புதுமை நோக்கி நடக்கும் தமிழ்ப் புத்தாண்டாய் மலரட்டும்

ஜனவரி 16-31 2019

முனைவர் வா. நேரு

‘உண்மை’ வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், பொங்கல் நாள் வாழ்த்துகள்.

    கல் தோன்றா, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி, உவகை கொள்கிறோம். தமிழர்கள் நாம் என்பதில் பெருமை கொள்கிறோம். ஆனால், நாம் தமிழர்களாக ஒன்றாகி நிற்கின்றோமா என்றால் இல்லை. ஜாதியால், மதத்தால் பிரிந்து நிற்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் விழாவாக தமிழர் திருநாள் பொங்கல் விழா  இருக்கின்றது. ஒரு காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த தமிழர் திருநாள், திராவிடர் இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பின்பு களை கட்டியது, உணர்வு ஊட்டியது, உவகை காட்டியது. ஜாதி வேண்டாம் என்று சொல்லும் தமிழர்கள், மதம் வேண்டாம் என்று சொல்லும் தமிழர்கள், மனிதம் வேண்டும் என்று சொல்லும் தமிழர்கள் எல்லாம் இணைந்து கொண்டாடும் நாள், தமிழர் பண்பாட்டுத் திருநாளே தமிழர் திருநாள்.

                       தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில் பழைய பெருமைகளை பேசுவது மட்டுமல்ல, இன்று நாட்டில் நடக்கும் நடப்புகளையும் இணைத்துப் பேசுவது பொருத்தமாக இருக்கும்.

பெருமை மிக்க தமிழர்கள் இடையில் பெருமை குன்றியது எதனால்?

“யாயும் ஞாயும் யாராகியரோ;

எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்;

யானும் நீயும் எவ்வழியறிதும்

செம்புலப்பெயனீர் போல

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”

என்று காதலைப் போற்றி வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல், வயது வந்த தன் பெண் தனக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுந்துக் கொண்டாள், மணமுடித்துக் கொண்டாள் என்று கேள்விப்பட்டவுடன், கூலிப்படையை அமைத்து, தன் பிள்ளையைக் கொல்லும் கொடுமையான நிகழ்வுகளும் நிகழும் நாடாக மாறியது எப்படி? ஜாதி என்னும் மெல்லக் கொல்லும் நஞ்சு எந்தக் காலத்தில் தமிழர்களின் வாழ்வியலில் புகுந்தது? இதனைப் புகுத்தியவர்கள் யார்? இதனை மாற்றுவதற்காக பாடுபடும் இயக்கம் எது? பாடுபட்ட தலைவர்கள் யார்? யார்?… இன்றும் பாடுபடும் தலைவர்கள் யார்? யார்? என்னும் தெளிவு நம்மைச்சுற்றி இருப்பவர்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

அய்வகைத் திணைகளாய் நிலம் வகுத்தான், அத்தனைக்கும் பெயர் வைத்தான், அகம், புறம் என வாழ்க்கையைப் பிரித்துவைத்தான்; அதற்கேற்ப சங்க இலக்கியங்கள் படைத்தான்; நமக்கு மகிழ்ச்சிதான், பெருமைதான்! இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழ்ந்தது? தமிழர் வீடுகளில் நம்மை இழிவுபடுத்தும் பெயர்கள் எப்படி சூட்டப்பட்டன? எப்போது அந்நிலை மாற ஆரம்பித்தது? இடைக்காலத்தில் மண்ணாங்கட்டி, கருப்பன், சுப்பன், மாடன் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்த தமிழன் அழகு தமிழில் எப்போது பிள்ளைகளுக்கு பேர் சூட்டினான்? பெற்றோர் இட்ட பெயர்களை மாற்றி  தமிழ்ப் பெயர்களாக திராவிட இயக்கத்தின் உணர்வுத்தூண்டுதலால்தானே வைத்தான்.  ஆனால் தனது பிள்ளைக்கு பெயர் வைக்க தனது எதிரிகளான பார்ப்பன ஜோதிடர்களைத் தேடிப் போகின்றானே இன்றைக்கு, தமிழில் இல்லாத பெயர்கள் தஸ், புஷ் என்று முடியும் வண்ணம் பெயர்களை வைக்கின்றானே, இவன் எந்த மொழியைப் பேசுபவன் என்பதனை பெயர்கள்தானே அடையாளம் காட்டும், தமிழ்ப் பெயர்களைத் தனது பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும் என்னும் மனப்போக்கும் பக்குவமும் எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? ஆண் குழந்தை என்றால் இந்தப் பெயர்கள், பெண் குழந்தைகள் என்றால் இந்தப் பெயர்கள் என்று வடமொழிப் பெயர்களாக ஒரு பத்திரிக்கை பல்லாண்டுகளாக வெளியிட்டு வருகின்றதே? இதனை உணர்ந்து கொள்ளும் தெளிவும், அந்தப் பத்திரிக்கை கொடுக்கும் வடமொழிப் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டக்கூடாது என்னும் உணர்வும் எத்தனை பேருக்கு இருக்கிறது?

சேரன் செங்குட்டுவன் இமயமலையில் கொடியை நாட்டினான் என்று பெருமை பேசுகிறோம்; நாடாண்ட தமிழருக்கு தமிழ்ப் புத்தாண்டு எது? என்னும் தெளிவு எத்தனை பேருக்கு இருக்கிறது?

“நித்திரையில் இருக்கும் தமிழா;

சித்திரை அல்ல உனக்குப் புத்தாண்டு;

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்;

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

என்றார் புரட்சிக்கவிஞர். சில பேர் அறியாமையால் நித்திரையில் இருக்கின்றார்கள், அவர்களுக்கு நாம் புரிய வைக்கலாம். ஆனால் புரிந்துகொண்டு தங்கள் சுய நலத்திற்காக, சுய லாபத்திற்காக சித்திரை ஒன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பார்ப்பனர்களுக்கு பின்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்களே, இதனை மற்றவர்கள் புரிந்துகொள்வது எப்போது? எப்படி அவர்களுக்கு புரியவைப்பது? “தமிழா, இன உணர்வு கொள்’’ என்று தமிழகத்தின் தெருக்களில் எல்லாம் எழுதிய இயக்கம் திராவிட இயக்கம். “தமிழா இன உணர்வு கொள்’’ என்றாலே உனக்கு எதிராக ஓர் இனம் இருக்கிறது, ஆரிய இனம் இருக்கிறது, அதனை அடையாளம் கண்டு கொள் என்பதுதானே பொருள். திராவிடர்களாகிய தமிழர்களை வஞ்சிக்கும் ஆரிய இன உணர்வு என்பது அவாளுக்கு இயல்பாகவே இருக்கிறது. அது பல இடங்களில் கோலாச்சுகிறது, தமிழர்களுக்கு எதிராக கும்மியடிக்கிறது. இன உணர்வு என்றால் என்ன, அது நம்மில் எத்தனை பேருக்கு புரிந்திருக்கிறது என்பது மிகப்பெரிய வினாவாகத்தான் இன்றைக்கும் நிற்கிறது. பார்ப்பன நண்பர் ஒருவர் இன்றைக்கு தனது இல்லத் திருமண பத்திரிக்கையை தந்துவிட்டுப் போனார். பௌத்திரி, தௌஹித்திரி, ஜேஷ்ட குமாரத்தி, பௌத்திரன், தௌஹித்திரன், ஸாலங்க்ருத கன்னிகாதானம், இஷ்ட மித்ர பந்துக்களுடன், வாசக தோஷ :கூஷ்ந்தவ்ய” ….பல வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்பது நமக்குப் புரியவில்லை. இது 2019-இல்! 1919இ-ல் எப்படி நமது வீட்டு திருமணப் பத்திரிக்கைகள் இருந்தன. அவை, எப்படிப்பட்ட இன உணர்வால் மாறியது? அறிந்தார்களா-நம்மைச்சுற்றி உள்ள தமிழர்கள்… இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன நமது நெஞ்சங்களில் கேட்பதற்கு!

ஜாதியால், மதத்தால் பிரிந்து நிற்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் விழாவாக தமிழர் திருநாள் பொங்கல் விழா  இருக்கின்றது. ஒரு காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த தமிழர் திருநாள், திராவிடர் இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பின்பு களை கட்டியது, உணர்வு ஊட்டியது, உவகை காட்டியது.

அறிவியல் வளர்ந்துகொண்டே வருகின்றது. உலகில் அவிழ்க்க முடியாமல் இருந்த பல முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. ஒரு காலத்தில் மனம் என்று நெஞ்சைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இன்று மனம் என்று ஒன்று இல்லை, எல்லாமே மனித மூளையின் செயல்பாடுகள் என்று  அறிவியலால் தெரிய வந்திருக்கின்றது. இதய நோய் வந்தால், மனிதர்கள் பிழைக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட காலத்திற்குப் பதிலாக இன்றைக்கு இதய நோய்கள் சரி செய்யப்படுவது மட்டுமல்ல, பழுதான இதயத்திற்குப் பதிலாக மாற்று இதயம் பொருத்தப்படுகிறது. இறந்து போன மனிதர்களின் இதயத்தை, நுரையீரலை அணிந்துகொண்டு மனிதர்கள் வாழுகின்றார்கள். கண்டுபிடிக்கப்படாமல் இருந்த உலகின் பல பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் சாதனங்கள் வளர்ந்திருக்கின்றன. மருத்துவம் வளர்ந்திருக்கிறது, பொறியியல் வளர்ந்திருக்கிறது, எல்லாம் வளர்ந்திருக்கிறது. ஆனால் மனிதர்களின் கவலை குறைந்திருக்கிறதா? குறையவில்லையே, என்ன காரணம்? “வாழ்க்கையில் உள்ள பேத நிலையே மனிதன் கவலைக்கு மூலகாரணம். பேத நிலையை அகற்றி ஒப்புரவு நிலையை ஆக்குதலே மனிதாபிமானம் உடையவர் கடன்” என்றார் தந்தை பெரியார். தமிழனின் சமூக பேத நிலைக்கு காரணம் சாதியே, அதனை உருவாக்கிய ஆரியமே. ‘இரட்டை நாக்குடைய’ ஆரியத்தின் சூழ்ச்சி என்பது பல நூற்றாண்டுகளாய் தொடரும் கதை. நம்மைப்  பேதப்படுத்திய, இன்றைக்கும் பேதப்படுத்தும் ஆரியத்தின் சூழ்ச்சிகளே இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, பெண் அடிமைக் கருத்து, பார்ப்பனியச் சடங்குகள் திணிப்பு, நீட் நுழைவுத் தேர்வு திணிப்பு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் பறிப்பு என பல  கொடுமைகள் இன்றைக்கும் நம்மைப் பாழ்படுத்திக் கொண்டுள்ளன. இவற்றை புரிந்து கொள்வதற்கும் அதற்கு எதிராகப் போராடுவதற்கும்  ஈரோட்டு கண்ணாடி தேவை.

கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வைத்தார் டாக்டர் கலைஞர். வள்ளுவர் கோட்டம் என்னும் அழகிய கோட்டத்தை 133 அதிகாரங்களையும் அதில் எழுதிவைத்து உருவாக்கினார் டாக்டர் கலைஞர். திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில்தான் 1969இ-ல் தமிழ்ப் புத்தாண்டிற்கு மறுநாள், திருவள்ளுவர் நாள் என்னும் நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது முதல் தொடர்ச்சியாக திருக்குறளின் பெருமையைப் போற்றும் நாளாக அந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ‘படித்தவர்களின் பரணிக்கட்டில் இருந்த திருக்குறளை பாமரர்களின் கைகளில் கொண்டு வந்து சேர்த்த இயக்கம்‘ திராவிட இயக்கம். திருக்குறளை அறிந்த அயல்நாட்டவர்கள் அதனைக் கொண்டாடினார்கள். ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய், திருக்குறளின் கருத்தால் ஈர்க்கப்பட்டு, காந்தியாருக்கு கடிதம் எழுதினார். அது முதல் காந்தியாரும் திருக்குறளைப் படிக்க ஆரம்பித்தார். திருக்குறளை அதனுடைய மூல மொழியில் கற்பதற்காகவே தமிழைக் காந்தியடிகள் படிக்க ஆரம்பித்தார். இப்படி பல பெருமைகள் உள்ள திருக்குறளை தந்தை பெரியார் புகழ்ந்தமைக்கு காரணம், அதன் அறக் கருத்துக்கள் மட்டுமல்ல, பொருள் கருத்துகள் மட்டுமல்ல, இன்பத்துப் பால் கருத்துக்கள் மட்டுமல்ல, இவற்றிற்கு எல்லாம் மேலாக திருக்குறள் அக்காலத்தில் எழுந்த ‘ஆரிய எதிர்ப்பு நூல்’ என்பதனால் நான் ஆதரிக்கிறேன், பரப்புகிறேன் என்று அறிவித்தார்.

திருவள்ளுவர் நாள் என்பது வெறுமனே ஒரு புலவரைப் போற்றும் நாளன்று. நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் நாள்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்னும் குறளை நாம் மனதிலே பதிப்புத்துக் கொள்வது மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லும் நாள். பெரிய புராணத்தையும், கம்ப ராமாயணத்தையும் புகழ்ந்து கொண்டு, திருக்குறளை மறைத்து வைத்தவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்ட நாள். தமிழர்களின் இல்லங்களிலே இருக்க வேண்டிய நூல் கீதை அல்ல, திருக்குறளே என்பதனை மத நோய் வாய்ப்பட்ட மனிதர்களுக்கும் தெளிவுபடுத்தும் நாள்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனைகளில் சாக்ரடீஸ் பற்றி எழுதும்போது, “அறிவைத் தேடுவது அனைத்திலும் முக்கியமானது – நாம் சுவாசிக்கும் உயிர்க் காற்றைப்போல; எனவே, அறிவுக்கே முன்னிடம் தாருங்கள்….. எதையும், எதற்கு என்று ஆராயாத வாழ்க்கை, வாழத் தகுதியற்ற வாழ்க்கையேயாகும்“ என்று குறிப்பிடுவார். நாம் தமிழ்ப் புத்தாண்டில் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி “எதையும் ஏன், எதற்கு, எப்படி? என்று ஆராயும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்வோம். மற்றவர்களும் அப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிகாட்டிட உறுதிகொள்வோம்“ என்பதாக இருக்கட்டும். அப்போதுதான் நமது இனத்தின் பகைவர்கள் யார், பகைவர்களின் ஆயுதங்கள் எவையெவை, அவற்றை வெல்வதற்கான கருத்து ஆயுதங்கள் எவையெவை எனத் தெளிவு பிறக்கும். வெறுமனே பழமையைப் பாராட்டுவதில்லை, பழமையில் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொண்டு புதுமை நோக்கி நடக்கும் புத்தாண்டாய் தமிழ்ப் புத்தாண்டு மலரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *