சிறப்புக் கட்டுரை

ஜனவரி 16-31 2019

தமிழரின் தனிச் சிறப்புகள்!

புதுக்கோட்டை மு.அறிவொளி

இவ்வுலகின் முதல் மாந்தன் தமிழன், முதல் மொழி தமிழ்மொழி, தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம். பரவி வாழ்ந்த இடம் இமயம் முதல் குமரியும் இன்னும் பல நாடுகளிலும் எனலாம்; இவ்வரலாற்று உண்மையைத் தமிழிலக்கியம், இலக்கணம், தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.                                                                                       

அப்படிப்பட்ட தமிழரின் வாழ்வியல் முறைகளை சங்ககால இலக்கியங்கள் வாயிலாக அறிய முடியும். சங்க கால நூல்கள் அகம் புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன; அகத்திணை புறத்திணை என ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர்தான் அகம் புறம் என்பதைச் செழுமைப்படுத்தி அறம் பொருள் இன்பம் எண்ணும் முப்பால் ஆக வரையறை செய்தார். அறத்தின் வழி நின்று பொருளை ஈட்டி இன்பம் துய்ப்பதுதான் இல்லறம் _ நல்லறம் என்றார். தமிழர்களுக்கு வீடுபேறு நம்பிக்கையில்லை.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவ தெவன்  –  குறள் 46

எனவே தான் திருக்குறள் தமிழரின் வாழ்வியல் கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது. திருக்குறள் தமிழ்மறையாகத் திகழ்ந்தாலும் மாந்த இனத்தின் வாழ்வியல் நூலாக, காலம், இடம், மொழி கடந்து உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது.

 ஜாதியற்ற தமிழர் வாழ்வில் ஆரியர் வருகைக்குப் பிறகான அடிப்படையில் ஜாதிப்பாகுபாடுகள் தோன்றலாயின. தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வள்ளுவர்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்  – குறள் 972

என்று ஜாதி மறுப்புக்குக் குரல் கொடுத்தார்.

நிலப்பாகுபாடும் தொழில்முறையும்:

தமிழர்கள் முதற்பொருளாக நிலத்தையும் பொழுதையும் பகுத்தனர். நிலத்தை அய்வகையாகவும் பொழுதை பெரும்பொழுது சிறுபொழுது எனவும் வகைப்படுத்தினர். அதற்கேற்ற வாழ்வியல் முறைகளையும் பின்பற்றினர். நிலமும் பொழுதும் முழுமுதற் பொருள் _ தொல்.

குறிஞ்சி _ மலையும் மலை சார்ந்த இடமும், தொழில்: வேட்டையாடுதல்.

முல்லை _ காடும் காடு சார்ந்த இடமும், தொழில்: ஆடுமாடு மேய்த்தல்.

மருதம் _ வயலும் வயல் சார்ந்த இடமும், தொழில்: பயிர்த்தொழில், வேளாண்மை செய்தல்.

நெய்தல் _ கடலும் கடல் சார்ந்த இடமும், தொழில்: மீன் பிடித்தல், வலை உலர்த்தல்.

பாலை _ மணலும் மணல் சார்ந்த இடமும், தொழில்: வழிப்பறி செய்தல்.

பாலைக்கென்று தனிநிலம் இல்லையென்றாலும் குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் இவ்வாறு நிலம் சார்ந்த தொழில் முறைதான் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்தது.   ஜாதியற்ற தமிழர் வாழ்வில் ஆரியர் வருகைக்குப் பிறகான அடிப்படையில் ஜாதிப்பாகுபாடுகள் தோன்றலாயின. தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வள்ளுவர்,

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”  _ குறள் 972

என்று ஜாதி மறுப்புக்குக் குரல் கொடுத்தார். தமிழரின் தமிழ் மறையே வாழ்வியல் நெறியாகும்.

தமிழர்களின் இயற்கை வழிபாடு:

தமிழர்கள் இயற்கை வழிபாட்டு மரபினர். தொல்காப்பியத்தில் தெய்வம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழரின் வாழ்வியலில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன சிறப்பானவை. கருப்பொருளில், தொல்காப்பியர்,

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை

செய்தி யாழின்  பகுதியோடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப

எனக் குறிப்பிடுவர். தெய்வம் கருப்பொருளில் தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர முதற்பொருளில் அன்று.

மகளிர் நிலை:

இயற்கையின் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகுதியான வேறுபாடுகள் இல்லை. அறிவு, அழகு, அன்பு, உணர்வு ஆகியன இருபாலர்க்கும் உரியன. தாய்மைப்பேறில் மட்டுமே ஆண்களின் உடலமைப்பிலிருந்து மகளிர் வேறுபடுகின்றனர். சங்க காலத்தில் அன்பு வாழ்க்கையே இல்லற வாழ்க்கையின் பண்பாக இருந்தது. ஆடவரும்  மகளிரும் கருத்து ஒருமித்துக் காதல் வாழ்க்கை வாழ்ந்தனர்; இல்லறத்தில் மகளிர் முதலிடம் பெற்று அன்பின் தலையூற்றாகத் திகழ்ந்தனர். எனவேதான் சங்க இலக்கியத்தில் மகளிர் இல்லாள், மனையாள், மனைக்கு விளக்கம் என்றெல்லாம் பெருமைப்படுத்தப்பட்டனர்.

காதல்மனம்:

இயற்கையின் கொடை காதல். உலகில் எல்லா உயிர்கட்கும் பொது. இக்காதல் களவு என்றும், கற்பு என்றும் சுட்டப்படுகிறது. காதல் உயிர்ப்புடையது என்பதை,

காதல் என்பது உயிர் இயற்கை – அது

கட்டில் அகப்படும் தன்மையதோ?                      

எனப் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் குறிப்பிடுவார்.

சங்க இலக்கியத்தில் காதல் மனத்தை.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே

எனும் செம்புலப்பெயனீரார் பாடல் வழி அறிய முடிகிறது.

தமிழர் நாகரிகம்:

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1861ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்டது. 1926இல் சிந்து மாநிலத் தொல்லியல் ஆய்வில் அரப்பா நாகரிகம் என்னும் சிந்து நாகரிகம் கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் 1944இல் அரிக்கமேடு தொல்லாய்வும், 1980இல் காவிரிப்பூம்பட்டினம் தொல்லாய்வும், 1876, 1903, 1905ஆம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூர் தொல்லாய்வும் தமிழர் நாகரிகம் மிகத் தொன்மையானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் மதுரை, பூம்புகார், உறையூர், வஞ்சி போன்ற மூவேந்தர்களின்  தலைநகரங்கள் குறித்த ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. 2013_2014ஆம் ஆண்டுகள் தொடங்கப்பட்ட தொல்லாய்வில் கி.மு.200 என்பது நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 102 குழிகள் தோண்டி ஆய்வு நடத்தப்பட்டது கீழடியில்தான். இதன்மூலம் 5800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

சங்ககாலத் தமிழர்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர்; நகர்ப்புற நாகரிகமே இல்லை என்று கூறுவது தவறு என்பதை கீழடி அகழ்வாய்வில் கிடைத்த வரலாற்றுத் தடங்கள் நிறுவியுள்ளன.       கீழடியில் உள்ள 110 ஏக்கர் பரப்பளவில் 2 ஏக்கர்தான்  தோண்டப்பட்டுள்ளது. 15 விழுக்காடு பரப்பளவாவது தோண்டினால் மட்டுமே தேவையான தரவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இங்கு கிடைக்கப் பெற்ற அரிய வகைக்கல், மணி, முத்து, செம்பு, தங்க அணிகலன்கள், வளையல்கள், வணிக முத்திரைகள், தமிழ் பிராமி எழுத்துகள், சங்க காலப் பெயர்களான சேத்தன், கோதை, மீன் சின்னம் போன்றவை தமிழர் வாழ்வியல் முறைகளின் அடையாளங்கள்.

தமிழர் திருநாள் :

தமிழர் தம் வாழ்வியல் வரலாற்றில் பொங்கல் விழாவின் சிறப்பு. தன்னிகரற்றது. தமிழரின் முதன்மைத் தொழிலான வேளாண்மைக்குப் பயன்படுபவற்றிற்கு நன்றிகூறும் விழா. அவ்வகையில் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளுக்கு நான்கு நாள்கள் நன்றி கூறும் விழாக்கள் நடைபெறுகின்றன. காணும்பொங்கல் எனப் பன்முக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கதிரவன் தென்திசையிலிருந்து வடதிசைக்கு செல்லும் நாளான சுறவம்(தை) கதிரவன் பொங்கல் விழாவாகும், தமிழாண்டின் தொடக்கமாகவும் இருப்பதால் தமிழ்ப் புத்தாண்டு விழாவாகவும் திகழ்கிறது. வாழ்நாள் முழுவதும் உற்ற தோழனாக உழைத்த கால்நடைச் செல்வங்களான ஆடு, மாடுகட்கு நன்றி செய்யும் விழாவே இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல். தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் மூன்றாம் நாள் விழாவே கன்னிப் பொங்கல், மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு விழா போன்றவையாகும். சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புற நானூற்றில் பொங்கல் விழா :

தமிழ் இலக்கணத்திலோ, இலக்கியங்களிலோ கல்வெட்டுக்களிலோ வெளிப்படையாகக் காணப் பெறவில்லை; ஆயினும் இலைமறை காயாகப் புறநானூற்றுப்பாடல் ஒன்று பொங்கல் நன்னாளை நினைவு கூரத்தக்க குறிப்புகள் காணப்படுகின்றன.                                சேரவேந்தர்தம் படைத்தலைவனாக விளங்கிய பிட்டங்கொத்தன் என்னும் குறுநில மன்னனின் ஆட்சிக்குட்பட்டது குதிரைமலை. அப்பிட்டங்கொத்தனைப் பாராட்டி கருவூர்க் கதப்பிள்ளை பாடிய அருவி ஆர்க்கும் என்னும் புறநானூற்றுப் பாடலில், மலைவாணர்கள் ஆண்டின் முதன்முதலில் விளைந்த தினையை அறுவடை செய்துவந்து, புத்தரிசி கொண்டும், ஆடுவின் புதிய பால், சந்தன விறகு கொண்டு வந்து சமைத்த புத்துணவை மணங்கமழ் முற்றத்தே அகன்ற வாழையிலைகளில் படைத்து பலரும் கூடியுண்டனர். இந்த நிகழ்ச்சி அற்றைப் பொங்கல் விழாவை நினைவு கூரத்தக்கது. இதோ அப்பாடல்

”அருவி ஆர்க்குங் ….

செழுங்கோள் வாழை அகலிவுலப் பகுக்கும்” (புறம் _168)

பண்டைய மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்த  நன்னாள் என்பது பொங்கல் விழா பற்றியதாகும்.

1937_இல் திருச்சியில் அனைத்துத் தமிழர் மாநாடு பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் சான்றோர் பலர் பங்கு பெற்ற அந்த மாநாட்டில் தந்தை பெரியார் பொங்கல் சமயச்சார்பற்ற முதன்மையான பொன்னான விழா நாள், ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். அன்றுமுதல் பொங்கல் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தீர்மானத்தை முன் மொழிந்தவர் மதுரை தமிழ்வேள், வழிமொழிந்தவர் திரு.வி.க. அவர்கள். பெரியார் பொங்கல் வாழ்த்தாக தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டுத் தமிழர்க்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப்பண்பு பெற்று மானமுள்ள மக்களாக வாழவேண்டும் என்பதான வாழ்த்துகள்தான் என்று கூறுகின்றார். (திராவிட நாடு_14.01.1949).

புரட்சிப்பாவலர் பாரதிதாசன் அவர்கள்,

”பத்தன்று நூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு தைத்திங்கள் புதுமை நன்னாள”

எனத் தைத் திங்கள்தான் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டினை சிறப்பிக்கின்றார். இன்று உலகம் முழுவதும் வாழ் தமிழர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அனைவரும் கொண்டாடுவோம்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *