அதாவது சத்தியம், அஹிம்சை, அன்பு ஆகியவைகளில் அபிப்பிராய பேதம் இல்லையே! அதற்காக மனம் பதறிவிட்டது. இப்போது இங்குள்ள நமது மந்திரிகளிடத்தும் கூடத்தான், எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்பட்டிருக்கிறது; இவர்கள் மீது ரொம்பவும் கோபம் கூடத்தான்; பணமும் அதிகாரமும்தான் இவர்கள் இலட்சியமாய் இருந்திருக்கிறதே தவிர இன உணர்ச்சி, மான உணர்ச்சி இல்லையே என்று.

– ‘விடுதலை’ – 11.03.1948

 1927- அன்று தான் காந்தியாரை பெங்களூருவில் சந்தித்த போது காந்தியாரை பார்ப்பனர்கள் கொலை செய்து விடுவார்கள், என்று சொன்னது உறுதியாகிவிட்டதே என்று எண்ணி கலக்கமுற்ற பெரியார், காந்தியார் இறந்த போது வன்முறை பரவி விடக் கூடாது என்று மிகுந்த அக்கறை கொண்டார்.

பெரியாரின் கணிப்பு!

1927- அன்று தான் காந்தியாரை பெங்களூருவில் சந்தித்த போது காந்தியாரை பார்ப்பனர்கள் கொலை செய்து விடுவார்கள், என்று சொன்னது உறுதியாகிவிட்டதே என்று எண்ணி கலக்கமுற்ற பெரியார், காந்தியார் இறந்த போது வன்முறை பரவி விடக் கூடாது என்று மிகுந்த அக்கறை கொண்டார். காந்தியாரை கொலை புரிந்த படுபாதக செயல் புரிந்த காவி கட்சியினர் காந்தியாரை ஒரு முஸ்லிம் நபர்தான் கொன்றுவிட்டார் என புரளியை பரவவிட்டனர் மேலும் திருப்பூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பள்ளப்பட்டி மற்றும் வாணியம்பாடி ஆகிய ஊர்களில் இருந்த முஸ்லிம்களின் உடைமைகளை கொள்ளையடித்தும், தீக்கிரையாக்கியும் அக்கிரமம் செய்தார்கள். இந்த வன்முறை தமிழகம் எங்கும் பரவி விட கூடாது என்ற எண்ணம் மனித நேயம் மிக்க தந்தை பெரியாரிடம் இருந்தது. எனவே பெரியார் கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டார்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற சேதி, எனக்குக் கேட்டதும் சிறிது கூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்கு திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்கு ஆகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச்செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலிஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்பட்டும் என்பது ஒரு மாபெரும் பிரச்சனையேயாகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாக நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.

மகாராஷ்டிராவும் தமிழ்நாடும்

காந்தியார் கொன்றது ஒரு சித்பவன் பார்ப்பனர் என்று தெரிந்தவுடன் மகராஷ்ராவில் பல பார்ப்பனர் குடியிருப்புகள் தாக்கப்பட்டன. பார்ப்பனர்களை காங்கிரஸில் சேர்க்கக்கூடாது என தீர்மானம் போட்டார்கள் ஆனால் பார்ப்பனர் எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்ற தமிழ் நாட்டில், தந்தை பெரியார் இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அப்படி எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது இல்லை. இது ஒன்றே தந்தை பெரியார் தனது இயக்கத்தை எவ்வாறு அறிவு இயக்கமாக மாற்றியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழ் நாட்டில் வன்முறை பரவக் கூடாது என்று நினைத்த தந்தை பெரியாரை கண்டுகொள்ளாமல் இருந்த வானொலி நிலையத்தார் தந்தை பெரியார் தங்கியிருந்த திருச்சிக்கே சென்று அவரது இரங்கல் உரையினை பதிவு செய்து 04.02.1948 அன்று ஒலிபரப்பினார்கள். இதன் மூலம் சமூகப் பதற்றம் தணிந்து தமிழ் நாட்டில் அமைதி நிலவியது காவி கூட்டத்தினரின் கலவரத் திட்டம் பெரியாரின் ஒரு பேச்சால் தவிடு பொடியானது. தந்தை பெரியார் தன்னுடைய அறிக்கையில் காந்தியார் படுகொலையினை கடுமையாகக் கண்டித்து இந்த நாட்டிற்கு ‘காந்திதேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என பெயர் வைக்க வேண்டும் என கூறினார். கீழ்க்கண்டவாறு அவரது கருத்து அமைந்தது.

காந்தியாருக்கு ஞாபகச்சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது நிரந்தரமானதாகவும், அதிசயமான பயனுள்ளதாவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை.

1. இந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக ‘காந்தி தேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்ற பெயரிடலாம்.

2. இந்து மதம் என்பதற்குப் பதிலாக காந்தி மதம் அல்லது காந்தினிசம் என்பதாக மாற்றப்படலாம்.

3. இந்துக்கள் என்பதற்குப் பதிலாக மெய்ஞானிகள் அல்லது சத்ஞானஜன் என்று பெயர் மாற்றப்படலாம்.

4. காந்தி மதகக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு. வர்ணாஸ்ரம் தர்மமுறை அநுசரிக்கப்படமாட்டாது ஞானமும் (அறிவும்) பஷமும் என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிருஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக காந்தி ஆண்டு என்று துவக்கலாம்.

காந்தியார் மறைவிற்கு தமிழ் நாடு முழுவதும் 29.02.1948 அன்று அனுதாப கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும், ஆடம்பர மற்றும் அதிக செலவு இல்லாமல், பேச்சாளர்கள் யாரும் பேசாமல், காந்தியார் கொலையை பற்றி மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அனைவரும் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு கலைந்து சென்று விட வேண்டும் என்றும் பெரியார் கேட்டுக்கொண்டார். தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18 வது மாநில மாநாட்டில் பெரியார் பேசும்போது, “இருந்தவர் ஆரிய காந்தி, இறந்தவர் திராவிட காந்தி’’ என்று அவர் பேசிய பேச்சு 15.05.1948 மற்றும் 25.05.1948 அன்று வெளியான ‘குடிஅரசு’ இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்த காந்தியார் நம் காந்தியார் ஆரியம் அழிந்து விடுமே என்று பயந்து ஆரியரால் கொல்லபட்டு கொலையுண்ட காந்தியார். அதனால்தான் மற்றவர்களை விட நமக்குத்தான் அவர் மறைவுக்காகத் துக்கப்படவும் உரிமையுண்டு என்றும் கூறிக்கொள்கிறோம். காந்தியார் மேலும் அவர் கொள்கைகள் மேலும் கடும் விமர்சனத்தை வைத்திருந்த தந்தை பெரியார் அவற்றை விமர்சனமாக மட்டுமே பார்த்தாரே தவிர தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு எதிரான ஒரு வெறுப்பாக அவர் பார்க்கவில்லை இதுதான் தந்தை பெரியார் கொண்டிருந்த மனிதநேயம் ஆகும். சக மனிதனை, மதவெறி எப்பேற்பட்ட மனிதராக இருந்தாலும் கொன்றுவிடும் என்பதற்கு காந்தியார் ஒரு உதாரணம் என்றால் அப்படிபட்ட மதவெறியினை ஒழித்து நல்லிணக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவது பெரியார் எனும் பெருநெறி என்று தாராளமாக நாம் சொல்லலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *