புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
[1 ]அன்புடை அழகர்க்கு வரையும் அஞ்சல்;
நீர்ஒரு சாதி! நான் ஒரு சாதி!
ஆயினும் அன்பால் இருவரும் ஒருவர்,
நம்மைப் பெற்றவர் நச்சுச் சாதியாம்
பாழுங் கிணற்றில் வீழ்ந்திருப்பவர்,
அம் மணல் தவளைகள் நம்மணம் ஒப்பார்!
என்னைப்பிரிந் திருப் துமெக்கெப் படியோ,
உமைப்பிரிந் திருப்பதென் உயிர்பிரிந் திருப்பதே.
இன்றே இருவரும் எங்கேனும் ஓடலாம்
ஒன்றாய் — உயிரும் உடலுமாய் வாழலாம்.
எழுதுக உடன்பதில்! இங்ஙனம் “அன்றில்.”
[ 2 ] இனிய காதல் அஞ்சலை எழுதினாள்
எழுதிய அதனை எவர்கொண்டு போவார்?
என்று நன்று கருதியிருந்தாள்.
[ 3 ] அழகன் அழகுடல் அங்குவைத் தழகனின்
அன்பு நெஞ்சை அன்றில்பால் வைத்தான்
அவளுடல் தழுவி இவண்வரும் தென்றலைத்
தழுவலால் சாகா திருந்தேன் ஆயினும்
நாணிக் குனிந்தொரு நாள் அவள் சிரித்த
மாணிக்கச் சிரிப்புத் தென்றலில் வருமா?
ஐயோ என்றே அலறினான் அழகன்!
சாதி முடிச்சு மாறித் தனத்தை
நம்புவார் பிடிக்குத் தப்பிநான் அவளோடு
கம்பி நீட்டினால் கனிகசந்திடுமோ!
என்றே அழகன் எதிர்நோக் குகையில்
இந்தா அஞ்சல் என்றொரு கிழவர்
தந்தார்! அழகன் சடுதியிற் படித்தான்
அவன் எழுதிய பதில் :-
அன்புடை அன்றிலே!
இன்றே இரவே இரண்டு மணிக்கே
இரண்டு பேரும் பரங்கிப் பேட்டைக்
கோடி விடலாம்! உறங்கிவிடாதே!
மெலுக்காய் எழுந்து வளையலைக் குலுக்காது
நடந்துதாழ் திறந்து குறட்டை நண்ணுக,
வாழைக் குலையை வேழம் தூக்கல்போல்
எடுத்துச் செல்வேன். இங்ஙனம் “அழகன்”
[ 4 ] எழுதி முடித்த இந்த அஞ்சலைக்
கிழவ ரிடத்தில் அழகன் கொடுக்க
அஞ்சினான்! அவன்பா டையப்பா டானதே!
தவறா தவளிடம் தருதல் வேண்டுமே
என்றான் அழகன். இணங்கினார் கிழவர்.
எவரும் அறியா திருக்க வேண்டுமே
என்றான் அழகன் எவரும் அறியார்
என்றார் கிழவர். என்னஇது என்று
பிடுங்கினால் பெருங்கே டன்றே என்றான்.
நெடுமூச் செறிந்து கிழவர் “நீர் இவ்வாறு
ஐயப் படுதல் அடுக்குமோ’’ என்றார்.
இவ்வாறு இருவர் பேச்சும் நீண்டது.
[ 5 ] அழகன் தந்தை அறையின் சன்னலின்
வழியாய் இந்த வழக்கறிந்தவனாய்க்
கொல்லையால் குடுகுடு வென்றே ஓடி
அன்றிலின் தந்தையை அழைத்து வந்தான்,
பதுங்கி இருந்து பார்த்திருந் தார்கள்.
[ 6 ] கெட்டவர் அஞ்சலைக் கேட்கவும் கூடுமே
என்றான் அழகன். இரார்என் றார்அவர்.
உம்மை நம்ப ஒண்ணுமோ என்றான்
என்னை நம்புக என்றார் கிழவர்
இதற்குமுன் உம்மை யானறி யேனே
என்றான் அழகன்
எதிரில் கிழவன்
அன்றிலாய் நின்றே “யான் தான் அத்தான்
அன்றில்” நாழிகை ஆயிற் றென்றாள்
ஒருவெண் பொற்காசுக் கிரண்டுபடி அரிசி
கண்டநல்லாட்சி கண்டான் போல
மகிழ்ச்சி மனத்திற் தாண்டவ மாடக்
கொடிய சாதிநாய் குலைக்கு முன்னே
நடந்துவா அன்னமே விரைந்துவா மானே
தொத்தடி கிளியே தோளில்! என்றான்.
[ 7 ] அழகனும் அன்றிலும் வியக்கும் வண்ணம்
இருவரின் தந்தைமார் எதிரில் வந்தனர்.
இருவரும் திருமண மக்கள் என்றனர்
சாதி புதைந்த மேட்டில்
மாது புதைந்தாள் அழகன் மார்பிலே!
– ‘குயில்’ – 2.3.1958