மூன்றாவது அணி கூடாது!
கே: வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையைக்கூட செலுத்தமுடியாத ஏழைகளிடம் வசூல் செய்த அபராதத் தொகை 10,391 கோடியாமே. இதுபற்றி தங்களின் கருத்து?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு இதுவே நல்ல சாட்சியமாகும். வசதி படைத்தவர்களிடம் வாங்கி வசதியற்றவர்களிடம் கொடுப்பதே சரியானது. இங்கே எல்லாம் தலைகீழாக உள்ளது!
கே: மதச்சார்பற்ற நம் நாட்டில் மதத்தின் பேரால் அரசுத் துறைகளில் விடுமுறை விடப்படுவதை நீதிமன்றங்கள் மூலமாக தடுத்திட இயலுமா?
– இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43
ப: இதுபோன்றவைகளைச் சரிசெய்ய நீதிமன்றப் படையெடுப்புப் பயன்படாது. காரணம், வெளிப்படை. மக்கள் மன்றத்தின் மூலம் கடும் எதிர்ப்பு _ போராட்டம் பயன்படும்; இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒன்று 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை _ எம்.ஜி.ஆர்.அரசில். (1978_79)இல்.
கே: அனுமன் கடவுள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், இல்லை முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், இல்லை இல்லை ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், இல்லவே இல்லை சமணத் துறவி என்றும் பா.ஜ.க.வினர் கருத்தை தெரிவித்து வருகின்றனரே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
ப: மகா மகா வெட்கக்கேடு. இதுவென்ன மிக மிக முக்கிய சர்வதேசப் பிரச்சினையா? ஆகாயத்தில் கட்டிய கோட்டைக்கு எத்தனை வாசல்கள் என்று சண்டையிடுவதற்கு ஒப்பாகும்.
கே: ‘மகளிர் மதில்’ போராட்டத்தில் 50 இலட்சம் பெண்கள் _ 620 கி.மீ தூரம் திரளும் வல்லமையிருந்தும் மதவெறிக் கூட்டம் எதிர்த்து தடுப்பது எப்படி?
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப: மதவெறி _ பா.ஜ.க. பண விளையாட்டு. சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியல்.
கே: இந்தியா முழுதும் பி.ஜே.பி கூட்டணி சிதறும் (உத்தரப்பிரதேசம், பீகார் உட்பட) சாதகமான நிலையில் எதிர் தரப்பு மேலும் வலுப்படுவதற்கு வழி என்ன?
– க.காளிதாஸ், காஞ்சி
ப: பொது எதிரி பா.ஜ.க._ ஆர்.எஸ்.எஸ் என்ற மற்ற மாநிலக் கட்சிகள் மூன்றாவது அணி சேர்க்காமல் காங்கிரஸ் தலைமையில் ஒரே அணியில் நிற்பதே!
கே: திருவாரூர் தொகுதியில் அவசரமாக இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்ன?
– சி.முருகன், வேலூர்
ப: ஏற்கெனவே எனது அறிக்கை விளக்கிவிட்டதே! எடைத்தேர்தலில் ஒட்டுமொத்த தோல்வியை தாங்க முடியாது அல்லவா?
கே: அண்மையில் தங்களை வெகுவாகப் பாதித்த, மனம் நெகிழ்ந்த சம்பவம் யாது?
-அ.ந. முகமது, காரைக்குடி – 1
ப: பாதித்தது _ பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி விபத்து _ மரணம். மனம் நெகிழ்ந்தது _ திருச்சி கருஞ்சட்டைப் பேரணி _ ஓசூர் மாநாடு.
ஓசூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் எழுச்சியுரையாற்றும் ஆசிரியர் கி.வீரமணி
கே: 2019 குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்வலத்தில் கேரள அரசு சார்பில் “அனைவருக்கும் ஆலயம்’’ என்னும் தலைப்பில் அமைக்கவிருந்த ரதத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்காததைப் பற்றி தங்கள் கருத்து?
– செ.அன்பு, சென்னை-68
ப: மிகவும் சின்னத்தனம். மதச்சார்பற்ற என்ற கோட்பாட்டினையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மிதிக்கும் ஆணவப் போக்கு _ கண்டனத்திற்குரியது.
கே: மண்டல் கமிஷன் அறிக்கை என்பது பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு மட்டுமான அறிக்கையா?
– கிருபாகரராஜ், பம்மல்
ப: அரசியல் சட்டப்படி எஸ்.சி., எஸ்.டி.களுக்கு தனி இடஒதுக்கீடு துவக்கம் முதல் இருக்கிறது. மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பின்பு பிற்படுத்தப்பட்டவருக்கு மத்திய அரசியல் இடஒதுக்கிடு 27 சதவீதம் கொள்கை அளவில். ஆனால், நடைமுறையில் தருவது 11 சதவிகிதமே. மண்டல் கமிஷன் பரிந்துரை 52 விழுக்காடு. உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின்படி 50க்குக் கீழே இருக்க வேண்டும் என்ற ஒரு (தவறான) சிந்தனை நீதிமன்றங்களில் வற்புறுத்தப்பட்டது; அதற்கேற்ப முதன்முதலில் “கணக்குத் திறந்த’’ மண்டல் அறிக்கை தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பாதிக்கப்படாமலிருக்க 15+7.5=23 சதவீதம் போக, 50இல் 23 போக எஞ்சிய 27 பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கி, அவர்களது இடஒதுக்கீட்டிற்குக் கேடின்றி கவலையுடன் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை குறைத்தது மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.